வாசக மறையுரை (ஜூன் 11)
பொதுக் காலத்தின் பத்தாம் வாரம்
சனிக்கிழமை
I 1 அரசர்கள் 19: 19-21
II மத்தேயு 5: 33-37
பின்தொடர்வோம்
இயேசுவுக்காக இடக்கையை இழந்த இளைஞன்:
செங்கல் சூளையில் வேலை செய்த நேரம் போக எஞ்சிய நேரத்தைத் திருவிவிலியத்தை மக்களுக்கு வழங்குவதில் செலவழித்து வந்தான் மோகன் ஷாசாத் என்ற இளைஞன். பாகிஸ்தானைச் சேர்ந்த இந்தப் பத்தொன்பது வயது இளைஞன் மக்களுக்குத் திருவிவிலியத்தை வழங்கி வந்ததை அறிந்த ஒருசில மர்ம நபர்கள் ஒருநாள் இவன் திருவிவிலியத்தை மக்களுக்கு வழங்கிவிட்டு வீட்டிற்குத் திரும்பி வருகையில், இவனை இடைமறித்து இவனிடம், “இனிமேல் திருவிவிலியத்தை மக்களுக்கு வழங்கக்கூடாது” என்று எச்சரித்தார்கள். இவனோ அவர்களுக்கு இணங்காததால், அவர்கள் இவன்மீது பாய்ந்து, இவனது இடக்கையைத் துண்டித்துவிட்டு அங்கிருந்து ஓடி ஒளிந்தனர்.
இதற்கு நடுவில் இவன் போட்ட சத்தத்தைக் கேட்டு, சம்பவ இடத்திற்கு ஓடிவந்தவர்கள் இவனை மருத்துவமனைக்குத் தூக்கிகொண்டு விரைந்தனர். அங்கு இவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் துண்டிக்கப்பட்ட கையை ஒட்ட வைக்க முடியவில்லை. இதனால் ஒரு கையுடனே வாழவேண்டிய நிலை இவனுக்கு ஏற்பட்டது. இந்த நிலையிலும் இவன் திருவிவிலியத்தைத் தொடர்ந்து மக்களுக்கு வழங்கிக் கொண்டு வருகின்றான்.
ஒருமுறை இவனுக்கு அறிமுகமான சிலர் இவனிடம், “திருவிவிலியத்தை மக்களுக்கு வழங்கியதற்காக உன்னுடைய இடக் கையைத் துண்டித்தவர்கள், இன்னும் ஏதாவது செய்ய மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?” என்றார்கள். அதற்கு இவன், “கிறிஸ்துவுக்காக என்னுடைய உயிரையும் இழக்கத் தயார்” என்று உறுதியாகச் சொன்னான்.
ஆம், கிறிஸ்துவைப் பின்தொடர்ந்தால் உயிரையும் இழக்க வேண்டி வரும் என்ற நிலையிலும், மக்களுக்குத் திருவிவிலியத்தை வழங்கிக் கொண்டு வருகின்றான் மோகன் ஷாசாத் என்ற அந்த இளைஞன். இன்றைய இறைவார்த்தை இறைவனின் அழைப்பை ஏற்று, அவரைப் பின்தொடர வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இஸ்ரயேலின் இருந்த பாகால் தெய்வ வழிபாட்டை ஒழிக்க ‘ஆண்டவரே கடவுள்’ என்ற பெயர் கொண்ட இறைவாக்கினர் எலியா பெரிதும் பாடுபட்டார். அவர் தான் தொடங்கி வைத்த பணி தங்குத் தடையின்றி நடைபெறவேண்டும் என்பதற்காக எலிசாவை அழைக்கின்றார். எலிசா என்றால் ‘ஆண்டவரே என் மீட்பு’ என்று பொருள்.
இறைவாக்கினர் எலியா, எலிசாவை அழைத்ததும் தான் உழுதுகொண்டிருந்த காளையை அடித்து, விருந்து படைத்துவிட்டு, எலியாவைப் பின்தொடர்கின்றார். இவ்வாறு எலிசா எல்லாவற்றையும் துறந்து எலியாவைப் பின்தொடர்கின்றார்.
நற்செய்தியில் இயேசு பொய்யாணை இட வேண்டாம் என்கிறார். இச்செய்தியை இன்றைய முதல் வாசகத்தோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், இயேசுவைப் பின்தொடர்கின்ற ஒருவர் வாக்குக் கொடுப்பதோடு நின்றுவிடாமல், அவரைப் பின்தொடரவும் வேண்டும் என்ற கருத்தானது நமக்குச் சொல்லப்படுகின்றது. எனவே, இயேசுவைப் பின்தொடர்கின்றவர், பொய்யாக ஆணையிட்டுக் கொண்டிருக்காமல், அவரை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அதுவே சீடத்துவ வாழ்விற்கு அழகு.
சிந்தனைக்கு:
இழக்கத் தயாராக இருக்கின்ற ஒருவரே இயேசுவைப் பின்தொடர் முடியும்.
இன்னல்களும் இடையூறுகளும் இல்லாத இறைப்பணியை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது.
இயேசுவைப் பின்தொடர்வோரை, அவர் தனியாய் விடுவதில்லை.
இறைவாக்கு:
‘அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்’ (எரே 1:19). என்பார் ஆண்டவர். எனவே, ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு அவரைப் பின்தொடர்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.