வாசக மறையுரை (மார்ச் 11)

தவக் காலத்தின் முதல் வாரம்
வெள்ளிக்கிழமை
I எசேக்கியேல் 18: 21-28
II மத்தேயு 5: 20-26
“சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்’
சினத்தால் அழிந்தவர்:
பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆட்சி செய்தவர் மூன்றாம் ஜார்ஜ். இவருக்கு மருத்துவச் சேவை செய்து வந்தவர் ஜான் ஹண்டர் என்பவர். அறுவைச் சிகிச்சை செய்வதில் முன்னோடியாக இருந்த இவருக்கு அடிக்கடி கடுமையான நெஞ்சு வலி (Angina) வருவதுண்டு. அதற்கு முக்கிய காரணம் இவருக்கு வரும் கட்டுக்கடங்காத சினம்தான். இவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் அவ்வப்போது சொல்வதுண்டு, “என்னுடைய உயிர் எனக்குச் சினமூட்டுகின்றவரின் கையில்தான் உள்ளது.”
ஒருநாள் ஒரு பெரிய அரங்கில் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் இவரும் கலந்துகொண்டார். கலந்துரையாடல் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, இவருக்கும் இன்னொருவருக்கும் காரசாரமான விவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இவர் அந்த மனிதரை அடிக்கும் அளவுக்குப் போய்விட்டார். கூட்டத்தில் இருந்தவர்கள்தான் இருவரையும் விலக்கி விட்டனர்.
கலந்துரையாடல் ஒருவழியாக முடிந்து எல்லாரும் அங்கிருந்து கலைந்துசென்றனர். இவரும் அங்கிருந்து எழுந்து சிறிதுதூரம்தன சென்றிருப்பார். அதற்குள் இவருக்குக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு, கீழே விழுந்து இறந்து போனார்.
சினம் எந்த அளவுக்குக் கொடியது என்பதற்கு ஜான் ஹண்டரின் வாழ்வே ஒரு சான்று. இன்றைய நற்செய்தியில் இயேசு, “சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இன்றைக்குப் பலர் ஒரு பிரச்சனைக்கு மேலோட்டமாகத் தீர்வு சொல்வதுண்டு. இயேசுவோ பிரச்சனையின் வேருக்கே சென்று தீர்வு சொல்கின்றார்.
கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் (விப 20:13) என்று பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருந்தது. ஒருவர் ஏன் கொலை செய்கிறார் என்று நாம் சிந்தித்தால், அவருக்கு ஏற்படும் சினம்தான் காரணமாக இருக்கும். அதனால் இயேசு சினத்தைத் தவிர்த்தால் கொலை செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற விதத்தில், “சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்பு ஆளாவார்” என்கிறார்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், தீயவர் தம் தீய வழியை விட்டுவிட்டு நேர்மையைக் கடைப்பிடித்தால் அவர் வாழ்வார் என்கிறது. இங்கே இடம்பெறும் தீயவர் எதற்கெடுத்தாலும் சினம் கொள்ளக்கூடியவராகவும் இருக்கலாம். எனவே, நாம் சினம் கொள்வதைத் தவிர்த்து, நம்மோடு வாழ்பவரோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டு வாழ்வோம்.
சிந்தனைக்கு:
 மனிதரின் சினம் கடவுளின் விருப்பம் நிறைவேறத் தடையாய் இருக்கின்றது.
 சினம் கொள்பவருக்கு எதிரி வெளியே இல்லை. அவரே அவருக்கு எதிரி.
 கடவுள் யாருடைய அழிவையும் விரும்புவதில்லை என்பதால் நாம் சினத்தைத் தவிர்ப்போம்.
ஆன்றோர் வாக்கு:
‘சினத்தில் பேசப்படும் வார்த்தை குதிரையை விட வேகமாகச் செல்லும்’ என்கிறது சீனப் பழமொழி. எனவே, நாம் சினத்தைத் தவிர்த்து, நல்லுறவோடு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.