ஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம் ஆடுகளுக்கு வாயில் நானே

ஆடுகளுக்கு வாயில் நானே.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10

அக்காலத்தில்

இயேசு கூறியது: ‘‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்குமுன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின்தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.”

இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

மீண்டும் இயேசு கூறியது: ‘‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

——————————————————————–

ஆன்மாக்களின் ஆயர் இயேசு

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு

(திப 2: 14a, 36-41; 1 பேது 2: 20b-25; யோவா 10: 1-10)

ஆன்மாக்களின் ஆயர் இயேசு

ஓவியர் ஆயர் ஆனார்

பிரபல ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் ஓவியங்களைத் தத்ரூபமாக வரையக் கூடியவர்.

ஒருநாள் அவர் ஒரு பெண்மணி தன் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு, புயற்காற்றில் தத்தளிப்பது மாதிரி ஓவியம் வரைந்து கொண்டிருந்தார். அவர் அந்த ஓவியத்தை வரைய வரைய அவருக்குள்ளே இப்படியோர் எண்ணம் தோன்றியது: “நாம் இப்படி மனிதர்கள் புயலில் தத்தளிப்பது மாதிரி ஓவியம் வரைவதற்குப் பதில், வாழ்க்கையில் தத்தளித்துக் கொண்டிக்கும் மனிதர்களை மீட்பதற்கு அவர்களுக்கு ஏன் நற்செய்தியை அறிவிக்கக் கூடாது?”

இந்த எண்ணம் அவருக்குள் தோன்றியதும் அவர் ஓவியம் வரைவதை விட்டுவிட்டு, ஆப்ரிக்காவிற்குப் புறப்பட்டுச் சென்று, அங்கே நற்செய்தியை அறிவித்து, பின்னாளில் ஓர் ஆயரானார்.

ஆம், இந்த நிகழ்வில் வரும் ஓவியர் ஆன்மாக்களை மீட்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததும், தான் செய்து வந்த வேலையை விட்டுவிட்டு நற்செய்தி அறிவிக்கப் புறப்பட்டுச் சென்றார். பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ‘ஆண்டவர் இயேசு ஆன்மாக்களின் ஆயர்’ என்ற சிந்தனையைத் தருகின்றது. ஆன்மாக்களின் ஆயரான இயேசு மற்ற ஆயர்களிடமிருந்து எப்படி வித்தியாசமானவர்? அவரது குரலை நாம் ஏன் கேட்டு நடக்க வேண்டும்? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

வாயிலாக இருப்பவர்

வழிகாட்டி என்று தங்களை அழைத்துக்கொண்டு மக்களைப் புதை குழியில் தள்ளுவோர் இன்று ஏராளமானோர் பெருகிவிட்டார்கள். இதுபோன்ற தவறான வழிகாட்டிகளைப் புறந்தள்ளிவிட்டு, நல்ல வழிகாட்டிகளை நாம் இனங்கண்டு கொள்வது மிகவும் இன்றியமையாதது.

இஸ்ரயேலிலும் இதுபோன்ற தவறான வழிகாட்டிகள் பலர் இருந்தார்கள். இவர்கள் மக்களுக்கு நல்வழி காட்டுவதற்குப் பதில் அவர்களைத் தவறான பாதையில் வழி நடத்தினார்கள். இன்னும் சொல்லப் போனால், வேலியே பயிரை மேய்வது போல், இவர்கள் மந்தையை மேய்க்காமல், அதை மேய்ந்தார்கள் (எசே 34:8). இதனால்தான் இயேசு அவர்களைக் குறித்துச் சொல்லும்போது, “எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே” (யோவா 10:8) என்கிறார். இப்படிச் சொல்லிவிட்டு, “நானே வாயில்” என்கின்றார் அவர்.

நானே வாயில் என்று இயேசு சொல்வது, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி, எவரும் தந்தையிடம் வருவதில்லை” (யோவா 14:6) என்ற அவரின் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஒருவர் இயேசுவின் வழியாய்த்தான் தந்தையிடம் செல்ல முடியும் என்றால், அவர் இயேசுவின் குரல் கேட்பதும், அவரைப் பின்தொடர்வதும் இன்றியமையாதவையாக இருக்கின்றன. இயேசு வழியாக மட்டுமில்லாமல், ஒளியாகவும் இருக்கின்றார் (யோவா 8:12). அதனால் அவரைப் பின்தொடர்கின்ற யாரும் இடறிவிழுவதற்கு வாய்ப்பே இல்லை.

வாழ்வளிப்பவர்

போலிகளைப் பின்தொடராமல், நல்ல ஆயாராம் இயேசு கிறிஸ்துவைப் பின்தொடர்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி பார்த்தோம். இவரை நாம் ஏன் பின்தொடர வேண்டும் என்ற கேள்வி நமக்கு எழலாம். இதற்கான பதிலை இன்றைய இரண்டாம் வாசகத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.

இஸ்ரயேலில் இயேசுவுக்கு முன்பாக இருந்த ஆயர்கள் திருடர்களும் கொள்ளையர்களுமாய், மந்தையையே மேய்ந்தவர்களாய் இருந்த வேளையில், கிறிஸ்து கிறிஸ்து மந்தைக்காக – மக்களுக்காகத் துன்பப்படும் ஆன்மாக்களின் ஆயராக இருந்தார். இதைப் பற்றிப் பேதுரு இன்றைய இரண்டாம் வாசகத்தில் குறிப்பிடும்போது, “நன்மை செய்வதும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும். கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று, ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார்” என்பார்.

கிறிஸ்து நமக்காகத் துன்புற்றார் எனில், நாம் வாழ்வு பெறுவதற்காகத் துன்புற்றார். அதனால் அவரின் அடிச்சுவடுகளை நாம் பின்பற்றி நடந்தால், இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 23 இல் தாவீது சொல்வது போல் நமக்கு குறையேதும் இருக்காது. ஒரு சாதாரண ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்து, பின்னாளில் இஸ்ரயேலின் அரசனாக உயர்ந்த தாவீது, நல்ல ஆயாராம் ஆண்டவரின் வழி நடந்தார். அதனால் ஆண்டவர் அவரை எந்தவொரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

நாமும் நம்மை முழுமையாய் அறிந்திருக்கும், நமக்காக வாழ்வு தந்திருக்கும் நல்ல ஆயாராம் இயேசுவின் வழி நடந்தால், நமக்கு எந்தவொரு குறையும் இருக்காது.

மனம்மாறி, அவர் குரல் கேட்போம்

“நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம். கீழ்ப்படியாமல் இருந்தோம். நெறிதவறிச் சென்றோம். தீய நாட்டங்களுக்கும் பல்வகைச் சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம்” (தீத் 3:3) – இது புனித பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்தில் இடம்பெறும் வார்த்தைகள் ஆகும். ஒருவர் அறியாமையில் இருக்கும்போது அவர் எத்தகைய கேட்டினை வருவித்துக் கொள்கின்றார் என்பதைப் பவுலின் இவ்வார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

யூதர்களும் தங்கள் அறியாமையால்; அல்லது திருச்சட்டம் அறியாதவர் மூலம் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள்; ஆனால், கடவுள் அவரை மூன்றாம் நாளில் வெற்றி வீரராய் உயிர்த்தெழச் செய்தார். இதையெல்லாம் பேதுரு, பதினொருவருடன், பெந்தக்கோஸ்து நாளில் திரண்டிருந்த மக்களிடம் எடுத்துச் சொன்னபோது, அவர்கள் உள்ளம் குத்தப்பட்டவர்களாய், “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கின்றார்கள். அப்போது பேதுரு அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள்… இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்” என்கிறார். அவர்களும் அவ்வாறே செய்து திருமுழுக்குப் பெறுகின்றார்கள். இவ்வாறு அன்று மூவாயிரம் பேர் திருமுழுக்குப் பெறுகின்றார்கள்.

Comments are closed.