நமக்கு எதிராகத் தீமைச்செய்தவர்களை கருணையுடன் அணுகுவோம்

நமக்கு எதிராகத் தீமைசெய்தவர்களை, கோபத்துடனும், வன்முறையுடனும் அணுகாமல், இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, கருணையுடன் அணுகவேண்டும் என நம்பிக்கையாளர்களிடம் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 20ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எந்த ஒரு நிகழ்விலும், பகைமை உணர்வுக்கு இடம்கொடாமல், அதையும் தாண்டி ஒவ்வொருவரும் செல்லவேண்டும் என்பதை இயேசு எடுத்துரைப்பதைச் சுட்டிக்காட்டினார்.

பகைவருக்கு அன்புகாட்டுவதை எடுத்துரைக்கும் ஞாயிறு நற்செய்தி (லூக்.6,27-38) வாசகத்தை மையமாக வைத்து நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு கன்னத்தில் அறைபவர்களுக்கு மறுகன்னத்தையும் காட்டுங்கள் எனக் கூறிய இயேசு, தான் கொலைக்களத்திற்கு தீர்ப்பிடப்பட்டவேளையில், தன் கன்னத்தில் அறைந்தவரை நோக்கி கேள்வி கேட்டதைக் குறித்து எடுத்துரைத்து அதற்கு விளக்கமளித்தார்.

தான் அடிக்கப்பட்டதற்கான காரணத்தை இயேசு கேட்பதன் வழியாக, அநீதியான துன்பங்களை நாம் அமைதியாக ஏற்றுக்கொள்வதையோ, அநீதிக்கு தலைவணங்கிச் செல்வதையோ அவர் அங்கீகரிக்கவில்லை என்பதைக் காட்டியுள்ளார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அநீதியை எதிர்த்து கேள்வி கேட்கும் இயேசுவின் வார்த்தைகள், கோபமாகவோ வன்முறையாகவோ எழுப்பப்பட்டதல்ல, மாறாக, கருணையுடன் கேட்கப்பட்ட கேள்வியே அது என்றார்.

தன்னை அறைந்தவருக்கு இயேசு தாழ்ச்சியுடன் பதிலுரைத்தது, அவர் பெற்ற அறையைவிட மிகப் பலம் வாய்ந்த பதிலுரையாகும், ஏனெனில், இன்னொரு கன்னத்தை காட்டுவது என்பது அநீதியை ஏற்பது அல்ல, மாறாக, தீமையை நம் நன்மையால் வெற்றிகொள்ளும் உள்மன பலத்தைக் காட்டுகிறது என்பதை எடுத்துரைத்து விளக்கினார் திருத்தந்தை.

நாம் தகுதியற்றவர்களாக இருப்பினும், நமக்கு இயேசுவால் இலவசமாக வழங்கப்படும் அன்பு, பழிவாங்கும் உணர்வுகளை நாம் கைவிடவேண்டும் என நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறது என்ற திருத்தந்தை, எதிரிகளையும் அன்புகூர்வது, நம் மனித இயல்புகளால் இயலாத ஒன்றாக இருக்கலாம், ஆனால், நாம் பெறும் இயேசுவின் ஆவியின் வல்லமைகொண்டு அதனை  இயலக்கூடியதாக்கலாம் என மேலும் உரைத்தார்.

கிறிஸ்தவர்கள் என தங்களைப் பற்றிக் கூறி பெருமைப்படுபவர்கள்கூட, மற்றவர்களை எதிரிகளாகக் கருதி, போரை நடத்திவருவதைக் குறித்து ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.