இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்.” என புனித பேதுரு கூறுகிறார்.
திருமுழுக்குப் பெற்று தூய ஆவியின் கனிகளை பெற்ற நாம் ஒவ்வொருவரும் அவற்றை வாழ்வில் முழுமையாக பயன்படுத்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை.” என மரியாவைக் குறித்து வாசித்தோம்.
மரியாவைப் போல நாமும் நம் அருகில் துன்புறுவோர், நோயுற்றோர், தேவையில் இருப்போர் ஆகியோரில் வாசம் செய்யும் இயேசுவை இனம் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். நாம் தினசரி வாழ்வில் பிறரிடத்தில் இயேசுவை அடையாளம் கொள்ள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை.” என கூறியதைக் கண்டோம்.
உலக காரியங்களில் நாம் பற்றுக் கொள்ளாமல், ஆன்மீக காரியங்களில் மட்டும் நாம் பற்று கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
உயிர்த்த கிறிஸ்து நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் அன்பு, அமைதி, சமாதானம் ஆகியவற்றை கொணர்ந்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று, குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.