Lac Ste. Anne புனித ஏரி

Lac Ste. Anne ஏரி, வட அமெரிக்க பூர்வீக இன மக்களின் மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றாகும். இந்த ஏரியின் தண்ணீருக்கு குணப்படுத்தும் சக்தி உள்ளது எனப் பாரம்பரியமாக நம்பப்பட்டு வருகிறது. எனவே இந்த ஏரி, கனடாவின் கத்தோலிக்கர், மற்றும், பூர்வீக இனத்தவருக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வடமேற்கில் உள்ளவர்களுக்கும், ஆன்மீக முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. இந்த ஏரிப் பகுதிக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் செல்கின்றனர். Wakamne அதாவது “கடவுளின் ஏரி” என Nakota Sioux பூர்வீக இனத்தவராலும், இந்த ஏரியில் பாம்புகள் அதிகம் இருந்ததால் “ஆவியின் ஏரி” என Cree இன மக்களாலும் இது அழைக்கப்பட்டது. First Nations மற்றும், Métis இனங்களின் மக்கள் இந்த ஏரியில் வேட்டையாடுதல், மற்றும், மீன்பிடித்தொழிலை செய்துவந்துள்ளனர். Lac Ste. Anne கிராமம், கனடாவில் Métis இனத்தவர் நிரந்தரமாகக் குடியேறிய பகுதிகளில் ஒன்றாகும். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், 1842ஆம் ஆண்டில் கியூபெக் கத்தோலிக்க மறைப்பணியாளர் Jean-Baptiste Thibault அவர்கள், இந்த இடத்தில் மறைப்பணித்தளத்தைத் தொடங்கினார். சில காலம் சென்று அம்மறைப்பணித்தளம், அருள்பணியாளர்கள் இன்றி கைவிடப்பட்டது. பின்னர், 1889ஆம் ஆண்டில் அமலமரி தியாகிகள் சபையின் அருள்பணி Joseph J. Lestanc அவர்கள், புனித அன்னாவின் விழாவான ஜூலை 26ம் தேதி, புனித அன்னாவின் பெயரில், திருப்பயணம் ஒன்றை இவ்விடத்தில் மேற்கொண்டார். அதற்குப்பின் இவ்விடம், மரியாவின் தாய், மற்றும், இயேசுவின் பாட்டியான புனித அன்னாவின் பெயரால், புனித அன்னா ஏரி என அழைக்கப்படத் தொடங்கியது. 1926ஆம் ஆண்டில் 5,500க்கும் மேற்பட்ட திருப்பயணிகள், எட்மன்டன் நகரிலிருந்து 72 கிலோ மீட்டர் தூரம் இரயில் பயணம் செய்து இவ்விடத்திற்குத் திருப்பயணமாக வந்தனர். இப்போது வட அமெரிக்கா முழுவதிலுமிருந்து பலர், தவப்பயணமாக, காலணி அணியாமல் இவ்விடத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பல புதுமைகள் நடக்கின்றன எனவும் அவர்கள் கூறுவதாகச் சொல்லப்படுகிறது. 2004ஆம் ஆண்டில் Lac Ste. Anne திருப்பயண இடம், கனடாவின் சமூக மற்றும், கலாச்சார முக்கியத்துவம் கொண்டதாய், நாட்டின் தேசிய வரலாற்று இடமாக அறிவிக்கப்பட்டது.

Comments are closed.