வாசக மறையுரை (மே 27)

பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரம் வெள்ளிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 18: 9-18
II யோவான் 16: 20-23a
“அஞ்சாதே”
அச்சமும் நம்பிக்கையும்:
சிறுவன் டோனிக்கு தேன்குளவி என்றால் அவ்வளவு அச்சம். காரணம், அதனிடம் இருக்கும் கொடுக்கு தன்னைக் கொட்டிவிட்டால் மிகுந்த வேதனை ஏற்படும் என்பதால்.
ஒருநாள் அவனுடைய படிப்பறைக்குள் எப்படியோ தேன்குளவி ஒன்று நுழைந்துவிட்டது. அதைக் கண்டதும் அவன் சத்தமாக அலறத் தொடங்கினான். அவனுடைய அலறல் சத்தம் கேட்டு, அவனுடைய படிப்பறைக்குள் ஓடிவந்த வந்த அவனுடைய அப்பா, “என்ன ஆயிற்று?” என்று அவனிடம் கேட்க, “தேன்குளவி, தேன்குளவி” என்று அறைக்குள் இங்கும் அங்கும் பறந்துகொண்டிருந்த தேன்குளவியைப் பதற்றத்தோடு சுட்டிக்காட்டினான் அவன்.
உடனே அவனுடைய தந்தை அறைக்குள் இங்கும் அங்கும் பறந்து கொண்டிருந்த தேன் குளவியை மிகுந்த சிரத்தை எடுத்துக் கையில் பிடித்தார். அவ்வாறு அவர் அதைப் பிடிக்கும்போது அது அவருடைய கையில் கொட்டிவிட்டது. அப்போது அவர் தன் மகன் டோனியிடம், “மகனே! இனிமேல் நீ தேன்குளவியைப் பற்றிய அச்சம் இல்லாமல் இருக்கலாம்” என்றார். “எதை வைத்து நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று சிறுவன் டோனி பதிலுக்குக் கேட்டதற்கு, அவர் தன்னுடைய கையில் இருந்த தேன் குளவியின் கொடுக்கைக் காட்டி, “தேன் குளவி என்னைக் கொட்டிவிட்டது. இனிமேல் அது உன்னைக் கொட்டுவதற்கு வாய்ப்பே இல்லை. அதனால்தான் அப்படிச் சொன்னேன்” என்றார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற தந்தை தன் மகனின் அச்சத்தைப் போக்க, தன்மீது வலியை ஏற்றுக்கொண்டார். இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் பவுலிடம், “அஞ்சாதே!” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்த பவுல், தமஸ்கு நகர் நோக்கிச் செல்லும் வழியில் ஆண்டவரால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, பிறவினத்தாருக்கு ஒளியாக இருக்கப் பணிக்கப்பட்டார். இவ்வாறு அவர் நற்செய்தி அறிவித்துப் பிறவினத்தாருக்கு ஒளியாக இருந்து வருகையில் பலவிதமான துன்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வந்தார். இந்நிலையில் பவுலுக்கு ஆண்டவர் காட்சியில் தோன்றி, “அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு. நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார்.
ஆண்டவர் பவுலிடம் கூறிய இந்த வார்த்தைகள் நிச்சயம் அவருக்கு வலுவூட்டி இருக்கும். இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதியில் இடம்பெறும் நிகழ்வே ஆண்டவர் அவரோடு இருந்தார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. ஏனெனில், அவருக்கு எதிராக நடந்த சதி ஒன்றுமில்லாமல் போனது.
இன்றைய நற்செய்தியில் இயேசு, “உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” என்கிறார். பவுலைப் போன்று நாம் கிறிஸ்துவுக்காகத் துன்பங்களை அனுபவிக்கலாம்; அந்தத் துன்பங்கள் எல்லாம் சிறிது காலத்திற்குத்தான்; கிறிஸ்து மீண்டுமாக வரும்போது, அந்தத் துன்பமெல்லாம் இன்பமாக மாறும். அத்தகைய பொருளில் இயேசு, “உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” என்கிறார். எனவே, நமது துன்பம் எல்லாம் சிறிது காலத்திற்குத்தான் என்பதால், ஆண்டவரது உடனிருப்பு எப்போதும் நம்மோடு உண்டு என்ற நம்பிக்கையில் அவரது பணியைத் தொடர்ந்து செய்வோம்.
சிந்தனைக்கு:
 ஆண்டவர் நம்மோடு இருப்பதால் நாம் எதற்கும் அஞ்சிடத் தேவையில்லை.
 எதுவும் இங்கு நிரந்தரமில்லை; நாம் அனுபவிக்கும் துன்பங்கள் உட்பட
 கடவுள் தன்னுடைய பணியைச் செய்வோருக்கு ஆற்றலைத் தொடர்ந்து அளித்து வருகின்றார்.
இறைவாக்கு:
‘அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கின்றேன்; கலங்காதே நான் உன் கடவுள்’ (எசா 41: 10) என்பார் ஆண்டவர். எனவே, நாம் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் அவரது பணியைச் சிறப்பாகச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.