தவக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு (05. 03. 2023)

துன்பமும் மாட்சியும்
நான் கால்பந்தாட்ட வீரனே இல்லை!
அமெரிக்கக் கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்று, அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர் ரோஜர் ஸ்டாபக் (Roger Staubach).
ஒரு சமயம் இவர் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது, கடுமையாகக் காயப்பட்டு, மிகவும் துன்புற வேண்டியதாயிற்று. அப்போது இவரைச் சந்தித்த செய்தியாளர் ஒருவர் இவரிடம், “நாட்டிற்காக விளையாடி இப்படிக் காயப்பட்டுத் துன்புறுகின்றீர்களே! இதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?” என்றார்.
“கால்பந்தாட்டம் ஆடும்போது காயம் படத்தான் செய்யும். காயம் படாவிட்டால், நான் கால்பந்தாட்ட வீரனே இல்லை!” என்று தீர்க்கமாய்ச் சொல்லி முடித்தார் ரோஜர் ஸ்டாபக்.
மிகப்பெரிய கால்பந்தாட்ட வீரரான ரோஜர் ஸ்டாபக் நம் ஒவ்வொருவருக்கும் சொல்லும் செய்தி இதுதான்: ஒரு நாட்டிற்கு அல்லது ஓர் அரசருக்குப் பணிபுரிகின்றபோது துன்பங்கள் வரத்தான் செய்யும். துன்பங்களைச் சந்திக்க வில்லை என்றால், நாம் அரசருக்கு உண்மையாய்ப் பணிபுரியவில்லை என்று பொருள்.
தவக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, அரசருக்கெல்லாம் அரசரான இயேசுவின் துன்பத்தில் பங்குகொள்ள வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
புறப்பட்டுச் செல்!
இன்று பலரும் தங்களுக்கென ஒரு பாதுகாப்பு வளையத்தை (Comfort Zone) உருவாக்கிக் கொண்டு, அதற்குள்ளாகவே ‘சொகுசாக’ வாழப் பழகிக் கொண்டார்கள். ஒருவேளை பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வர நேர்ந்தால், துன்புற நேரிட முடியோ? என்று, அவர்கள் கூண்டுக் கிளியாய் அதனுள் சிக்கிக்கொண்டு தவிக்கின்றார்கள். கடவுளின் மக்கள் அல்லது அவரது அடியார்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் வாழ அழைக்கப்பட்டவர்கள் அல்ல; மாறாகப் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வரவும், கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்து வாழவும் அழைக்கப் படுகின்றார்கள்.
தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்” என்கிறார். சொந்த நாட்டையும் இனத்தையும் வீட்டையும் விட்டுச் செல்வது எவ்வளவு கடினம்! இன்றைக்கு எத்தனையோ பேர் சொந்த நாட்டையும் இனத்தையும் வீட்டையும் விட்டுவிட்டு அன்னிய மண்ணில் அகதிகளாய் – ஏதிலிகளாய் – வாழ்கின்ற கொடுமையைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஆபிராமும் இத்தகைய வாழ்க்கையை வாழ ஆண்டவரால் அழைக்கப்படுகின்றார்.
ஆண்டவர் ஆபிராகாமை அழைத்தபோது காரான் (தொநூ 11:31) என்ற இடத்தில் அவர் இருந்தார். அங்கிருந்து அவர் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் செல்ல அழைக்கப்பட்டார். ஆண்டவர் இவ்வாறு சொன்னதற்கு ஆபிராம் அப்படியே கீழ்ப்படிந்து, கானான் நாட்டிற்கு நம்பிக்கையோடு புறப்பட்டுச் செல்கின்றார் (எபி 11:8). இதனால் ஆண்டவர் கூறியது போன்று ஆபிராம் பெரிய இனமாகி, எல்லாருக்கும் தந்தை ஆகின்றார். ஆசி பெறுகின்றார். ஆபிரகாம் என்ற சிறப்புப் பெயரைப் பெறுகின்றார். இத்தகைய ஆசிகளெல்லாம் ஆபிராம் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, அவர் காட்டிய நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றதால்தான்.
துன்பத்தில் பங்குகொள்!
உறவினர்களிலும் சரி, நண்பர்களிலும் சரி நமது இன்பத்தில் பங்கு கொள்ளப் பலரும் முன்வருவதுண்டு. இவர்கள் நமது துன்பத்தில் பங்குகொள்ள முன்வருவார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக் குறி
கடவுளின் வார்த்தையைப் பிறவினத்தாருக்கு அறிவித்து, அவர் பொருட்டுச் சிறையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார் பவுல். அப்படிப்பட்டவர் எபேசு சபையில் ஆயராக இருந்த திமொத்தேயுவிடம், “கடவுளின் வல்லமைக்கேற்ப, நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்” என்கிறார். பவுல் திமொத்தேயுவிடம் இவ்வாறு கூறுவதற்கு ஒரு காரணம் இருந்தது. தொடக்கக் காலகட்டத்தில் எபேசு சபையில் ஏற்பட்ட அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள் யாவற்றையும் என பார்த்துவிட்டுத் திமொத்தேயு அச்சத்தோடு இருந்தார். இதனாலேயே பவுல் அவரிடம், “கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தினையே வழங்கியுள்ளார்” (2 திமொ 1:7) என்று சொல்லிவிட்டு, நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னோடு பங்கு கொள் என்கிறார்.
திமொத்தேயு என்று இல்லை; நாம் ஒவ்வொருவரும் துன்பத்தில் ஏன் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்கான காரணத்தைப் பவுல் சுட்டிக்காட்டத் தவறவில்லை. கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாக மீட்டுள்ளார். அதனாலேயே நாம் துன்பத்தில் அவரோடு பங்குகொள்ள வேண்டும். அப்படி நாம் துன்பத்தில் பங்குகொள்ளவில்லை என்றால், நாம் கிறிஸ்துவின் பணியாளர்களே அல்ல!
செவிசாயுங்கள்!
கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாக மீட்டார் எனில், அவர் நம்மை எப்படி மீட்டார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவுபடுத்துகின்றது.
இயேசு தம் சாவை முதன்முறை அறிவித்தபோது, அவரது சீடர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மெசியா எதற்குத் துன்புற வேண்டும்? மெசியாவாம் இயேசு துன்புற்று இறக்கப் போகிறார் என்றால், அவர் மெசியா இல்லையா? என்றெல்லாம் நினைத்துச் சீடர்கள் குழம்பிப் போயிருந்தார்கள். அவர்களுக்குத் தாம் யார் என்பதை விளக்கும்பொருட்டு, இயேசு அவர்களில் மூவரை அழைத்துக்கொண்டு மலைக்குச் சென்று, அவர்கள் முன்னே தோற்றமாற்றம் அடைகின்றார்.
இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வில் திருச்சட்டத்தின் அடையாளமாக மோசேயும், இறைவார்த்தையின் அடையாளமான இறைவாக்கினர் எலியாவும் தோன்றி, எருசலேலில் இயேசு படவிருந்த பாடுகளைப் பற்றிப் பேசுகின்றார்கள் (லூக் 9: 31) அப்போது, மேகத்திலிருந்து ஒலிக்கும் குரல், “என் அன்பார்ந்த மைந்தன் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன். இவருக்குச் செவி சாயுங்கள்” என்கிறது.

Comments are closed.