குடும்ப வேர்கள் என்னும் கொடைகள் – திருத்தந்தை பிரான்சிஸ்

குடும்ப வேர்கள் என்னும் கலாச்சாரப் பாரம்பரியத்தை எப்போதும் கொடையாக வைத்துக்கொள்ளுங்கள் என்றும், அவற்றை கேடயமாகவோ பாதுகாப்பு அரண்களாகவோ மாற்றுவதற்கு அல்ல, மாறாக பகிர்ந்து கொள்வதற்கான செல்வமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 3 சனிக்கிழமை தூய பேதுரு பெருங்கோவிலில் இத்தாலியின் Sotto il Monte பகுதியிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் ஏறக்குறைய 1000  பேரை சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Pacem in terris என்னும் சுற்றுமடல் வெளியிடப்பட்டதன் 60ஆம் ஆண்டு, திருத்தந்தை 23ஆம் யோவானின் விண்ணக பிறப்பு, திருத்தந்தை ஆறாம் பவுல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ஆகியவற்றையும் நினைவுகூர்ந்தார்.

இத்தாலியின் பெர்கமோ பிரேசியா ஆகிய பகுதிகளில் பிறந்து திருத்தந்தையர்களாகப் பணியாற்றி மறைந்த, புனிதர்கள் விட்டுச்சென்ற புனித பாதைகள், கலாச்சாரங்கள் ஆகியவற்றினை நிலத்தின் வேர்களாக பாதுகாத்து செயல்படுத்த அம்மக்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நீதி, அன்பு, உண்மை, சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையிலான அமைதியின் மதிப்பானது தனிநபர்கள் மற்றும் மக்களின் மாண்பின் அடிப்படையில் பெர்காமோ கிராமப்புறங்களில் திருத்தந்தை 23ஆம் யோவான் கற்றுக்கொண்ட மதிப்புகள் என்றும் இவற்றையே பிரேசியாவை சார்ந்த திருத்தந்தை புனித ஆறாம் பவுலும் வலியுறுத்தினார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெர்கமோ மற்றும் பிரேசியா, 2023 ஆம் ஆண்டிற்கான இத்தாலிய கலாச்சாரத் தலைநகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் கற்பித்தபடி, உண்மையான கலாச்சாரம் ஒன்றுபடுகிறது, உரையாடல், உதவி, அறிவின் ஆழம், இதயத்தை விரிவுபடுத்துதல், உண்மையான உடன்பிறந்த உறவு ஆகியவற்றினால் உலகளாவிய மனித சமூகம் வழிநடத்தப்படுகின்றது என்றும் எடுத்துரைத்தார்.

கலாச்சாரம் என்பது மனிதன், சமுதாயம், படைப்பின் உண்மை மற்றும் நன்மையை அன்பு செய்வதாகும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு திருத்தந்தையர்கள் பிறந்த ஊரில் வாழும் மக்கள் இல்லங்களிலும், தலத்திருஅவைகளிலும் அதனைத் தொடர்ந்து வளர்த்தெடுக்கவும் வலியுறுத்தினார்.

Comments are closed.