ஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்

சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்ப்பதற்காக இறக்கப் போகிறார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 45-57
அக்காலத்தில்
மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர். ஆனால் அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்ததைத் தெரிவித்தனர். தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, “இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்துகொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்? இவனை இப்படியே விட்டு விட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!” என்று பேசிக்கொண்டனர். கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை” என்று சொன்னார்.
இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காகவும், தம் இனத்திற்காக மட்டுமன்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார். ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள்.
அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.
யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழ இருந்தது. விழாவுக்கு முன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப் பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். “அவர் திருவிழாவுக்கு வரவேமாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கோவிலில் நின்று கொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். ஏனெனில் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க எண்ணி அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
______________________________________________
தவக் காலத்தின் ஐந்தாம் வாரம் சனிக்கிழமை
I எசேக்கியேல் 37: 21-28
II யோவான் 11: 45-57
“ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது”
பலருடைய உயிரைக் காப்பாற்றிய பணக்காரர்:
ஜெர்மனியைச் சேர்ந்த மிகப்பெரிய பணக்காரர் ஆல்பிரட் வண்டர்பில்ட் (Alfred Vanderbilt). இவர் 1915 ஆம் ஆண்டு RMS Lusitania என்ற சொகுசுக் கப்பலில் பயணம் செய்தார்.
பயணம் நன்றாகச் சென்றுக்கொண்டிருந்த வேளையில், கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஜெர்மனியின் கடற்படை வீரர்கள் லுசிடனியா கப்பலை, எதிரி நாட்டுக் கப்பல் என நினைத்துத் தவறுதலாகச் சுட்டுவிட்டனர். இதனால் அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்தது.
கப்பலில் பயணம் செய்த பயணிகள் யாவரும் உயிருக்காகப் போராடியபோது ஆல்பிரட் வண்டர்பில்ட் அவர்களை உயிர் காக்கும் படகுகளில் ஏற்றிக் கரைக்கு அனுப்பி வைத்தார். தவிர, உயிர் கவசம் (Life Jacket) இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தாய்க்கும் அவருடைய குழந்தைக்கும் தன்னுடைய உயிர் கவசத்தைக் கழற்றிக் கொடுத்து, அவர்களது உயிரையும் காப்பாற்றினார். இப்படி அவர் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்துபோனார்.
இந்த ஆல்பிரட் வண்டர்பில்ட்டைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி உண்டு. அவர் கடலில் மூழ்கி இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் டைடானிக் கப்பல் கடலில் மூழ்கி, அதில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள் அல்லவா! அதில் அவரும் இறந்திருக்க வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் தனது பயணத்தை இரத்து செய்ததால் அவர் உயிர் பிழைத்தவர், ஆனால், 1915 ஆம் ஆண்டு நடந்த இந்த விபத்தில் பயணிகளைக் காப்பாற்றும் பொருட்டுத் தன் உயிரை இழந்தார்.
ஆம், ஆல்பிரட் வண்டர்பில்ட் மற்றவர்களுக்காகத் தன்னுயிரையே தியாகம் செய்தார். நற்செய்தியில் அனைவருக்காகவும் இயேசு தன்னையே தியாகம் செய்வதைப் பற்றி வாசிக்கின்றோம். இயேசு செய்த தியாகவும் எத்தகையது, அதன்மூலம் என்ன நடந்தது என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசுவின் போதனையையும் அவருடைய செயல்களையும் பார்த்துவிட்டு, பரிசேயர்களும் தலைமைக் குருக்களும் அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தாலும், மக்களில் பலர் அவர்மீது நம்பிக்கை கொண்டார்கள். இவ்வாறு அவர் பலரது வீழ்ச்சிக்கும் எழுச்சிக்குக் காரணமாக இருந்தார் (லூக் 2:34)
இயேசு தன் நண்பரான இலாசரை உயிர்த்தெழச் செய்த பிறகு பலரும் அவர்மீது நம்பிக்கை கொண்டார்கள்; ஆனால், பரிசேயர்கள், மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டால், உரோமையர்கள் தங்கள்மீது படையெடுக்கக் கூடும் என்கிறார்கள். அப்போதுதான் தலைமைக் குருவாக இருந்த கயபா, “இனம் முழுவதும் அறிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்கிறான். கயபா இவ்வார்த்தைகளைத் தாமாகச் சொல்லாமல் இறைவாக்காகச் சொல்கின்றான்.
இயேசுவின் இறப்பு, இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போல, சிதறுண்ட இஸ்ரயேல் மக்களை ஓர் நாட்டினர் ஆக்கியது. அதை விடவும் யூதர், பிற இனத்தார் என்று பிரிந்திருந்த மக்களை ஒன்று சேர்த்தது (எபே 2: 11-18). ஆம். இயேசு அனைவருக்கும் வாழ்வு கொடுக்க வந்தார். அதை அவர் தன்னுடைய பாடுகளின் மூலம் நிரூபித்தார்.
எனவே, நம் அனைவருக்காகவும் தன்னுயிர் தந்த இயேசுவின் தியாகப் பாதையில் நாமும் நடந்து, அவருக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனைக்கு:
 இவ்வுலம் தழைக்க தன்னலம் ஆகாது, பொது நலம் வேண்டும்.
 இயேசுவே வாழ்வின் ஊற்று, அவரைப் பின்பற்றி நடப்போர் வாழ்வினைப் பெறுவர்
 பிறருக்காகத் துன்பங்களைப் பொறுமையோடு ஏற்போம்.

Comments are closed.