பொதுக் காலத்தின் ஒன்பதாம் வாரம்

வெள்ளிக்கிழமை

ஆண்டவரைப் போற்றிடு”

ஏன் ஆண்டவரைப் போற்றவேண்டும்?

கடவுள் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்கின்றார். அவற்றிற்காக நாம் அவரைப் போற்றிப் புகழ வேண்டும். இத்தகைய அழைப்பினை இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 146 நமக்கு விடுக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் தோபியா பாதுகாப்பாக, அதுவும் தன் மனைவி சாராவோடு வந்ததைப் பார்த்து, தோபித்து கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார். முன்னதாக, பறவையின் எச்சம் தோபித்துவின் கண்களில் பட, அவர் பார்வையை இழந்திருந்தார். அவர் தன் மகன் கொண்டு வந்த மீனின் பித்தப்பையினால் மீண்டுமாகப் பார்வை பெறுகின்றார். இதற்காகவும் அவர் ஆண்டவரைப் போற்றிப் புகழ்கின்றார்.

கடவுள் நம் ஒவ்வொருவருடைய வாழ்வில் செய்த நன்மைகளுக்காக மட்டுமல்லாமல், கடவுள் எல்லாரையும் விடவும் மிகப்பெரியவர் என்பதற்காகவும் அவரைப் போற்றவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது இன்றைய நற்செய்தி வாசகம். மெசியா தாவீதின் மகன் என்று அழைக்கப்பட்டார். இதற்காக மெசியா தாவீதைவிடச் சிறியவர் அல்லர். மாறாக, அந்தத் தாவீதிற்கே அவர் தலைவர், ஆண்டவர் என்று விளக்கம் தருகின்றார் இயேசு.

ஆகையால், கடவுள் எல்லாம் வல்லவர் என்பதாலும், அவர் நமக்குச் செய்த நன்மைகளுக்காகவும் அவரைப் போற்றிப் புகழ்வோம்.

மன்னரும் மந்திரியும்

வேட்டையாடுவது என்றால் அந்த மன்னருக்குக் கொள்ளைப் பிரியம். ஒருநாள் தன் மந்திரி மற்றும் பரிவாரங்களுடன் அவர் வேட்டையாடச் சென்றார். வழியில் ஒரு மான் தென்பட்டது. உடனே மன்னர் தன்னிடம் இருந்த அம்பை எடுத்து, மானை நோக்கி எய்தபோது, அது தவறுதலாக அவரது இடது கையிலிருந்த கட்டை விரலைப் பதம் பார்த்தது.

அவர் வலியால் துடித்தபோது, பக்கத்தில் இருந்த மந்திரி, “ஆண்டவரைப் போற்றிடுங்கள்” என்றார். மன்னருக்குச் சினம் தாங்க முடியவில்லை. அதனால் அவர் மந்திரியைப் பிடித்துச் சிறையில் தள்ளினார்.

சில நாள்கள் வேட்டைக்குச் செல்லாமல் அரண்மனையிலேயே இருந்த மன்னர், மீண்டுமாக வேட்டைக்குக் கிளம்பிப் போனார். அவர் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது தனித்து விடப்பட்டார். அப்போது அங்கு வந்த ஒரு கூட்டம் அவரைப் பிடித்துக் கொண்டு போய்த் தங்கள் தெய்வத்திற்குப் பலி கொடுக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தது. தற்செயலாக அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் மன்னரின் இடது கையில் கட்டை விரல் இல்லாததைக் கண்டு, “குறைபாடோடு இருக்கும் இவனைப் பலி கொடுத்தால் நமக்குத்தான் பாவம் வந்து சேரும்” என்று மற்றவர்களிடம் சொல்ல, அவர்கள் அவரை விடுவித்தார்கள்.

இதனால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அரண்மனைக்குத் திரும்பி வந்த மன்னர் நடந்ததையெல்லாம் மந்திரியிடம் சொல்லி, “தெரியாமல் உன்னைச் சிறையில் அடைத்து விட்டேன்” என்று தவற்றிற்கு மன்னிப்புக் கேட்டார். அதற்கு மந்திரி, “ஒருவேளை நீங்கள் மட்டும் என்னைச் சிறையில் அடைக்காவிட்டால், அவர்கள் என்னைப் பலி கொடுத்திருப்பார்கள். அதனால் ஆண்டவரைப் போற்றிடுங்கள்” என்றார்.

ஆண்டவரைப் போற்ற வேண்டும். ஏனெனில், அவர் நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்காத நன்மைகளைச் செய்கின்றார்.

Comments are closed.