வாசக மறையுரை (ஜூன் 07)
பொதுக் காலத்தின் பத்தாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I 1 அரசர்கள் 17: 7-16
II மத்தேயு 5: 13-16
“உப்பு உவர்ப்பற்றுப் போனால்…”
அளவுக்கு மிஞ்சினால்:
கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு பயணிகள் கப்பல் பனிப்பாறையில் மோதி உடைந்தது. இக்கோர சம்பவத்தில் பலரும் இறந்துவிட, உயிர்பிழைத்த ஒருசிலர் மட்டும், ‘உயிர்காக்கும் படகு’களில் ஏறிக் கரைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். பல நாள்களாக அவர்கள் பயணம் செய்தும், கரை அவர்களது கண்களுக்குத் தென்படவில்லை. இதற்கு நடுவில் அவர்கள் கைவசம் இருந்த உணவும் தண்ணீரும் முற்றிலும் தீர்ந்துபோயின.
இந்நிலையில் ஒரு பயணிக்குக் கடுமையான தாகம் எடுத்தது. தாகம் அடங்குவதற்கு என்ன செய்வது? என்று அந்தப் பயணி செய்தவறியாமல் திகைத்தான். இரவு நேரம் வந்தது. எல்லாரும் கண்ணயர்ந்து தூங்கிய பிறகு, அவன் கடல்நீரை அள்ளிப் பருகினான். அவன் அதைப் பருகிய சிறிது நேரத்தில் இறந்து போனான். இத்தனைக்கும் சக பயணிகள் அவனிடம், எக்காரணத்தைக் கொண்டும் கடல் நீரைப் பருகக் கூடாது என்று சொல்லியும், அவன் அதைப் பருகியதால் இறந்தான்.
கடல் நீரைப் பருகியதும் ஏன் இறந்தான் எனில், கடல் நீரில் மனிதன் வழக்கமாக உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பின் அளவைவிட ஏழு மடங்கு மிகுதியாக இருக்கும். அதை விடவும் கடல்நீரைப் பருகினால் தாகம் அடங்குவதற்குப் பதில், தாகம் இன்னும் மிகுதியாகும். இந்தப் பயணி தாகம் எடுக்கின்றது என்று இன்னும் மிகுதியாகக் கடல் நீரைப் பருகியதால் உடலில் உப்பின் அளவு கூடி இறந்து போனான்.
ஆம், எதுவும் அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தில்தான் முடியும். உப்பு உட்பட! நற்செய்தியில் இயேசு, “உப்பு உவர்ப்பற்றுப் போனால், அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது” என்கிறார். நாம் எப்படி உவர்ப்புள்ள உப்பாக இருப்பது என்று சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
மத்தேயு நற்செய்தியில் ஆண்டவர் இயேசு ஐந்து நீண்ட உரைகளை ஆற்றுகின்றார். அந்த ஐந்து உரைகளில் முதலாவதாக இடம்பெறும் உரையில் வரும் ஒரு சிறு பகுதிதான் இன்றைய நற்செய்தி வாசகம். இதில் இயேசு, “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்” என்கிறார்.
பழங்காலத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் உப்பு உணவுப் பொருள்களுக்குச் சுவையூட்டவும், உணவுப்பொருள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஒருவேளை உப்பின் அளவு கூடுதலாக இருந்தாலோ, அல்லது உப்பு உவர்பற்றுப் போனாலோ, அது ஒன்றுக்கும் உதவாது. இயேசுவின் வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் உவர்ப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கின்றீர்கள் என்கின்றார் இயேசு.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியா சாரிபாத்தில் வாழ்ந்த கைம்பெண்ணிடம் சென்று, பஞ்சக் காலம் முடியுமட்டும், மாவும் எண்ணெயும் குறையாத அளவுக்கு ஒரு வல்ல செயலைச் செய்கின்றார். இறைவாக்கினர் எலியா இந்த வல்ல செயலைச் செய்த பகுதி, ஆகாப் மன்னனின் மாமனார் எத்பாலின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி, அந்த இடத்திற்கே சென்று எலியா ஆண்டவர் வல்லவர் என்பதை நிரூபித்து அவரது பெருமையைப் பறைசாற்றுகின்றார்.
நாமும் எலியா இறைவாக்கினரைப் போன்று உவ(ர்)ப்புள்ள வாழ்ந்து ஆண்டவருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
சிந்தனைக்கு:
கடவுள் தந்திருக்கும் இந்த வாழ்க்கைக் கொண்டு அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
நாம் உவப்புள்ள வாழ்க்கை வாழ்வதைப் பார்த்துவிட்டு, மற்றவர்களும் அவ்வாறு வாழ்வதற்கு நிறைய வாய்ப்பு உண்டு.
கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் வாழும்போது கிறிஸ்து மகிழ்கின்றார்.
இறைவாக்கு:
‘நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்’ (பிலி 2:4) என்பார் புனித பவுல். எனவே, நாம் பிறரைச் சார்ந்தவற்றில் அக்கறை கொண்டு வாழ்ந்து, உலகிற்கு உப்பாய்த் திகழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.