இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
“அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்.” என இறைவாக்கினர் எசாயா கூறுகிறார்.
துன்பத்தில் உழலும் எண்ணற்றோர் ஆண்டவரின் வருகையின் போது மீட்பு பெறுவர். அவர்கள் அனைவரும் மீட்புவரை விசுவாசத்தில் நிலைத்து நிற்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உமக்குச் சொல்கிறேன்: நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்.” என நமதாண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்.
படுக்கையில் நோயில் வாடிக் கொண்டிருக்கும் எண்ணற்றோர் இன்று இறைவனின் நம்பிக்கை நிறைந்த இந்த இறைவார்த்தைகளைக் கேட்டு புதுமையாக படுக்கையில் இருந்து எழுந்து நடக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில் இயேசுவினால் குணமடைந்த முடக்குவாதமுற்றவரின் நண்பர்களின் நம்பிக்கையும், முயற்சியும் பெரிதாகும். நமக்கு அறிந்தவர்களின் துன்பத்தில் அவர்களோடு பயணித்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களை இறைவழியில் நடக்க நாம் உறுதுணையாய் இருக்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இந்த புதிய வாரம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் திறம்பட செய்யவும், குறித்த காலத்துக்கு முன்னமே நமது வேலைகளை வெற்றிகரமாக முடிக்கவும், தூய ஆவியின் துணையை வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.