அன்னை தெரேசா ஆவணப்படத் தயாரிப்பாளர்களுக்கு பாராட்டு

னித அன்னை தெரசா அவர்களின் பலன்தரும் சான்றுள்ள வாழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணப்படம், கட்டாயம் அதனைப் பார்ப்பவர்களுக்கு நன்மை மற்றும் புனிதத்தின் மீதான விருப்பத்தை அதிகரிக்கும் என்றும், இதனை தயாரிக்க கடுமையாக உழைத்த அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும்  ஆவணப்பட நிறுவனத்திற்கு எழுதிய வாழ்த்து கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

KNIGHTS OF COLOMBUS என்ற பிறரன்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 29 அன்று ரோமில் உள்ள வட அமெரிக்க குருத்துவப் பயிற்சி கல்லூரியிலும், ஆகஸ்ட் 31 அன்று வத்திக்கான் திரைப்பட நூலகத்திலும் வெளியிடப்பட்ட “Mother Teresa: No Greater Love” என்னும் ஆவணப்படம் குறித்த தன்னுடைய பாராட்டு கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

மேலும், இப்பிறரன்பு நிறுவனத் தலைவர் Patrick Kelly அவர்கள், இந்த ஆவணப்படம் குறித்து பேசுகையில், ஆகஸ்ட் 31, இப்புதன் காலையில் திருத்தந்தையை தனியாகச் சந்தித்தபோது, இந்த ஆவணப்படப் பிரதி ஒன்றை அவரிடம் கொடுத்ததாகவும், இப்படம், இளம் தலைமுறைப் பார்வையாளர்களைக் கட்டாயம் சென்றடையக் கூடியதாக இருக்கும் என்று அவர் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Missionaries of Charity சபையினரின் நம்ப முடியாத வாழ்வையும் பணியையும் இன்றைய உலகினருக்கு நினைவுபடுத்தும் வகையிலும் அன்னை தெரேசா பற்றி அறியாத இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவரது தூய வாழ்வு பற்றி எடுத்துரைக்கும் படமாகவும் இருக்கும் என்று தாங்கள் நம்புவதாக, KNIGHTS OF COLOMBUS நிறுவனத்தின் தலைவர் Patrick Kelly மற்றும் அப்படத்தின் இயக்குனர் David Naglieri, கத்தோலிக்கச் செய்திகளிடம் கூறியுள்ளனர்.

இந்நிறுவனம், பிறரன்புப் பணியை முதன்மைக் கொள்கையாகக் கொண்டுள்ளதால், அன்னை தெரேசா அவர்களின் வாழ்வை உதாரணமாக தாங்கள் எடுத்ததாகவும், அன்னையைப்பற்றிய வாழும் நினைவுகள் ஏதுமின்றி செவி வழியாக கேட்டிருக்கும் இளைய தலைமுறையினர் அவரைப் பற்றி அறியவேண்டும் என்னும் காரணத்திற்காகவும்  இப்படம் எடுக்கப்பட்டது என்று கெல்லி அவர்கள் தெரிவித்தார்.

இன்னும், வருகின்ற அக்டோபர் மாதம் 3,4 தேதிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கின்ற இப்படம் நன்மையான விதத்தில் மக்களைப் பாதித்து நம்பிக்கையின் அருகில் கொண்டுவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அன்னை தெரசா அவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படமானது 5 கண்டங்களில் 960 இடங்களில் வெளியிடப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.