பாஸ்கா காலத்தின் மூன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை
பாஸ்கா காலத்தின் மூன்றாம் வாரம்
வெள்ளிக்கிழமை
(ஏப்ரல் 28)
திருப்பாடல் 117: 1, 2 (மாற்கு 16: 15)
II யோவான் 6: 52-59
மீண்டும் பார்வையடைவோம்
அறிவோம்; அறிவிப்போம்
இயேசு பேசிய ஒவ்வொரு சொல்லிலும் ஆழமான பொருள் இருந்தது; ஆனால், அவரது சீடர்களும் மக்களும் அதனை மேலோட்டமாகப் புரிந்துகொண்டார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை!
இன்றைய நற்செய்தியில் இயேசு, வாழ்வளிக்கும் உணவைப் பற்றிப் பேசுகின்றபோது, அவரது சீடர்கள், அதனை மேலோட்டமாகப் புரிந்துகொண்டு, “நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்று பேசிக்கொள்கின்றார்கள். அப்போதுதான் இயேசு அவர்களுக்கு அதற்குரிய விளக்கத்தைத் தருகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் பவுலின் அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். பவுல் ஒரு காலத்தில் கிறிஸ்துவைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் பார்வையின்றி இருந்தார். அவர் தமஸ்கு நகர் நோக்கிப் போகும் வழியில் இயேசு அவரைத் தடுத்தாட்கொண்டு, அவர் மீண்டுமாக்ப் பார்வை பெறச் செய்கின்றார். இதனால் அவர் மிகுந்த வல்லமையோடு பிறவினத்தாருக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தொடங்குகின்றார்.
இன்று நாம் பதிலுரைப்பாடலைப் பாடலாக, “உலங்கெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று பாடினோம். ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்குக் கொடுத்த இந்தக் கட்டளைக்கேற்பப் பவுல் உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் இயேசுவைப் பற்றிப் பிழையற அறிவித்தார்.
பவுலைப் போன்று இயேசுவே வாழ்வளிக்கும் உணவு என்பதை நாம் உணர்ந்வதர்களாய், அவரது வார்த்தையின்படி நடந்து, நிலைவாழ்வைப் பெறுவோம்.
நற்கருணையில் வீற்றிருக்கும் ஆண்டவர்
நர்சியா நகர்ப் புனித பெனடிக்ட்டின் ஊருக்கு அருகாமையில் உள்ளது காசியா (Cascia). இந்த ஊருக்கு ஒரு சிறப்பு உண்டு. அது என்னவெனில், இங்குதான் புனித ரீட்டாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
1330 ஆண்டு இங்கே பங்குப் பணியாளராகப் பணியாற்றிய அருள்பணியாளர் ஒருவர் சாகும் தறுவாயில் இருந்த ஒருவருக்கு நோயில் பூசுதல் என்ற அருளடையாளம் கொடுப்பதற்காகக் கிறிஸ்துவின் திருவுடலை – நற்கருணையை – அதற்குரிய பாத்திரத்தில் எடுத்துச் செல்லாமல், தான் சொல்லும் கட்டளை செபப் புத்தகத்தில் எடுத்துச் சென்றார்.
அவர் நோயாளரின் வீட்டிற்குச் சென்று, கட்டளை செபப் புத்தகத்தைத் திறந்து பார்த்தபோது, அதிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து அவர் வியந்து போனார். இயேசுவின் இரத்தம் தோய்ந்த அந்தக் கட்டளை செபப் புத்தகத்தின் பக்கங்கள் இன்று காசியா நகரில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
நற்கருணையில் இயேசு மெய்யாகவே இருக்கின்றார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. இயேசு நற்கருணையில் இருக்கும்போது, அவரை நம்பி ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் நாம் நடக்கும்போது வாழ்வடைக்கின்றோம்.
ஆன்றோரின் வார்த்தை
“நற்கருணை, இயேசு கிறிஸ்து மானிடர்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு” – மரிய கொரற்றி.
Comments are closed.