மற்றொரு துணையாளர்! நீங்கள் தூய ஆவியாரால் நிரப்பப்பட்டுள்ளீர்களா?
தூய ஆவி ஞாயிறு (05.06.2022)
I திருத்தூதர் பணிகள் 2: 1-11
II உரோமையர் 8: 8-17
III யோவான் 14: 15-16, 23-26
மற்றொரு துணையாளர்!
நீங்கள் தூய ஆவியாரால் நிரப்பப்பட்டுள்ளீர்களா?
பல ஆண்டுகளுக்கு முன்பு இளைஞன் ஒருவன் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தூண்டப்பட்டு, இந்தியாவிற்குப் புறப்படத் தயாரானான். அமெரிக்காவைச் சேர்ந்த அந்த இளைஞன் கப்பலில் இந்தியாவிற்குப் புறப்படுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. பயணத்தின்போது அந்தக் கடிதத்தைப் படித்துக்கொள்ளலாம் என்று அவன் அதைக் கையோடு எடுத்துக்கொண்டான்.
கப்பல் பயணம் தொடங்கியதும், அவன் அதை எடுத்து வாசித்தான். “நீங்கள் தூய ஆவியாரால் நிரப்பப்பட்டுள்ளீர்களா?” என்று அதில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டதும், அவனுக்குக் கடுஞ்சினம் வந்தது. ‘எவ்வளவு படிப்பு படித்திருக்கின்றோம்; தூய ஆவியாரால் நிரப்பப்படாமலா இருப்போம்? இதுகூடத் தெரியாமல் இப்படியொரு கடிதம் எழுதியிருக்கின்றாரே இவர்!’ என்று கடிதத்தை எழுதியவரைத் திட்டிவிட்டு, அதைத் தான் இருந்த அறையின் ஒரு மூலையில் கடாசினான் அவன்.
நேரம் கடந்தது. அவன் சற்று யோசிக்கத் தொடங்கினான். ‘ஒருவர் தான் படித்த படிப்பின் மூலம் தூய ஆவியாரைப் பெற முடியுமா? தூய ஆவியார் என்பவர் படித்த படிப்பின் மூலம் பெறப்படுகின்ற ஒருவர் இல்லையே! அவர் கடவுளால் அளிக்கப்படுகின்ற ஒருவரல்லவா! அவரால் நிரப்பப்பட கடவுளிடம் கேட்பதுதான் முறை!’ என்று அவன் முழந்தாள் படியிட்டுத் தான் தூய ஆவியாரால் நிரப்பப்பட வேண்டும் என்று கடவுளிடம் மன்றாடினான். கடவுளும் அவன்மீது தூய ஆவியாரைப் பொழிய, அந்த வல்லமையினால் அவன் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு வந்து, நற்செய்தியை அறிவித்து, ஆயிரக்காண மக்களை ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொள்ளச் செய்தான். அந்த இளைஞன்தான் மறைப்பணியாளரான ஜான் ஹைத் (John Hyde).
ஒருவர் தூய ஆவியாரால் நிரப்பப்படும்போது, எத்துணை வல்லமை பெறுகின்றார் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். இன்று நாம் பெந்தக்கோஸ்துப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று நாம் சிந்திப்போம்.
சொன்னார், செய்தார்:
கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்கவிடும் மனிதர்கள் நம்பில் பலர். இவர்கள் நடுவில் கொடுத்த வாக்கை நிறைவேற்றியர் என்ற வகையில் இயேசு சற்று வித்தியாசமானவரே!
இயேசு இம்மண்ணுலகில் வாழ்ந்தபோது, தம் சீடரிடம், “உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்” என்று வாக்களித்திருந்தார். (அதைப் பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம்). இவ்வாறு மற்றொரு துணையாளரை அனுப்புவதாகத் தம் சீடருக்கு வாக்களித்திருந்த இயேசு, விண்ணேற்றம் அடைந்ததும் அதை மறந்துவிடவில்லை. மாறாகத் தான் சொன்னது போன்றே செய்தார். இதன்மூலம் அவர் சொல்லிலும் செயலிலும் வல்லவராகத் திகழ்கின்றார் (லூக் 24: 19).
இயேசு தூய ஆவியாரைப் பற்றிச் சொல்கிறபோது, துணையாளர் என்று சொல்வதும், அதுவும் மற்றொரு துணையாளர் என்று சொல்வதும் கவனத்திற்குரியது. தூய ஆவியார் மற்றொரு துணையாளர் எனில், இயேசுவே அந்த முதல் துணையாளர் (1 யோவா 2:1). இயேசு விண்ணேற்றமடைந்து, தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து, நமக்காகப் பரிந்து பேசுகையில் (எபி 7:25), மற்றொரு துணையாளராம் தூய ஆவியார் சீடர்களுக்கு அனைத்தையும் கற்றுத்தந்து, அவர்கள் இயேசுவைப் பற்றிச் சான்று பகரச் செய்வார். இதுவே மற்றொரு துணையாளராம் தூய ஆவியார் செய்யும் பணியாகும்.
ஒன்றிணைக்கும் தூய ஆவியார்:
யூதர்கள் ஆண்டுதோறும், புளிப்பற்ற அப்ப விழா, அறுவடை விழா, சேகரிப்பு விழா என முப்பெரும் விழாக்களைக் கொண்டாடினார்கள். இம்மூன்று விழாக்களுக்கும் யூதர்கள் எருசலேமிற்கு வரவேண்டும் (விப 23: 14-19). புளிப்பற்ற அப்ப விழாவாம் பாஸ்கா விழாவிற்கு ஐம்பது நாள்கள் கழித்துக் கொண்டாடப்பட்ட அறுவடை விழாவாம் பெந்தக்கோஸ்து விழாவிற்கு உலகமெங்கிலும் இருந்த இறைப்பற்று மிக்க யூதர்கள் எருசலேமிற்கு வந்திருந்தார்கள். இவர்கள், தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுத் திருத்தூதர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசியதைத் தங்கள் மொழிகளில் கேட்டு மலைத்துப் போனார்கள்.
திருதூதர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசியதை உலகமெங்கிலும் இருந்து எருசலேமிருக்கு வந்திருந்த இறைப்பற்று மிக்க யூதர்கள் தங்களது சொந்த மொழியில் கேட்டார்கள் என்பதைத் தூய ஆவியார் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கக் கூடியவர் என்று புரிந்து கொள்ளலாம்.
பழைய ஏற்பாட்டில், வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றைக் கட்டி எழும்பி, மக்கள் தங்கள் பெயரை நிலைநாட்ட முயன்றபோது, கடவுள் அவர்களுடைய மொழியில் குழப்பத்தை ஏற்படுத்தி, ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாதவாறு செய்தார் (தொநூ 11:1-9). கடவுள், மக்கள் ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாதவாறு செய்யக் காரணம், அவர்கள் ஆணவத்தோடு செயல்பட்டதால்தான்; ஆனால், பெந்தக்கோஸ்து நாளில் சீடர்கள் அனைவரும் ஒற்றுமையின் அடையாளமாக ஒரே இடத்தில் கூடியிருந்தனர். அதனால் தூய ஆவியார் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்கள் பேசுகின்ற மொழியை எருசலேமிற்கு வந்திருந்த மக்கள் புரிந்துகொள்ளும்படி செய்தார். இவ்வாறு தூய ஆவியார் ஒன்றிப்பவராக இருக்கின்றார்.
கடவுளின் ஆவியால் இயக்கப்படுவோம்:
பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட இயேசுவின் சீடர்கள், யூதர்கள் முன்னும் தலைமைச் சங்கத்தார் முன்னும் துணிவோடு ஆண்டவர் இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் தூய ஆவியாரால் இயக்கப்பட்டார்கள்.
திருமுழுக்கின் வாயிலாகத் தூய ஆவியாரைப் பெற்றிருக்கும் ஒவ்வொருவரும் தூய ஆவியாரால் அல்லது கடவுளின் ஆவியாரால் இயக்கப்பட்டு, இயேசுவுக்குச் சான்று பகரவேண்டும். அப்போதுதான் கடவுளின் மக்களாக முடியும். அதைவிடுத்து, ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால் சாகத்தான் வேண்டும். வேதனை என்னவென்றால், இன்றைக்குப் பலர் கடவுளின் ஆவியால் இயக்கப்படாமல், ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வதுதான். வில்லியம் டெம்பிள் என்ற அறிஞர் கூறுவார்: “தூய ஆவியாரால் நிரப்பப்பட்ட ஒருவர் தன்னலத்தோடு வாழமாட்டார். அப்படி வாழ்கிறவர் தூய ஆவியாரால் நிரப்பப்படவில்லை என்று அர்த்தம். ஏனெனில், தூய ஆவியார் ஒருவருடைய உள்ளத்தில் ஆறாய்ப் பொங்கி எழுந்து, அடுத்தவர் மட்டில் அக்கறை கொள்ளத் தூண்டுவார்.”
வில்லியம் டெம்பிள் சொல்லக்கூடிய வார்த்தைகள் முற்றிலும் உண்மை. நாம் தூய ஆவியாரால் இயக்கப்படுகின்றோம் எனில் பிறர்நலத்தோடு வாழ்வோம். அவ்வாறு வாழும்போது நாம் கடவுளின் மக்களாகின்றோம். எனவே, நாம் இந்தப் பெந்தக்கோஸ்து பெருவிழாவில் ஊனியல்பின் படி அல்ல, தூய ஆவியால் இயங்குவோம் என்ற சபதம் என்று, அதன்படி வாழ்வோம்.
சிந்தனைக்கு:
‘தூய ஆவியார் இன்றி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தூய ஆவியார் காற்று போன்றவர். அவரில்லை என்றால், பாய்மரக் கப்பாலாகிய நம்மால் ஓரடி கூட நகர முடியாது’ என்பார் மறைப்பணியாளரான சார்லஸ் ஸ்பர்ஜியோன். எனவே, நமது வாழ்வின் ஆதாரமான தூய ஆவியாரால் இயக்கப்படுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.