ஜூன் 8 : நற்செய்தி வாசகம்

அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————————-
மத்தேயு 5: 17-19
“திருச்சட்டத்தின் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது”
நிகழ்வு
ஸ்காட்லாந்திலிருந்து இந்திய மண்ணிற்கு நற்செய்தி அறிவிக்க வந்தவர் மறைப்பணியாளரான அலெக்சாந்தர் தஃப் (Alexander Duff 1806-1878). பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்திய மண்ணிற்கு வந்து கடவுளின் வார்த்தையை அறிவித்துப் பலரையும் கிறிஸ்துவுக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய இவர், அதற்காக ஏராளமான புத்தகங்களைப் சிறு சிறு பெட்டிகளில் வைத்து, அவற்றை இந்தியாவிற்குப் புறப்பட்ட கப்பலில் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்
கப்பல் நல்நம்பிக்கை முனைக்கு (Cape of Good Hope) அருகில் வந்தபொழுது, கடலில் புயல்காற்று வீசி, பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் அந்தக் கப்பலில் பயணம் செய்த எல்லாரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அலெக்சாந்தர் தஃப் எப்படியோ நீந்திக் கரையை வந்தடைந்தார். அவர் தன்னோடு எடுத்துச் சென்றிருந்த புத்தகங்களெல்லாம் கடலில் மூழ்கிப் போயின.
அவர் கரையில் நின்றவாறு, தான் பயணம் செய்த கப்பல் கடலில் மூழ்கிய திசையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு பெரிய அலையடித்தது. அந்த அலையில் இவர் இந்தியாவிற்குப் பெட்டியில் எடுத்துச் சென்ற திருவிவிலியமானது இவருக்கு முன்பாக வந்து விழுந்தது. அதைப் பார்த்ததும் மட்டில்லா மகிழ்ச்சியடைந்த அலெக்சாந்தர் தஃப், “எனக்கு இந்தத் திருவிவிலியம் போதும்; இதைக் கொண்டே நான் மக்களுக்கு நற்செய்தி அறிவித்துப் பலரையும் கிறிஸ்துவுக்குள் கொண்டுவருவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
இவர் தனக்குள் சொல்லிக்கொண்டது போலவே, இந்திய மண்ணிற்கு வந்து, ஆண்டவருடைய நற்செய்தியை அறிவித்துப் பலரையும் அவருக்குள் கொண்டு வந்து சேர்த்தார். இவர் இந்திய மண்ணில் நற்செய்தி அறிவித்த காலக்கட்டத்தில் மக்கள் நடுவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது இவரைப் பற்றிச் சொல்லப்படுகின்ற செய்தியாகும்.
ஆம், கடவுளின் வார்த்தைக்கு அழிவே கிடையாது; அவ்வார்த்தையை நாம் கடைப்பிடித்துக் கற்றுத் தரவேண்டும் என்ற செய்தியை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் கடவுளின் வார்த்தையைப் பற்றியும், அதை நாம் மக்களுக்கு எப்படி அறிவிக்கவேண்டும் என்பதைப் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
திருச்சட்டத்திற்கு அழிவில்லை
இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவின் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக வருகின்றது. இதில் ஆண்டவர் இயேசு, “விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன்” என்கிறார்.
இயேசு தன்னுடைய போதனையின்பொழுது, அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள், “உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன்” என்பதாகும். ஒரு கருத்தை ஆழமாக வலியுறுத்திக் கூறுவே, இயேசு இவ்வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகின்றார். இன்றைய நற்செய்தியில் இயேசு திருச்சட்டத்தின் அழிவுறாத் தன்மையை வழியுறுத்திக் கூறவே, இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார். திருச்சட்டம் ஒழியாது என்று இயேசு சொல்லக் காரணம், அது கடவுள் அருளியது. மனித சட்டங்கள் வேண்டுமானால், ஒழியலாம், மாறலாம். ஆண்டவருடைய திருச்சட்டமோ ஒழியவே ஒழியாது.
விண்ணரசில் சிறியவர் யார்? பெரியவர் யார்?
இத்தகைய அழியாத திருச்சட்டத்தை, கட்டளைகளை அவர் வழியில் நடக்கின்றவர்கள் கடைப்பிடித்துக் கற்பிக்கின்ற வேண்டும் என்று இயேசு வலியுறுத்துகின்றார். இன்றைய காலக்கட்டத்தில் ஒருசில போதகர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் கடவுளின் இக்கட்டளை மீறியும், தங்களுடைய வசதிக்கேற்றாற்போல் அவற்றை மாற்றியும் மக்களுக்குக் கற்பித்து, அதன்மூலம் இலாபம் அடைந்து வருகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் விண்ணரசில் மிகச் சிறியவர்கள் என்கின்றார் இயேசு; ஆனால், இக்கட்டளைகளில் ஒன்றையும் மீறாது, அவற்றைக் கடைப்பிடித்துக் கற்பிக்கின்றவர்கள் விண்ணரசில் பெரியவர்கள் என்கின்றார் இயேசு.
‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்பார் ஐயன் திருவள்ளுவர். ஆம், நாம் கடவுளின் கட்டளையை மக்களுக்குப் போதித்துவிடலாம்; அதைக் கடைப்பிடித்துக் கற்பிப்பதுதான் சற்றுக் கடினமான செயல் ஆகும். ஆனாலும் நாம் அதைக் கடைப்பிடித்துக் கற்பிக்கின்றபொழுது விண்ணரசில் பெரியவர்களாவோம் என்பது உறுதி. நாம் விண்ணரசில் சிறியவர்களாக இருக்கப் போகிறோமா அல்லது பெரியவர்களாக இருக்கக் போகிறோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘வாழ்வளிக்கும் என் நியமங்களை அவர்களுக்குக் கொடுத்து வாழ்வுதரும் என் நீதிநெறிகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். அவற்றைக் கடைப்பிடிப்போர் வாழ்வு பெறுவர்’ (எசே 20: 11) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் வாழ்வுதரும் ஆண்டவரின் நியமங்களையும் நீதிநெறிகளையும் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.