ஜூலை 10 : நற்செய்தி வாசகம்
என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26
இயேசு தம் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்” என்றார். இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர்.
அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். ஏனெனில் அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.
இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார். அவர், “விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர் பெற்று எழுந்தாள். இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————————
“உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது”
பொதுக்காலம் பதினான்காம் வாரம் திங்கட்கிழமை
I தொடக்கநூல் 28: 10-22a
II மத்தேயு 9: 18-26
“உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது”
நம்பிக்கையோடு நற்செய்திப் பணி:
பர்மா மக்களுக்கு முதன்முதலில் கடவுளின் வார்த்தையைக் கொண்டு சென்றவர் மறைப்பணியாளர் ஜூட்சன் (Dr. Judson). இவர் அங்கு மறைப்பணியோடு மருத்துவப் பணியையும் செய்து, ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
இவர் பர்மாவிற்குச் சென்று, அங்குள்ள மக்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவித்துக்கொண்டிருக்கையில், ஒற்றர் எனக் கருதப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் கை, கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது இவரோடு இருந்த கைதி ஒருவர், இவரைப் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டு, “இந்நாட்டு மக்களுக்கு நற்செய்தி அற்விக்க வந்து, இப்படிக் கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டு இருக்கின்றீர்களே! இனிமேலும் உங்களால் இங்கு நற்செய்தி அறிவிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றதா?” என்று சற்றுக் கிண்டலாகக் கேட்டார்.
இதற்கு ஜூட்சன் அவரிடம், “கடவுளின் வாக்குறுதிகள் எந்தளவுக்கு நம்பிக்கைக்குரியவையோ, அந்தளவுக்கு நான் இந்நாட்டு மக்களுக்கு நற்செய்தி அறிவித்துப் பலரையும் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளவைக்க வேண்டும் என்ற என் இலட்சியமும் நம்பிக்கைக்குரியது. நிச்சயம் நான் இந்தச் சிறையிலிருந்து விடுதலையாகி, மக்களுக்குக் நற்செய்தி அறிவிப்பேன். அந்த நம்பிக்கை எனக்கிருக்கின்றது” என்று நம்பிக்கையோடு சொன்னார். இது நடந்து ஒருசில மாதங்கள் கழித்து, ஜூட்சன் சிறையிலிருந்து விடுதலையாகி, மக்கள் நடுவில் சென்று, கடவுளின் வார்த்தையை அறிவித்து, பலரையும் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளச்செய்தார்.
Comments are closed.