பொதுக் காலத்தின் இருபத்து நான்காம் ஞாயிறு (11-09-2022)
I விடுதலைப் பயணம் 32: 7-11, 13-14
II 1 திமொத்தேயு 1: 12-17
III லூக்கா 15: 1-32
தேடிக் கண்டடையும் கடவுள்
எனக்காக யார் வேண்டினார்?
கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒரு கிறிஸ்தவர் இருந்தார். அவருக்கு ஜெசி என்றொரு மகள் இருந்தாள். அவளை அவர் மிகவும் அன்பு செய்தார். தன் தந்தையைப் போன்று ஜெசி கடவுள்மீது மிகுந்த நம்பிக்கைகொண்டிருந்தாள். அப்படிப்பட்டவளுடைய மனம் திடீரெனக் கடவுளை விட்டு விலகிச் சென்றது. ஒரு கட்டத்தில் அவள் வீட்டை விட்டே ஓடிப்போனாள். இதை அறிந்த ஜெசியின் தந்தை அவளைத் தேடாத இடமில்லை. இருந்தும் அவளை அவரால் கண்டுபிடிக்கவில்லை.
இதற்கு நடுவில், வீட்டை விட்டு ஓடிவந்த ஜெசி, ஒருநாள் இரவில், தனக்காக யாரோ இறைவனிடம் வேண்டுவதை உணர்ந்தாள். உடனே அவள் வீட்டிற்குத் திரும்பி வந்தாள். அவளுடைய தந்தை அவளை எந்தவொரு கடுஞ்சொல்லும் உதிர்க்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டார். அப்போது ஜெசி தன் தந்தையிடம், “அப்பா! நேற்று இரவு யாரோ எனக்காக இறைவனிடம் வேண்டுவதைப் போல் உணர்ந்தேன். ஒருவேளை நீங்கள்தான் எனக்காக இறைவனிடம் வேண்டினீர்களா?” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.
“உனக்காக நான் மட்டுமல்ல, நம் பங்கில் உள்ள அனைவருமே வேண்டினார்கள்” என்று ஜெசியின் தந்தை அவளிடம் சொன்னபோது, அவளுக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அதன்பிறகு அவள் தன் தந்தையிடம், “அப்பா நான் என் பாவத்திற்காக மனம் வருந்துகின்றேன். இனிமேல் நான் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவரது பிள்ளையாக வாழ்வேன்” என்றாள். இதைக் கேட்டு ஜெசியின் தந்தை பெரிதும் மகிழ்ந்தாள்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் ஜெசி கடவுளிடமிருந்தும் தன் தந்தையிடமிருந்தும் விலகிச் சென்றபோது, அவளது தந்தை அவளைத் தேடிக் கண்டுபிடித்து, பெருமகிழ்ச்சி அடைந்தார். பொதுக் காலத்தின் இருபத்து நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுள் நம்மைத் தேடிக் கண்டடைந்து, பெருமகிழ்ச்சி அடைவதைப் பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
காணாமல் போனதல்:
செய்தித்தாள்களில், ‘இன்னார் மகன், இன்னாரைக் காணவில்லை’ என்ற அறிவிப்பை நாம் பாத்திருக்கலாம். இப்படிக் காணாமல் போகும் ஒருசிலர் தங்கள் அறியாமையால் காணாமல் போனாலும், பலர் தெரிந்தே காணாமல் போவதுண்டு. திருவிவிலியத்தைப் பொறுத்தவரையில், காணாமல் போதல் என்பது இறத்தலுக்கு இணையாகக் கருதப் படுகின்றது.
முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் கடவுள் தங்களுக்குக் கொடுத்த பத்துக் கட்டளைகளில் முதலாவது கட்டளையான, “நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது” (விப 20:1) என்ற கட்டளையை மீறி, பொன்னாலான கன்றுக் குட்டியைச் செய்து வழிபடுவதையும், அதனால் கடவுளின் சினம் அவர்கள்மேல் மூண்டதையும் குறித்து வாசிக்கின்றோம். இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்திலிருந்து மீட்ட கடவுளை மறந்து, கன்றுகுட்டியைச் செய்து வழிபட்டதால் இறந்தவர்கள் போல் ஆகிறார்கள், அல்லது காணாமல் போகிறார்கள். மக்களின் இத்தகையதொரு செயலுக்கு அவர்களது அறியாமைமே காரணம் (ஓசே 4:6).
இரண்டாம் வாசகத்தில் பவுல் திமொத்தேயுவிடம், ஒரு காலகட்டத்தில் தான் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதைப் பற்றிக் கூறுகின்றார். பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதற்கு அவரது அறியாமையே காரணம். நற்செய்தியில் இயேசு சொல்லும் காணாமற்போன மகன் உவமையில் வருகின்ற இளைய மகனும்கூட, தன்னுடைய அறியாமையாலேயே தன் தந்தையின் அன்பைப் புறக்கணித்து, பாவம் செய்து, இறந்தவன் போல் ஆகின்றான். இப்படி இன்றைய இறைவார்த்தையில் வருகின்ற மனிதர்கள் தங்கள் அறியாமையால் பாவம் செய்து, காணாமல் போய், இறந்தவர்களைப் போல் ஆனார்கள்.
தேடிக் கண்டுபிடித்தல்:
மக்கள் தங்களுடைய கீழ்ப்படியாமல் பாவம் செய்து காணாமல் போயிருந்தாலும், கடவுள் அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. மாறாக, அவர் அவர்களைத் தேடிசென்றார். “நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்” (எசே 34:11) என்று இறைவாக்கினர் எசேக்கியேல் நூலில் வருகின்ற வரிகளும், அதை எண்பிக்கும் வகையில் நற்செய்தியில் இயேசு சொல்லும் காணாமற்போன ஆடு பற்றிய உவமையும் மேலே உள்ள கருத்தினை எண்பிக்கின்றன.
உலகத்தினர் பார்வைக்குத் தொண்ணூற்று ஒன்பது ஆடுகள் பெரிதாக இருக்கலாம். ஆண்டவர் பார்வைக்குக் காணாமல் போன ஓர் ஆடு பெரிதாக இருக்கின்றது. அதனால்தான் அவர் இஸ்ரேயல் மக்கள் தன்னை மறந்து பொன்னாலான கன்றுக் குட்டியைச் செய்து வழிபட்டபோது மோசேயின் பரிந்துபேசுதலுக்குச் செவிசாய்த்து, அவர் அவர்களைத் தேடிச் சென்று மீட்கின்றார். அதைப் போல, பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியன் மூலம், தன்னையே துன்புறுத்தியபோது, தமஸ்கு நோக்கிய பயணத்தில் அவரைத் தேடிச் சென்று கண்டுகொள்கின்றார் இயேசு. காணாமல் போன மகன் உவமையில் வரும் தந்தை, இளைய மகன் காணாமல் போனபோது அவனை அவர் நிச்சயம் தேடிச் சென்றிருப்பார். அதையே, “இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கின்றார்” (லூக் 19: 10) என்ற இயேசுவின் வார்த்தைகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
மகிழ்ச்சியில் திளைத்தல்:
கடவுளின் விருப்பம் தீயோர் சாக வேண்டும் என்பதல்ல, அத்தீயோர் தம் தீய வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே ஆகும் (எசே 33:11). அந்த அடிப்படையில் முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களும், இரண்டாம் வாசகத்தில் பவுலும், நற்செய்தி வாசகத்தில் இளைய மகனும், பதிலுரைப்பாடலில் தாவீது மன்னனும் தங்கள் பாவத்தை உணர்ந்து, ஆண்டவரிடம் திரும்பி வரும்போது, ஆண்டவர் அவர்களை மனிதர்களைப் போன்று குத்திக்காட்டி, அவர்களை மனம் நோகச் செய்யவில்லை. மாறாக, அவர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார். அதைவிடவும் அவர்களுடைய மனமாற்றத்தைக் குறித்து அவர் பெருமகிழ்ச்சி அடைகின்றார்.
காணாமல் போயிருந்த அல்லது இறந்து போயிருந்த தன் மகன் மீண்டும் உயிர் எழுந்தால், எந்தத் தந்தைக்குத்தான் மகிழ்ச்சி இராது? ஆண்டவரும் பாவிகள் மனம்மாறி வருகின்றபோது அவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டு மகிழ்கின்றார். எனவே, நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பேரன்பை நினைத்துப் பார்த்து, அவரிடம் திரும்பி வரவேண்டும். அதே நேரத்தில் மனம்மாறி வருகின்றவர்களைக் கடவுளைப் போன்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சிந்தனைக்கு:
‘மனிதனுடைய எல்லாச் செயல்களிலும் மிகவும் உன்னதமானது, தான் செய்த பாவத்திற்காக மனம் வருந்துவது. அதே வேளையில், அவன் செய்யும் செயல்களில் மிகவும் கீழ்த்தரமானது செய்த பாவத்தை உணராதது’ என்பார் தாமஸ் கார்லைல் என்ற அறிஞர். எனவே, நாம் நமது பாவத்தை உணர்ந்தவர்களாய் ஆண்டவரிடம் திரும்பி வந்து, புதியதொரு வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.