இன்றைய புனிதர் †

( ஜூலை 21 )

✠ பிரிந்திசி நகர் புனித லாரன்ஸ் ✠

(St. Lawrence of Brindisi)

கத்தோலிக்கக் குரு/ மறைவல்லுநர்/

கப்புச்சின் சபைத் துறவி :

பிறப்பு : ஜூலை 22, 1559

பிரிந்திசி ( Brindisi ), நேப்பிள்ஸ் அரசு

இறப்பு : ஜூலை 22, 1619

லிஸ்பன், போர்ச்சுகல்

( Lisbon, Portugal )

ஏற்கும் சபை/ சமயம் : கத்தோலிக்கம்

அருளாளர் பட்டம் : 1 ஜூன் 1783

திருத்தந்தை ஆறாம் பயஸ்

புனிதர் பட்டம் : 8 டிசம்பர் 1881

திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ

நினைவுத் திருவிழா : ஜூலை 21

பாதுகாவல் : பிரிந்திசி

புனித லாரன்ஸின் இயற்பெயர் கியுலியோ செசாரெ ரூசோ ஆகும். இவர் ஒரு கத்தோலிக்கக் குருவும், கப்புச்சின் சபைத் துறவியும் ஆவார்.

இவர், வெனிஸ் நகர வணிகர் குடும்பத்தில், பிரிந்திசி நேபிள்ஸ் மாகாணத்தில் பிறந்தவர். சிறுவன் ரூசோ, ஒழுக்கமான, பக்தியான வாழ்வால் பிரிந்திசி நகர மக்களால் சின்ன சம்மனசு என்று அழைக்கப்பட்டார். சிறு வயதிலே பெற்றோர்களை இழந்ததால் தாய்மாமன் உதவியால் வளர்ந்தார். வெனிஸ் நகரில் உள்ள புனித மார்க் கல்லூரி கல்வி பயின்ற பின்னர் “சகோதரர் இலரான்ஸ்” என்னும் பெயரோடு வெரோனாவில் உள்ள கப்புச்சின் சபையில் இணைந்தார். இவர் பதுவை நகர பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்றார். இவர் ஒரு திறமையான மொழியியலாளர் ஆவார். இவர் சரளமாக பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் செமித்திய மொழிகளை பேசுவார். 1582ல் குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட இலாரன்ஸ், ஒரு அறிவு செறிந்த குருவாக திகழ்ந்தார்.

1596ல் உரோமில் உள்ள கப்புச்சின் சபைக்கு தள தலைவராக நியமிக்கப்பட்டார்; திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் இவரை அந்த நகரத்தில் உள்ள யூதர்களிடம் மறைபணியாற்ற அனுப்பினார். 1599ல் தொடங்கி, லாரன்ஸ் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் பல கப்புசின் மடங்களை நிறுவுவதன் மூலம் கத்தோலிக்க மறுமலர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.

1601ல் புனித ரோமானிய பேரரசர் இரண்டாம் ருடால்பின் படைக்கு ஆன்ம குருவாக பணியாற்றினார். அப்போது ஓட்டோமேன் டர்க்குகள் எதிராக போராட உதவ பிலிப் இம்மானுவலை அறிவுறுத்தினார் (Philippe Emmanuel). உதுமானியப் பேரரசிடமிருந்து (Székesfehérvár) என்னும் இடத்தை கைப்பற்ற நடந்த போரின் போது, சிலுவையை மட்டுமே கையில் கொண்டு படைக்கு முன் சென்றார்.

1602ல் இவர் கப்புச்சின் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1605ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதனை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் திருப்பீட தூதுவராக பவேரியாவுக்கு பணியாற்ற அனுப்பப்பட்டார். பிறகு ஸ்பெயின் நாட்டின் திருப்பீட தூதுவராக பணியாற்றியபின்னர், இவர் 1618ல் ஓய்வுபெற்றார். 1619ல் ஸ்பெயின் அரசருக்கு நேபிள்ஸ் வைஸ்ராயாயின் நடவடிக்கைகள் குறித்த ஒரு சிறப்பு தூதராக இவர் அனுப்பப்பட்டார். இந்த பணியை முடித்த பிறகு, லிஸ்பனில் தனது பிறந்த நாள் அன்று இறந்தார்.

இவருக்கு 1783ல் திருத்தந்தை ஆறாம் பயஸ் அவர்களால் அருளாளர் பட்டமும், 1881ல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவினால், புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. 1959ல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால் இவர் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டார்.

இவரின் நினைவுத் திருவிழா நாள் ஜூலை 21.

செபம் :

மகிமையின் தந்தையே எம் இறைவா!

ஞானத்தையும், அறிவையும் பெற்று, இளம் வயதிலிருந்தே தன்னை மறைபரப்புப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ளும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, உம் பணி இவ்வுலகில் மேலும் சிறப்படைய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். மகிமை, கனம், துதி உமக்கே, ஆமென் †

Comments are closed.