பாஸ்கா எண்கிழமைவியாழக்கிழமை மனக் கண்களைத் திறந்த இயேசு

மனக் கண்களைத் திறந்த இயேசு

அறியாமையை விலக்கி, அறிவொளி பெறுவோம்

அறியாமை என்பது மிகக் கொடியது. அது ஒருவரை அழிவுக்கு இட்டுச் செல்லும். இதனால்தான் கடவுள் இறைவாக்கினர் ஓசேயா வழியாக, “அறிவின்மையால், என் மக்கள் அழிகின்றார்கள்” (ஓசே 4:6) என்கிறார்.

ஆண்டவராகிய இயேசு யூதர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்வு கொடுக்க வந்தார். அவர்களோ திருச்சட்டம் அறியாதவர்கள் வழியாக அவரைச் சிலுவையில் அறைந்து கொன்று போட்டார்கள். யூதர்கள்தான் அறியாமையில் இப்படியொரு செயலைச் செய்துவிட்டார்கள் என்றால், இயேசுவோடு மூன்று ஆண்டுகள் உடனிருந்த சீடர்கள்கூட அவர் ஏன் சிலுவையில் அறைந்து கொல்லப்படவேண்டும் என்று அறியாதவர்களாக இருந்தார்கள். இத்தனைக்கும் இயேசு தம் பாடுகளை அவர்களுக்குப் பலமுறை முன்னறிவித்திருந்தும்கூட!

இந்நிலையில்தான் உயிர்த்த ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றி, அவர்களது மனக் கண்களைத் திறக்கின்றார்; தான் இறந்து உயிர்த்தெழுவது பற்றி மறைநூலில் கூறப்பட்டிருப்பதைக் குறித்து, அவர்களுக்கு விளக்கிக் கூறுகின்றார். இதனால் அவர்கள் அறிவொளி பெறுகின்றார்கள்.

இதற்குப் பிறகு அறிவு தெளிந்தவர்களாய் உயிர்த்த ஆண்டவரைப் பற்றி அவர்கள் சான்று பகற்கின்றார்கள். இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு, பிறவியிலேயே கால் ஊனமுற்ற மனிதரை இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி, எழுந்து நடக்கச் செய்த பிறகு, திரண்டு வந்த மக்களைப் பார்த்து, “நீங்கள் அனைவரும் தீய செயல்களை விட்டுவிட்டு ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து, முதன்முதலில் உங்களிடம் அனுப்பினார்” என்கிறார். இவ்வாறு சொல்லி, அவர்களின் மனக் கண்களைத் திறக்கின்றார் பேதுரு.

கடவுள் அறியாமையில் இருக்கும் நமது மனக் கண்ணைத் திறக்கின்றார் எனில், நாம் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 8 ஒரு புகழ்ப்பாடலாகும். இப்பாடல், சாதாரண நிலையில் இருந்த மனிதரைப் படைப்பின் சிகரமாக உயர்த்தியதைக் குறித்துக் கடவுளுக்கு நன்றி செலுத்துவதாக இருக்கின்றது.

கடவுள் நம்மை மிகவும் உயர்த்தி இருக்கும்போது, நமது மனக் கண்ணைத் திறந்திருக்கும்போது அவரைப் போற்றிப் புகழ்வதுதான் நீதியானது. எனவே, நமது வாழ்வில் எத்தனையோ நன்மைகளைச் செய்த கடவுளை நாம் போற்றிப் புகழ்வோம், அவரது திருப்பெயரை உலகறிச் செய்வோம்.

மலையேறும் குழுவும் வழிகாட்டியும்

ஒருசில இளைஞர்கள் சேர்ந்து மலையேறுவதற்குத் திட்டமிட்டார்கள். மலையேறும்போது தங்களை வழிகாட்டுவதற்கு ஒரு நல்ல வழிகாட்டி இருந்தால், நன்றாக இருக்குமே என்று அவர்களுக்குத் தோன்றியதால், அவர்கள் ஒரு கைதேர்ந்த வழிகாட்டியைத் தங்களோடு கூட்டிக்கொண்டு மலையேறத் தொடங்கினார்கள்.

வழிகாட்டி முன் செல்ல, இளைஞர்கள் அவர் பின்னால் சென்றுகொண்டிருந்தார்கள். மேலே ஏற ஏற காற்று மிகுதியாக இருந்தது. அதனால் அவர்கள் சற்று கவனமாகவே மலையேறினார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் போன பாதை முடிவுற்று, அதற்கு மேல் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாத அளவுக்கு இருந்தது. அதைப் பார்த்துவிட்டு இளைஞர்கள் வழிகாட்டியைப் பார்த்து, “எங்களை இப்படித் தவறாக வழிநடத்தி வந்துவிட்டீர்களே!” என்று புலம்பத் தொடங்கினார்கள்.

அப்போது வழிகாட்டி அவர்களைப் பார்த்து, “எதையும் தெரியாமல் பேசாதீர்கள். நான் போகிற பாதையில் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். உங்களைப் பத்திரமாக மலை உச்சிக்குக் கூட்டிக்கொண்டு சென்று, பத்திரமாக கீழே கொண்டு போய்ச் சேர்க்கின்றேன்” என்றார். பின்னர் அவர் அவர்களிடம் சொன்னபோன்றே தனக்குத் தெரிந்த ஒரு பாதை வழியாக மலை உச்சிக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு சென்று, பத்திரமாகக் கீழே இறக்கினார்.

இந்த நிகழ்வில் வரும் இளைஞர்களைப் போன்றுதான் பல நேரங்களில் நாம் எதுவும் தெரியாமல், அறியாமையில் இருக்கின்றோம். ஆனால், ஆண்டவர் இயேசு இதே நிகழ்வில் வரும் வழிகாட்டியைப் போன்று நமது மனக் கண்ணைத் திறந்து, நமக்கு வழிகாட்டக் காத்திருக்கின்றார். அவரிடம் நம்மை ஒப்படைத்து, அவர் காட்டும் பாதையில் நாம் நடப்போம்.

ஆண்டவரின் வார்த்தை

Comments are closed.