பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரம்

சனிக்கிழமை

I திருத்தூதர் பணிகள் 18: 23-28

திருப்பாடல் 47: 1-2, 7-8, 9 (7a)

II யோவான் 16: 23b-28

“அனைவரையும் உறுதிப்படுத்தினார்”

நம்பிக்கையில் உறுதிப்படுத்து

கிறிஸ்தவ வாழ்க்கை பல்வேறு போராட்டங்களும் துன்பங்களும் சவால்களும் நிறைந்தவை. இதில் ஒருசிலர் துன்பங்களை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் சோர்ந்து விடுவதுண்டு. இத்தகையோரை நம்பிக்கையில் உறுதிப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமையாகும்.

கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்கக் காலகட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பலவிதமான எதிர்ப்புகள் வந்தன. இதனால் ஒருசிலர் தங்கள் நம்பிக்கையிலிருந்து விலகினார்கள். இவர்களையெல்லாம் தேற்றி, நம்பிக்கையில் உறுதிப்படுத்தும் பணியைச் செய்தார் பவுல். இதைப் பற்றி இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.

கலாத்தியா, பிரிகியாப் பகுதிக்குச் செல்லும் பவுல், அங்கிருந்தவர்களையெல்லாம் நம்பிக்கையில் உறுதிப்படுத்துகின்றார். இதனால் அவர் வழியாகப் பலரும் இயேசுவே மெசியா என்று சான்று பகர்கின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் சீடரை நம்பிக்கையில் உறுதிப்படுத்துவதைப் பற்றி வாசிக்கின்றோம். தான் இவ்வுலகைவிட்டுப் பிரிந்து செல்வதை நினைத்துக் கலங்கிய சீடர்களிடம் இயேசு, “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்” என்ற வார்த்தைகளால் அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்துகின்றார். இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 47, நம்மை நம்பிக்கையில் உறுதிப்படுத்தும் இயேசு எத்தகையவர் என்பதை எடுத்துரைக்கின்றது. கடவுளே அனைத்து உலகின் வேந்தர் நீரே என்று சொல்லும் திருப்பாடல் ஆசிரியர். அவரைப் போற்றிப் புகழ நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

ஆகையால், நம்மை நம்பிக்கையில் உறுதிப்படுத்தும் அனைத்துலகின் வேந்தரான இயேசுவைப் போற்றிப் புகழ்வோம். மற்றவரையும் நாம் நம்பிக்கையில் உறுதிப்படுத்துவோம்.

உறுதிப்படுத்து; உறுதிப்படுத்தப்படுவாய்

யூத இனத்தின்மீது கொண்ட வெறுப்பால் அந்த இனத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களை வதைமுகாமில் அடைத்து வைத்துக் கொன்றவன் ஹிட்லர். அவனால் வதைமுகாமல் அடைத்து வைக்கப்பட்டு, பலவிதமாகச் சித்திரவதை செய்யப்பட்டவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விக்டர் பிராங்கிள் என்ற மருத்துவர்.

இவர் வதைமுகாமில் இருந்த சமயத்தில் பலவிதமான சித்திரவதைகளுக்கு உள்ளானபோதும், இவரும் இவரோடு இருந்த ஒருசிலரும் மிகவும் பலவீனமாக இருந்தவர்களுக்குச் சிகிச்சையளித்து வந்தார்கள். இதைப் பற்றித் தான் எழுதிய The Man’s search for Meaning என்ற நூலில் இவர் குறிப்பிடும்போது, “பலவீனமாக இருந்தவர்களுக்கு நாங்கள் சிகிச்சை அளித்ததால், வலிமையடைந்தோம்.”

விக்டர் பிராங்கிள் வலுவின்றி இருந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்ததால் வலுவடைந்தார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் உறுதியற்று இருந்தவர்களுக்கு அவர் உறுதி அளித்ததால், அவரும் உறுதியடைந்தார். எனில், நாமும் பவுலைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று மற்றவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தும்போது, நாமும் உறுதியடைவோம்.

Comments are closed.