உடன்பிறந்த உணர்வு, மற்றும் வரவேற்றலின் இடமாக இதயம் மாற
வட ஆப்ரிக்காவின் பாலைநிலத்தில் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில்
துன்பங்களை அனுபவித்துவரும் புலம்பெயர்ந்தோரை காப்பாற்ற உலகத் தலைவர்கள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 23, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் இந்த விண்ணப்பத்தை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆப்ரிக்காவின் வடபகுதியில் பல ஆயிரக்கணக்கான குடிபெயர்ந்தோர் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.
பல வாரங்களாக ஆப்ரிக்காவின் வடபகுதி பாலைவனத்தில் ஆயிரக்கணக்கான குடியேற்றதாரர்கள் கைவிடப்பட்ட நிலையில் வாழ்வதாகக் கூறிய திருத்தந்தை, இவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்க ஐரோப்பிய மற்றும் ஆப்ரிக்க அரசுகளின் தலைவர்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் விடுத்தார்.
மத்தியதரைக்கடல் மீண்டும் ஒருமுறை மரணம் மற்றும் மனிதாபிமானமற்ற நிலையின் அரங்காக மாறவேண்டாம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை, உடன்பிறந்த உணர்வு நிலை, ஒருமைப்பாடு மற்றும் இன்முக வரவேற்றலின் இடங்களாக இதயங்கள் மாறட்டும் என இறைவனை வேண்டுவதாகவும் கூறினார்.
காலநிலை மாற்றத்தால் உலகின் பல்வேறு பகுதிகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருப்பதும், சிலபகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு, குறிப்பாக தென் கொரியாவில் பெருவெள்ளத்தால் பாதிப்புக்கள் ஏறபட்டுள்ளது குறித்தும் கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.