போர் ஒருபோதும் வேண்டாம், போரினால் எல்லாமே இழக்கப்படுகின்றன
உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் போர் முடிவுக்குவரவும், அந்நாட்டில் அமைதி நிலவவும், அந்நாட்டிற்காக இறைவேண்டல் மற்றும், உண்ணாநோன்பைக் கடைப்பிடிக்கும் இச்சாம்பல் புதனன்று எல்லாரும் ஒன்றிணைந்து செபிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 02, இப்புதன்கிழமையன்று கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைன் நாட்டின் அமைதிக்காக நாம் கடவுளை மன்றாடவேண்டும் என்று தன் டுவிட்டர் பக்கத்தில், தொடர்ந்து செய்திகளைப் பதிவுசெய்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்றும் செய்திகளை வெளியிட்டுள்ளார்.
தவக்காலத்தில் நுழையும் இந்நாளில், நம் இறைவேண்டலும், உண்ணாநோன்பும், உக்ரைனில் அமைதிக்காக உருக்கமாக விண்ணப்பம் எழுப்புவதாக இருக்கவேண்டும் எனவும், உலகில் அமைதி நிலவுவது என்பது, கிறிஸ்துவைப் பின்செல்வது, மற்றும், நம் தனிப்பட்ட வாழ்க்கையின் மனமாற்றத்தோடு எப்போதும் துவங்குகின்றது என்பதை நாம் மனதில் இருத்தவேண்டும் எனவும், திருத்தந்தை தன் டுவிட்டர் செய்திகளில் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்காக இறைவேண்டல்
“அமைதியின் ஆண்டவராம் கடவுளே, எம் இறைவேண்டல்களுக்குச் செவிசாய்த்தருளும், “போர் ஒருபோதும் வேண்டாம்”, “போரினால் எல்லாமே இழக்கப்படுகின்றன” என்பதை எடுத்துரைக்க, துணிச்சலைத் தந்தருளும், எம் கண்களையும், இதயங்களையும் திறந்தருளும். அமைதியை நிலைநிறுத்த தெளிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள எம் இதயங்களில் துணிச்சலை ஊன்றியருளும், எம்மில், நம்பிக்கையின் சுடர் உயிரூட்டத்துடன் இருக்க உதவும், இதனால், பொறுமை மற்றும், விடாமனஉறுதி ஆகியவற்றோடு உரையாடல் மற்றும், ஒப்புரவுக்கு எம்மை அரப்ப்ணிப்போம், இறுதியில் இவ்வழியில் அமைதி என்ற வெற்றிவாகையைச் சூடுவோம், ஆமென்” என்றும், திருத்தந்தை தன் டுவிட்டர் பக்கத்தில், இறைவேண்டல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், மார்ச் 02, இப்புதன் பொது மறைக்கல்வியுரையை மையப்படுத்தி, டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை, தலைமுறைகளுக்கு இடையே நல்லிணக்க உறவுகள் நிலவவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்.
போலந்து மக்களுக்கு திருத்தந்தை நன்றி
இன்னும், இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் போலந்து நாட்டுத் திருப்பயணிகளுக்கு வாழ்த்துக் கூறியபோது, உக்ரைன் நாட்டிலிருந்து புலம்பெயரும் மக்களுக்கு, போலந்து மக்கள், தங்கள் நாட்டு எல்லைகளையும், இதயங்களையும், இல்லக் கதவுகளையும் திறந்துவிட்டுள்ளதற்கு, திருத்தந்தை தன் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மக்கள் மாண்போடு வாழ்வதற்கு, முதலில் ஆதரவுக்கரம் நீட்டியவர்கள், போலந்து மக்களே என்றுரைத்து, அவர்களின் தாராளமனதையும் திருத்தந்தை பாராட்டியுள்ளார்.
வத்திக்கானில் சிலுவைப்பாதை
தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், உரோம் நேரம் மாலை நான்கு மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் சிலுவைப்பாதை பக்திமுயற்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.