ஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்

உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15
வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.
அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார். இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்றுரைத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————–
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”
பாஸ்கா எண்கிழமை சனிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 4: 13-41
II மாற்கு 16: 9-15
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”
விவசாயி நற்செய்திப் பணியாளராதல்:
அந்த விவசாயி படித்தது என்னவோ ஐந்தாம் வகுப்புவரைதான். ஆனாலும், அவர் ஆங்கிலத்தை மிகச் சரளமாகப் பேசுவார்; வாசிப்பார்.
ஒருநாள் அவர் தனது விளைநிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது, மேகத்தில் ‘P’ என்ற எழுத்தும், ‘C’ என்ற எழுத்தும் தெரிந்தன. ‘Preach Christ’ என்பதைத்தான் கடவுள் இந்த இரண்டு எழுத்தின் மூலமாக வெளிப்படுத்துகின்றாரோ’ என்று நினைத்த அவர் தன் நிலத்தையும் உடைமைகளையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, இயேசுவைப் பற்றி நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார்.
ஒருநாள் ஒரு நற்செய்திக் கூட்டத்தில் அவர் போதித்துக்கொண்டிருந்தபோது, தான் எப்படி நற்செய்திப் பணியாளர் ஆனேன் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். கூட்டம் முடிந்ததும் பகட்டாக உடை உடுத்தியிருந்த ஒருவர் அவரிடம் வந்து, “P C என்பதை Plant Corn என்றும் எடுத்துக்கொண்டிருக்கலாமே! ஏன் Preach Christ என்று எடுத்துக்கொண்டு, எல்லாவற்றையும் துறந்து நற்செய்தி அறிவிக்க வந்தீர்கள்?” என்றார் அதற்கு நற்செய்திப் பணியாளர் அவரிடம், “உங்களுக்குத் தோன்றியது எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை நீங்கள் சொல்வது போன்று நான் மக்காச் சோளம் பயிரிட்டு அறுவடை செய்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை விடவும், ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியவில்லை” என்று கண்களில் ஒளி மின்னப் பதிலளித்தார்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் விவசாயி ஆண்டவரின் அழைப்பை ஏற்று, விவசாயத்தை விட்டுவிட்டு நற்செய்திப் பணியாளர் ஆனார். இன்றைய இறைவார்த்தை உலகமெங்கும் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நற்செய்தியில் உயிர்த்த ஆண்டவர் இயேசு தம் சீடர்களிடம், “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்றுரைக்கின்றார். இயேசுவின் இந்த அழைப்பை ஏற்று, அவரது சீடர்கள் எப்படி நற்செய்தியை அறிவித்தார்கள் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கின்றது.
இயேசுவின் சீடர்களான பேதுருவும் யோவானும் படிப்பறிவற்றவர்கள்; ஆனாலும் அவர்கள் யூதர்களின் தலைமைச் சங்கத்திற்கு அஞ்சாமல் அவரைப் பற்றித் துணிவுடன் அறிவிக்கின்றார்கள். மேலும் தலைமைச் சங்கத்தில் இருந்தவர்கள் பேதுருவிடமும் யோவானிடமும், “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று கண்டிப்பாய்க் கட்டளையிட்டபோதும், “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்று அவர்கள் உறுதியாய்ச் சொல்கிறார்கள்.
ஒருகாலத்தில் யூதர்களுக்கு அஞ்சி அறைக்குள் இருந்த பேதுருவும் யோவானும் (யோவா 20:19), ஆண்டவரின் உயிர்ப்புக்குப் பிறகு அவரைப் பற்றித் துணிவுடன் அறிவித்தது நமது கவனத்திற்கு உரியது. நாமும் நற்செய்தியை அறிவிப்பது நமது தலையாய கடமை என்பதை உணர்ந்து, அவரைப் பற்றிய நற்செய்தியைத் துணிவோடு அறிவிப்போம்.
சிந்தனைக்கு:
 நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தியை மற்றவருக்கும் அறிவிப்பதே முறை
 ஆண்டவர் தம் பணியைச் செய்யும் அடியாருக்கு ஆற்றல் அளிக்கின்றார். அந்த ஆற்றலாம் அவரைப் பற்றித் துணிவுடன் நற்செய்தி அறிவிப்போம்.
 வார்த்தையால் நற்செய்தியை அறிவிப்பதை விடவும் வாழ்வால் நற்செய்தியை அறிவிப்பது உயர்ந்தது.

Comments are closed.