பிப்ரவரி 17 : நற்செய்தி வாசகம்

என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழப்பவர், அதைக் காத்துக்கொள்வர்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 34- 9: 1
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பார் எனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப் படுவார்” என்றார்.
மேலும் அவர் அவர்களிடம், “இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————–
இயேசுவின் சீடர் யார்?
பொதுக்காலத்தின் ஆறாம் வாரம் வெள்ளிக்கிழமை
I தொடக்க நூல் 11: 1-9
திருப்பாடல் 33: 10-11, 12-13, 14-15 (12b)
II மாற்கு 8: 34-9:1
இயேசுவின் சீடர் யார்?
தன்னலம் துறப்போம்; சிலுவையைச் சுமப்போம்
பெரும்பாலோர் தானுண்டு, தன்னுடைய குடும்பம் உண்டு என்று வாழ்வதுண்டு. இன்னும் ஒருசிலர் தங்கள் பெயரையும் பெருமையையும் நிலைநாட்டுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்வார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில் மனிதர்கள் தங்கள் பெருமையை நிலைநாட்டுவதற்காக வானளாவிய ஒரு கோபுரத்தைக் கட்ட முயற்சி செய்வதையும், கடவுள் அவர்களது மொழியில் குழப்பத்தை ஏற்படுத்துவதையும் பற்றி வாசிக்கின்றோம். கடவுள் ஏன் அவர்கள் மொழியில் குழம்பத்தை ஏற்படுத்தினார் எனில், அவர்கள் கடவுளின் விருப்பத்திற்கேற்ப, மண்ணுலகை நிரப்பாமல், ஒரே இடத்தில் இருந்தார்கள் (தொநூ 9:1,7) என்பதால்தான். இதனாலேயே கடவுள் இவ்வாறு செய்தார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னுடைய பாடுகளையும் உயிர்ப்பையும் பற்றி எடுத்துக்கூறிவிட்டு, தன்னைப் பின்தொடர்ந்து வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசுகின்றார். அவ்வாறு பேசும்போது, அவர், “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும், தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு, என்னைப் பின்பற்றட்டும்” என்கிறார்.
இவ்வுலகம் தன்னலச் சேற்றில் சிக்கத் திக்கித் தவிக்கும்போது, தன்னுடைய பெருமையையும் புகழையும் நிலைநாட்டத் துடிக்கும்போது, இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வருபவர்கள் அவ்வாறு இருக்கமால், தன்னலத்தைத் துறக்கவும், சிலுவையைச் சுமக்கவும் அழைப்பு விடுக்கின்றார். இவ்வாறு தன்னலம் துறந்து, சிலுவையைச் சுமந்துகொண்டு, தனக்காக உயிரை இழக்கத் துணிவோர் அதைக் காத்துக் கொள்வோர் என்கிறார் இயேசு.
இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 33 ஒரு புகழ்ப்பாடல் ஆகும். இப்பாடல் கடவுள் படைப்பிலும் வரலாற்றிலும் செயல்படுவதால் அவரைப் போற்றிப் புகழவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. ஆகவே, கடவுள் தாமே எல்லாம் வல்லவர் என்பதால், நம்முடைய பெருமையை நிலைநாட்டத் துணியாமல், அவரது பெருமையை நிலைநாட்டத் துணிவோம். அதற்கு நாம் தன்னலம் துறக்கவும் சிலுவையைச் சுமக்கவும் தயாராவோம்.
தன்னலம் துறந்து, சிலுவையைச் சுமந்தவர்
இயேசு கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கைக்காக ஹிட்லரின் வதை முகாமில் அடைக்கப்பட்டவர் மாக்ஸ்மில்லியன் மரிய கோல்பே. 1941, மே 28 ஆம் நாள், இவர் ஆஸ்விட்ச் என்ற வதைமுகாமிற்கு மாற்றப்பட்டார்.
அங்கிருந்த கைதி ஒருவர் தப்பித்து ஓடி, திரும்பக் கிடைக்காததால், அதிலிருந்த பத்துப் பேர் பட்டினி போடப்பட்டு, கொல்லப்படுவது என உறுதியானது. இதை அறிந்த அந்தப் பத்துப் பேரில் ஒருவர் தனக்குக் குடும்பம் இருக்கின்றது என்றும், தன்னை விட்டுவிட வேண்டும் என்றும் கதறி அழுதபோது, கோல்பே, அதிகாரியிடம், “அவரை விட்டுவிடுங்கள்; அவருடைய இடத்தில் இருந்து, எத்தகைய துன்பத்தையும் அனுபவிக்கத் தயார்” என்றார். இதனால் கோல்பே மற்ற ஒன்பது பேரோடு பட்டினி போடப்பட்டார். இரண்டு வாரங்கள் கழித்தும் அவர் உயிரோடு இருந்ததால், உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டு 1941, ஆகஸ்ட் 14 ஆம் நாள் கொல்லப்பட்டார்.
தனக்காக வாழும் மனிதர்கள் நடுவில் கோல்பே கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, அவருக்காகத் தம் இன்னுயிரைத் துறந்து, கிறிஸ்துவின் உண்மையான சீடரானார். நாம் யாருக்காக வாழ்கின்றோம், யாருடைய பெருமையை நிலைநாட்ட விரும்புகின்றோம்? சிந்திப்போம்.
ஆன்றோர் வாக்கு
“இவ்வுலகில் தனக்கான வாழ்வது இறகை விட மிகவும் எளிதானது. பிறருக்காக வாழ்வது மலையை விடக் கடினமானது என்றாலும், அதுவே சிறந்த வாழ்வு” – மாவோ
தீர்மானங்கள்
1) தன்னலம் தவிர்த்து, பிறர் நலத்தோடு வாழ்வோம்.
2) கடவுளே போற்றுதலுக்கு உரியவர். அதனால் அவரைப் போற்றிப் புகழ்வோம்.
3) அகந்தையைத் தவிர்த்து, தாழ்ச்சியில் வளர்வோம்.

Comments are closed.