திருப்பீட நிர்வாகச் சீர்திருத்தம் குறித்த திருத்தந்தையின் கடிதம்

திருப்பீடத்திற்குச் சொந்தமான சொத்துக்களைப் பயன்படுத்துவது தொடர்பாக எழுத்து மூலமான பதில் ஒன்றை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தற்போதைய பொருளாதாரச் சூழலின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, திருஅவையின் தலைமைப்பீட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களை இலவசமாகவோ அல்லது சாதகமாகவோ பயன்படுத்த அனுமதிக்கும் விதிமுறைகளை இரத்து செய்ய திருத்தந்தை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 13 ஆம் தேதி  பொருளாதாரத்திற்கான செயலகத்தின் தலைவரான Maximino Caballero Ledoக்கு வழங்கிய எழுத்து மூலமான பதிலில், தலைமைப்பீட நிறுவனங்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களை இலவசமாகப் பயன்படுத்த அல்லது சிறப்பு சாதகமான சூழ்நிலையில் அனுமதிக்கும் அனைத்து விதிகளையும்  இரத்து செய்ய திருத்தந்தை பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்துலகத் திருஅவை மற்றும் தேவையில் இருப்போருக்கு உதவும் விதத்தில், வளர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளைக் கருத்தில்கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், திருப்பீடத்தின்   பணிக்கு அதிக நிதிகளை ஒதுக்குவதற்கு, அசையாச் சொத்துக்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் ஒவ்வொருவரும் இதற்கான தியாகத்தை செய்ய வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த ஏற்பாடு கர்தினால்கள், திருப்பீட பல்வேறு துறைகளின் தலைவர்கள், செயலர்கள், துணைச் செயலர்கள், மேலாளர்கள் மற்றும் அதற்கு இணையானவர்கள், தணிக்கையாளர்கள் உட்பட திருப்பீட தலைமை நிர்வாக நிலையிலுள்ள அனைவருக்கும் பொருந்தும் என்றும் அதில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சொத்துக்களை வைத்திருக்கும் நிறுவனங்கள், திருப்பீட மற்றும் வத்திக்கான் நகரத்தில் எந்தவிதமான அலுவலகங்களும் இல்லாதவர்களுக்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் விலைமதிப்பு பட்டியலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஏற்கனவே ஒப்பந்தத்தின் கீழ் இருக்கும் அசையாச் சொத்துக்கள் அவைகளின் காலக்கெடு முடியும்வரை காத்திருக்க வேண்டும் எனவும், அவைகள் புதுப்பிக்கப்படவேண்டிய ஒரு கட்டாயச் சூழல் எற்படும்போது, தற்போதைய புதிய விதி முறைகளின் கீழ் இடம்பெறவேண்டும் எனவும், புதிய விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் திருத்தந்தையின் நேரடி அனுமதி இன்றி இடம்பெறக்கூடாது என்றும் திருத்தந்தை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.