இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய ஞாயிறு திருப்பலி இரண்டாம் வாசகத்தில்,
“உறுதியோடு இருங்கள்; நிலையாய் நில்லுங்கள். ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.” என திருத்தூதர் பவுலடியார் கூறுகிறார்.
இறைப்பணியை நாம் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் நம்மிடம் உள்ள மனக்குறைகளை முதலில் களைய வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற வெளிநாட்டினர் பத்திரமாக தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பவும், அமைதிக்கான பேச்சு வார்த்தைகள் மூலம் உக்ரைன் யுத்தம் விரைவில் முடிவுக்கு வரவும் இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
உலக ஆயர்கள் மாமன்றமானது திருஅவையின் மறுமலர்ச்சிக்காக தற்போது பொது நிலையினரின் மதிப்புள்ள பரிந்துரைகளை நாடுகிறது.
இவ்விடயத்தில் திருஅவையின் எல்லா நிலைகளிலும் தூய ஆவியானவரின் தூண்டுதல் நன்கு செயல்பட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.