மார்ச் 10 : நற்செய்தி வாசகம்
கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 7-12
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.
உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!
ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————
“கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்”
தவக் காலத்தின் முதல் வாரம் வியாழக்கிழமை
I எஸ்தர் (கி) 4: 17 k-m, r-t
II மத்தேயு 7: 7-12
“கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்”
கிடைக்கும் வரை மன்றாடு:
ஒரு தனியார் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக இருந்தான் கிறிஸ்டோபர். சிறிய வயதில் மிகப்பெரிய பொறுப்பில் அமர்ந்திருந்த அவனுடைய வளர்ச்சியைக் கண்டு பலரும் வியப்படைந்தனர்.
ஒருநாள் அவனை நேர்காணல் செய்ய வந்த செய்தியாளர் ஒருவர் அவனிடம், “உங்களுடைய இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணம் என்ன?” என்று கேட்டபோது, அவன், “PUSH’ என்ற மந்திரம்தான் காரணம்” என்றான். செய்தியாளர் ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தார். அப்போது கிறிஸ்டோபர் அவரிடம், “Pray Until Something Happen என்பதைத்தான் சுருக்கி, PUSH என்று சொன்னேன். உண்மையில் நான் கடவுளிடம் கேட்டது கிடைக்கும் வரை நம்பிக்கையோடு மன்றாடுவேன். அதுதான் என் வெற்றிக்குக் காரணம்’ என்று தீர்க்கமாய்ப் பதில் தந்தான்.
ஆம், இந்தக் கிறிஸ்டோபரைப் போன்று நாம் கடவுளிடம் கேட்டது கிடைக்கும் வரை நம்பிக்கையோடு மன்றாடவேண்டும் அப்போது எல்லாம் வல்ல கடவுள் நாம் கேட்டதை நமக்குக் கொடுப்பார். இன்றைய இறைவார்த்தை கேட்போர் யாவரும் பெற்றுக்கொள்கின்றனர் என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யூதர்கள்மீது வெறுப்போடும் குரோதத்தோடும் இருந்தவன் ஆமான். இவன் பாரசீக மன்னரான அகஸ்வேரிடம் யூதர்கள் பற்றித் தவறாகச் சொல்லி, அவர்களைக் கூண்டோடு அழிக்க முடிவு செய்தான். இச்செய்தியை அறிந்த எஸ்தர் அரசி, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் தமது உரிமைச் சொத்தான யூதர்களை எதிரியிடமிருந்து மீட்குமாறு வேண்டுகின்றார். அப்படி அவர் கடவுளிடம் வேண்டுகின்ற இறைவேண்டல்தான் இன்றைய முதல் வாசகம். கடவுள் எஸ்தரின் வேண்டுதலைக் கேட்டு, எதிரியிடமிருந்து இஸ்ரயேல் மக்களைக் காத்தார்.
நற்செய்தி வாசகத்தில் இயேசு, கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று சொல்லி, நாம் ஒவ்வொருவரும் கடவுளிடம் நம்பிக்கையோடு மன்றாடச் சொல்கின்றார். இந்த உண்மையை விளக்குவதற்காக அவர் பயன்படுத்தும் விண்ணகத் தந்தை – மண்ணகத் தந்தை உருவகம் அதி உன்னதமானது.
மனிதர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களிடம் கேட்பவற்றை விடுத்து வேறொன்றைக் கொடுப்பது கிடையாது. அப்படி இருக்கையில், விண்ணகத் தந்தை தன்னிடம் கேட்போருக்கு எவ்வளவு ஆசிகளை வழங்குவார் என்று சொல்லும் இயேசு, நல்லவற்றையே அருளும் கடவுளிடம் தொடர்ந்து மன்றாடச் சொல்கின்றார். அதனால் நாம் நல்ல இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடி, அவரது ஆசியைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
நல்லவராம் கடவுள் நல்லவற்றையே தம் பிள்ளைகளுக்குத் தருவார்.
கடவுள் நம் தேவைகளை அறிந்திருந்தாலும், அவர் தம்மிடம் நம்பிக்கையோடு கேட்க வேண்டும் என்று விரும்புகின்றார்.
இறைவேண்டல் இன்றி இவ்வுலகில் வாழ முடியாது.
இறைவாக்கு:
‘நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தர்’ (திபா 138:3) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நமது மன்றாட்டைக் கனிவுடன் கேட்கும் ஆண்டவரிடம் நம்பிக்கையோடு மன்றாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.