வாசக மறையுரை (மே 31) பாஸ்கா காலத்தின் ஏழாம் வாரம் செவ்வாய்க்கிழமை

தந்தையை மாட்சிப்படுத்திய மகன்
கடவுளை மாட்சிப்படுத்தாத மனிதர்கள்:
ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்கள் இமயமலைக்குச் சுற்றுலா சென்றனர். அங்கே பனிபடர்ந்த மலையையும் அதற்கு முன்பு இருந்த நீல நிற ஏரியையம் பார்த்துவிட்டு, ‘கடவுள் இந்த உலகை எத்துணை அழகாகப் படைத்திருக்கின்றார்!’ என்று அவர்கள் வியந்து நின்றார்கள்.
அந்தக் குழுவில் ஒரு பெண்மணி இருந்தார். அவர் மற்றவர்களை போன்று தனக்கு முன்பு இருந்த பனிபடர்ந்த மலையையும் அதற்கு முன்பு இருந்த நீல நிற ஏரியையும் கண்டு வியக்காமல், தான் வைத்திருந்த பைக்குள் இருந்த கண்ணாடியை எடுப்பதும், சுண்ணம் பூசி, முகத்தை அழகு செய்வதுமாகவே இருந்தார். அவர் இப்படியெல்லாம் செய்துகொண்டிருப்பைப் பார்த்துவிட்டு, அந்தக் குழுவிற்கு வழிகாட்டியாக இருந்தவர், “இவர் இங்கே வந்ததற்குப் பதில், வீட்டிலேயே இருந்து, முகத்தை அலங்காரம் செய்துகொண்டிருக்கலாமே!” என்றார். இதைக் கேட்டு எல்லாரும் சத்தம் போட்டுச் சிரித்தார்கள்.
இந்த நிகழ்வில் வரும் பெண்மணியைப் போன்று, இன்றைக்குப் பலர் கடவுளை மாட்சியும் பெருமையும் படுத்தாமல், தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வது வேடிக்கையாக இருக்கின்றது. இத்தகைய சூழலில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை கடவுளை நாம் மாட்சிப்படுத்த வேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தன்னுடைய சீடர்கள் தன்னிடம், இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுத்தர வேண்டும் என்று கேட்டபோது, இயேசு அவர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுத்தந்தார் (மத் 6: 9-13; லூக் 11: 2-4). இன்றைய நற்செய்தியிலோ இயேசு இறைவனிடம் மன்றாடுகின்றார். ‘பெரிய குருவின் இறைவேண்டல்’ என அழைக்கப்படும் இன்றைய நற்செய்தியில் இயேசு தந்தையைப் பார்த்து, “தந்தையே, உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்” என்கிறார்.
உலகை மீட்கவேண்டும் என்பது தந்தையாம் கடவுளின் திருவுளம். இதை இயேசு நிறைவேற்றிக் கடவுளை மாட்சிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து தந்தையாம் கடவுளும் மகனாம் இயேசுவை மாட்சிப்படுத்தினார்.
இன்றைய முதல் வாசகத்தில் பவுல், எபேசு நகரைச் சேர்ந்த மூப்பர்களைச் சந்தித்து, அவரோடு பேசுகின்றார். பவுல் எபேசு நகரைச் சேர்ந்த மூப்பர்களிடம் பேசுகின்ற வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனித்தால், அவர் கடவுள் தன்னிடம் கொடுத்த பணிகளை பல்வேறு துன்பங்களுக்கு நடுவில் எப்படிச் செய்து முடித்தார் என்பதும் மூப்பர்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதும் நமக்குப் புரியும்.
எனவே, நாம் இயேசுவைப் போன்று, பவுலைப் போன்று கடவுள் நம்மிடம் ஒப்படைத்த பணிகளைத் திறம்படச் செய்துமுடிந்து, அவரைப் மாட்சிப்படுத்துவோம்.
சிந்தனைக்கு:
 இவ்வுலகில் நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய ஒரு பணி இருக்கின்றது. அதை நாம் செய்து முடித்துக் கடவுளை மாட்சிப்படுத்துவது நமது கடமை.
 கடவுளை மாட்சிப்படுத்துவோரைக் கடவுள் மாட்சிப்படுத்துவார்
 கொடுக்கப்பட்ட தாலந்துகளைச் சரியாகப் பயன்படுத்தாதைப் போன்று பெரிய குற்றம் எதுவும் இல்லை.
இறைவாக்கு:
‘உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’ (மத் 5:16) என்பார் இயேசு. எனவே, நாம் நமது நற்செயல்களால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பணிகளைச் செய்து முடிப்பதன் மூலம், கடவுளை மாட்சிப் படுத்தி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.