பாஸ்கா காலத்தின் இரண்டாம் வாரம்
வெள்ளிக்கிழமை
(ஏப்ரல் 21)
உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர்
இயேசுவின் வழியில்
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த அருமடையாளத்திற்கு ஒரு சிறப்பிருக்கின்றது. அது என்னவெனில், நான்கு நற்செய்தி நூல்களிலும் இடம்பெறும் ஓர் அருமடையாளம் இதுதான் (மத் 14: 13-23; மாற் 6: 30-46; லூக் 9: 10-17).
மக்கள் தன்னைத் தேடிவருவது தன்னுடைய போதனையைக் கேட்க அல்ல, தங்களுடைய நோய் நீங்கவும், வயிறார உண்ணவுமே என்பது இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எனினும் இயேசு அவர்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்கு உணவளிக்கின்றார். இயேசு செய்த இந்த அருமடையாளம், ‘படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்” (எசா 25:6) என்ற வார்த்தைகளை நினைவுபடுகின்றன. அத்தோடு அவர் வாழ்வுதரும் உணவைப் பற்றிப் பேசுவதற்கு முன்னடையாளமாக இருக்கின்றது.
இயேசு அப்பங்களைப் பலுகச் செய்ததன் மூலம் தன்னை மெசியா என்பதை உலகிற்கு வெளிப்படுத்துகின்றார். மக்களோ அவரைவெறும் அரசியல் மெசியாவாக மட்டும் புரிந்துகொண்டு, அவரை அரசராக்க முயற்சி செய்தார்கள். அதனால் அவர் தனிமையாக ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
இஸ்ரயேலில் அவ்வப்போது ஒருசிலர் தோன்றி தங்களை மெசியா என்று அறிவித்துக் கொண்டார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் தெயுதாவும் யூதாயும். இவர்கள் காலப்போக்கில் ஒன்றுமில்லாமல் போனார்கள்; ஆனால், இயேசு உண்மையாகவே மெசியா; அவர் மனிதரிடமிருந்து அல்ல, கடவுளிடமிருந்து வந்தவர். இந்த உண்மையை தெரியாமல், யூதர்களின் தலைமைச் சங்கத்தினர் அவரின் சீடர்களை நையப்புடைத்து, இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி விடுகின்றனர். அவர்களோ இன்னும் துணிச்சலாக இயேசுவைப் பற்றி அறிவிக்கின்றார்கள். இதைப் பற்றி இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்.
இயேசுவே மெசியா. அவரை நம்பி ஏற்றுக்கொள்பவர் வாழ்வடைக்கின்றார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது, “ஆண்டவரின் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும்” என்கிறார். தாவேதுக்கு பல இடங்களிலிருந்தும் ஆபத்துகள் வந்தன. அத்தகைய சூழ்நிலையில் ஆண்டவரே தனக்குத் தஞ்சம் என்று அவர்மீது உண்மையான நம்பிக்கை வைத்து வாழ்ந்து, அவரது இல்லத்தில் எப்போதும் குடியிருக்க விருபினார்.
நாம் இயேசுவை, ஆண்டவரை நம்முடைய அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு சாதாரண மனிதராகப் பார்க்காமல் அவரை மெசியா என நம்பி ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் நடப்போம்; வறியோருக்கு இரக்கம் காட்டுவோம்.
முகமூடி அணிந்து உணவளிப்பவர்
கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிப் போனதால், அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் வறியவர்கள் உணவுக்கு வழியின்றி நிறையவே துன்பப்பட்டார்கள்.
இதையெல்லாம் பார்த்த சிலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டில் உணவு தயாரித்து, அதைப் பைகளில் எடுத்துக்கொண்டு, ஏழை எளியவரின் வீட்டிற்குச் சென்று கொடுத்தார். இத்தகையதொரு செயலை அவர் பேட்மேன் உடையணிந்து கொண்டு செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஒருசிலர் இவரது செயலைப் பார்த்துவிட்டு, “நீங்கள் ஏன் பேட்மேன் உடை அணிந்து கொண்டு மக்களுக்கு உணவளிக்கின்றீர்கள்?” என்று கேட்டபோது, இவர், “உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பது என்னுடைய முதன்மையான நோக்கம். அதே நேரத்தில் நான் செய்யும் இந்தச் சேவை என்னை விளம்பரப்படுத்திக் கொள்வதாக இருக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்கின்றேன்” என்றார்.
Comments are closed.