பாவச்சோதனைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தாதீர்கள்

தன் பொதுப்பணி வாழ்வைத் துவக்குவதற்கு முன்னர் நாற்பது நாள்கள் பாலைவனத்தில் தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்ட இயேசு, தான் எத்தகைய மெசியாவாகச் செயல்படப்போகிறேன் என்பதை, அவரை சாத்தான் எதிர்கொண்டவேளையில் நமக்கு வெளிப்படுத்துகிறார் என ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு பாலைவனத்தில் சோதிக்கப்பட்ட நிகழ்வு (லூக்.4:1-13) பற்றிப் பேசும் நற்செய்தி வாசகம் குறித்து மார்ச் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று,  வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘நீர் இறைமகன் என்றால்’ என்ற இயேசுவின் நிலையைச் சுட்டிக்காட்டும் சாத்தான், அதை வைத்து இவ்வுலகப் பொருள் தேவையை நிறைவேற்றவும், அதிகாரத்தைப் பெறவும், இறைவனிடம் இருந்து ஒரு புதுமையைச் செய்துகாட்டவும் என்ற சோதனையை முன்வைக்கும் வேளையில், இயேசு ஒவ்வொரு வேளையிலும் இறைவார்த்தையை மேற்கோள்காட்டி பதிலுரைப்பதைக் காண்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இயேசுவின் முன் சாத்தான் வைத்த அனைத்துச் சோதனைகளும், பொருள்களுக்கும், அதிகாரத்திற்கும், புகழுக்கும் முன்வைக்கப்பட்ட சோதனை, அதில் தீமையே அடித்தளமாக உள்ளது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாத்தானின் கவர்ச்சிகரமான திட்டங்களை புறந்தள்ளும் இயேசு, வெற்றிகரமான பாதையை நமக்குக் காட்டுவதைக் காண்கிறோம் என எடுத்துரைத்தார்.

இறைவார்த்தைகளின் துணைகொண்டு சாத்தானின் சோதனைகளை வெற்றி கொள்ளும் இயேசு, உண்மை மகிழ்வும் சுதந்திரமும் ஒரு பொருளை உடைமையாக்குவதில் அல்ல, மாறாக அதைப் பகிர்வதில் உள்ளது, மற்றவர்களை நமக்காகப் பயன்படுத்துவதில் அல்ல, மாறாக அவர்களை அன்புகூர்வதிலும் உள்ளது, அதிகாரத்திற்கான ஆசையில் அல்ல, மாறாக, பணிபுரிவதன் மகிழ்வில் உண்மை மகிழ்வும் சுதந்திரமும் அடங்கியுள்ளன என்பதை நமக்குக் கற்றுத்தருகிறார், என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பொருள், அதிகாரம், மற்றும் புகழுக்கான சோதனைகள் நம் வாழ்வுப் பயணத்திலும் வருகின்றன, அவை சாத்தானின் சூழ்ச்சியால் நன்மை பயப்பதுபோன்ற வேடமிட்டு நம்முன் வருகின்றன என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் தீச்செயல்களைக்கூட நாம் நல்ல எண்ணத்துடன்தான் ஆற்றினோம் என நியாயப்படுத்த முயலும் நிலைகளுக்கு நாம் செல்லக்கூடாது என்ற விண்ணப்பத்தையம் முன்வைத்தார்.

எவ்வேளையிலும், பாவச்சோதனைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தாதீர்கள், உங்கள் மனச்சான்றை உறங்க அனுமதிக்காதீர்கள், சாத்தானோடு உடன்பாடு கொள்ளாதீர்கள், தீமைகளை எதிர்கொள்ள இறைவார்த்தையின் துணை நாடுங்கள் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த தவக்காலம் நமக்கு பாலைவனத்தின் காலமாக இருக்கட்டும், இக்காலத்தில் மௌனத்திற்கும் இறைவேண்டலுக்கும் நேரத்தை ஒதுக்கி, நம் இதயங்களை குழப்பிக் கொண்டிருக்கும் விடயங்கள் குறித்து சிந்திப்போம், அதன் வழி தீயோனுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்வோம் என விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலப் பாலைவனத்தில் நம்மோடு உடன்பயணித்து நம்  மனமாற்றத்திற்கு அன்னை மரியா உதவவேண்டும் என அன்னை மரியாவை வேண்டுவோம் என உரைத்து தன் ஞாயிறு மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

Comments are closed.