இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் நற்செயல்கள் செய்து பிறருக்கு ஒளியாக விளங்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 119:132-ல்
“உம் பெயரின்மீது பற்றுக் கொண்டோருக்கு நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல், என் பக்கம் திரும்பி எனக்கும் இரங்கும்!” என கூறப்பட்டுள்ளது.
துன்ப காலக்கட்டத்தில் இருப்போரின் பக்கம் இறைவன் திரும்பி அவரது அளவற்ற இரக்கப் பெருக்கத்தினால் அவர்கள் மீது அவரது முக ஒளியை வீசச் செய்ய இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
எண்ணற்ற புதுமைகளை தமது வாழ்வில் நிகழ்த்திக் காட்டியவரும், இன்றைய புனிதருமான பதுவை புனித அந்தோனியாரிடமிருந்து அவரது புதுமைகளுக்குக் காரணமான அந்த ஆழமான விசுவாசத்தை நாமும் கைக்கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இந்த ஜூன் மாதம் முழுவதும் நம் குடும்பத்தையும், நமது தேசத்தையும் இயேசுவின் திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுத்து செபிப்போம். இம்மாதம் முழுவதும் நம் இறைவன் நம்மைக் காத்து வழிநடத்திட இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
Comments are closed.