மே 24 : நற்செய்தி வாசகம்

நான் போகாவிட்டால், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 5-11
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால் உங்களுள் எவரும் ‘நீர் எங்கே போகிறீர்?’ என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக் குறித்துத் துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள். நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.
அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார். பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் என்னிடம் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காணமாட்டீர்கள். தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————
“தூய ஆவியாரை உங்களிடம் அனுப்புவேன்”
பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I திருத்தூதர் பணிகள் 16: 22-34
II யோவான் 16: 5-11
“தூய ஆவியாரை உங்களிடம் அனுப்புவேன்”
தூய ஆவியார் விரித்த வலை:
பிரபல எழுத்தாளரான சி.எஸ்.லெவிசிற்கு கல்லூரி மாணவன் ஒருவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அவன் ஒரு நாத்திகன் அவன் அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தான்:
“என்னோடு ஒருசில கிறிஸ்தவ மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அடிக்கடி பேசுவதுண்டு. கடவுள் நம்பிக்கை இல்லாத என்னை அவர்களுடைய பேச்சு அசைத்துவிட்டது. இப்போது நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? உங்களுடைய பதிலுக்காகக் காத்திருக்கின்றேன்.”
கல்லூரி மாணவன் அனுப்பியிருந்த கடிதத்தைப் படித்துப் பார்த்த சி.எஸ்.லெவிஸ் கீழ்க்கண்டவாறு பதில் கடிதம் அனுப்பி வைத்தார்: “உன்னுடைய கடிதம் கிடைத்தது. நீ சொல்வதைப் பார்த்தால், தூய ஆவியார் ‘விரித்த வலையில் விழுந்துவிட்டாய் ‘என நினைக்கிறேன். நிச்சயம் ஒருநாள் நீ கிறிஸ்தவன் ஆவாய் என்ற நம்பிக்கை எனக்கிருகின்றது. நல்ல கிறிஸ்தவனாக வாழ என் வாழ்த்துகள்”
சி.எஸ்.லெவிஸ் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவாறு அந்தக் கல்லூரி மாணவன் கிறிஸ்தவனானான். அவன் பெயர் ஷெல்டன் வனுகென் (Sheldon Vanauken).
ஆண்டவரால் அனுப்பப்பட்ட தூய ஆவியார் இன்று நம் நடுவில் செயலாற்றிக் கொண்டிருக்கின்றார். அதனாலேயே கடவுள் நம்பிக்கை இல்லாத கல்லூரி மாணவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டான். இன்றைய நற்செய்தியில் இயேசு, துணையாளராம் தூய ஆவியாரை அனுப்பப்போவதாக வாக்குறுதி தருகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு தம் சீடரிடம் தூய ஆவியாரைப் பற்றிப் பல முறை பேசியிருந்தார் (யோவா 7: 37-39; 14:16,17, 26; 15:26) இன்றைய நற்செய்தியில் தூய ஆவியார் ஆற்றப்போகும் பணிகளைக் குறித்துப் பேசுகின்றார் இயேசு.
உலகினர் பாவம், நீதி, தீர்ப்பு பற்றிக் கொண்டிருக்கும் கருத்துகள் தவறானவை. இதை இன்றைய முதல் வாசகத்தோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் தெளிவாக விளங்கும். இன்றைய முதல் வாசகத்தில் பவுலும் சீலாவும் எந்தவொரு தவறு செய்யாமல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுத் தண்டிக்கப்படுகின்றார்கள். இந்நிலையில் சிறையில் திடீரென நிலநடுக்கம் ஏற்படுகின்றது. இதற்குப் பிறகு சிறைக்காவலர் தன்னுடைய குடும்பத்தாரோடு சேர்ந்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்பி ஏற்றுக்கொள்கின்றார்.
பவுலையும் சிலாவையும் துன்புறுத்திய சிறைக் காவலர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டது தூய ஆவியாரின் செயலால்தான் என்று உறுதியாகச் சொல்லலாம். ஆகவே, இயேசு தாம் சொன்னது போன்றே தூய ஆவியாரை நம் நடுவில் அனுப்பியிருப்பதால், அவர் வழியாகச் செயல்பட பவுல் மற்றும் சீலாவைப் போன்று நம்மையே நாம் அவரிடம் ஒப்படைப்போம்.
சிந்தனைக்கு:
 தாம் சொன்னது போன்று இயேசு தூய ஆவியாரை அனுப்பியதால், அவரை நாம் உறுதியாய் நம்பலாம்.
 இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கையே நமது மீட்புக்கு ஆதாரம்.
 தூய ஆவியார் நம் நடுவில் செயலாற்றுகின்றார் என்பதை உணர்ந்து, துணிவோடு இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.
இறைவாக்கு:
‘தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் இயேசுவே ஆண்டவர் எனச் சொல்ல முடியாது’ (1 கொரி 12:3) என்பார் புனித பவுல். எனவே, நாம் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.