நோயாளிகளோடு தோழமை, குடும்பங்களுக்கு ஆதரவு

புற்றுநோயாளிகள் மற்றும், அவர்களின் குடும்பங்களுக்கு கடந்த நூறு ஆண்டுகளாக ஆதரவுக்கரங்களை நீட்டிவரும், LILT என்ற இத்தாலிய அமைப்பின் உறுப்பினர்களுக்கு, தன் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

LILT அமைப்பு உருவாக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நினைவை அண்மையில் சிறப்பித்த, அந்த அமைப்பின் நூற்றுக்கு மேற்பட்ட பிரதிநிதிகளை, மார்ச் 04, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, புறக்கணிப்பு கலாச்சாரச் சூழலில், புற்றுநோயோளிகளை, அடுத்திருப்பவராக நோக்கி, அவர்களுக்குப் பணியாற்றிவருவதைப் பாராட்டியுள்ளார்.

தாங்கள் பராமரிக்கப்படுவதற்கும், சிகிச்சை பெறுவதற்கும், நோயாளிகள் அனைவரும் உரிமையைக் கொண்டுள்ளனர், மற்றும், இந்த உரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்பத்திலும் நோயிலும்கூட நாம் முழு மனிதர்களாக இருக்கிறோம் என்று உரைத்துள்ளார்.

கிறிஸ்துவின் துன்பங்களில் ஒருவர் பங்குதாரராக இருக்கும்போது, ஒருவகையில், எல்லா மனிதத் துன்பங்களிலும் அவர் பங்குதாரராக இருக்கின்றார், நம்பிக்கை மூலம், கிறிஸ்துவின் மீட்பளிக்கும் துன்பத்தைக் கண்டுணர்கையில், மனிதர் தன் துன்பங்களின் பொருளையும் கண்டுணர்கிறார் என்று, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் Salvifici doloris என்ற தன் திருத்தூது மடலில் கூறியிருப்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இறுதியில், புற்றுநோயாளிகளின் பாதுகாவலரான புனித Leopold Mandić அவர்களிடம், LILT அமைப்பினருக்காகச் செபித்து, அந்த அமைப்பினர், தங்களின் நற்பணிகளைத் தொடர்ந்து ஆற்றுமாறு ஊக்கமும் ஆசிரும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.