வாசக மறையுரை (பிப்ரவரி 21)

பொதுக் காலத்தின் ஏழாம் வாரம்
திங்கட்கிழமை
I யாக்கோபு 3: 13-18
II மாற்கு 9: 14-29
விண்ணிலிருந்து வரும் ஞானம்!
குறைவான ஞானம் உடையோர் கடவுளிடம் கேட்கட்டும்:
அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டு, ஐந்தாறு ஆண்டுகளே ஆன இளம் அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். இவர் ஒரு சிறிய பங்கில் பங்குப்பணியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அந்தப் பங்கில் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள் வந்ததால், அவற்றைச் சமாளிக்க முடியாமல் இவர் தடுமாறினார். அப்போது இவருக்கு வயதிலும் அனுபவத்திலும் மூத்த ஓர் அருள்பணியாளரின் நினைவு வந்தது. உடனே இவர் அந்த மூத்த அருள்பணியாளரிடம் சென்று, தனது பங்கில் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி, அவற்றிற்கு நல்ல தீர்வுதருமாறு அவரிடம் கேட்டார்.
இளம் அருள்பணியாளர் சொன்னதெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த மூத்த அருள்பணியாளர் இவரைத் தான் இருந்த பங்கு இல்லத்திற்குப் பின்னால் அழைத்துச் சென்று, அங்கு மலராமல் இருந்த ரோஜா மொட்டு ஒன்றைப் பிடுங்கி இவரது கையில் கொடுத்து, “இதனுடைய இதழ்கள் கிழியாமல், இதைத் திறக்க வேண்டும்” என்றார். இதையடுத்து இளம் அருள்பணியாளர் தன்னிடம் கொடுக்கப்பட்ட ரோஜா மொட்டைக் கிழியாமல் திறக்க முயன்றார். முடியவில்லை.
நன்கு யோசித்துவிட்டு இளம் அருள்பணியாளர், மூத்த அருள்பணியாளரிடம், “கடவுளால், இயற்கையாக இந்த ரோஜா மொட்டு மலரும். அப்படியிருக்கையில், இந்த மொட்டை நான் திறக்க முயன்றால் அது கிழிந்துபோகும்” என்றார். “அருமை. இந்தத் தெளிவிருந்தால் போதும்” என்று பேச்சைத் தொடங்கிய மூத்த அருள்பணியாளர், “எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வை நம்மால் கண்டுவிட முடியாது. கடவுளால்தான் அந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தரமுடியும். அதனால் உன்னுடைய பங்கில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வினை நான் தரப் போவதில்லை; கடவுளிடம் கேள். அவர் உன்னுடைய பங்கில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவார்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
ஆம், நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கான தீர்வை கடவுளால் மட்டுமே தரமுடியும். இந்த உண்மையை இந்த நிகழ்வில் வரும் மூத்த அருள்பணியாளர் தன்னிடம் ஆலோசனை கேட்டு வந்த இளம் அருள்பணியாளருக்குச் சொன்னது நமது கவனத்திற்குரியது. இன்றைய இறைவார்த்தை, விண்ணிலிருந்து வரும் ஞானத்தைப் பற்றியும், அதன் தன்மையைப் பற்றியும் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஒருசிலர் தங்களை ‘ஞானி’ போல் காட்டிக்கொள்வார்கள். வெளிப்பார்வைத் தங்களை ‘ஞானி’ போல் காட்டிக்கொண்டாலும் இவர்கள், உள்ளுக்குள் தீமையின் மொத்த வடிவாய் இருப்பார்கள் அடுத்தவர் காலில், கையில் விழுந்து உயர் பதவியை அடைந்துவிடும் இவர்கள், தங்களைப் போன்று மற்றவர்கள் உயர்ந்து விடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள். ஒருவேளை மற்றவர் தங்களுடைய கடின உழைப்பால் உயர்ந்துவிட்டால் இவர்கள் பொறாமையில் வெந்து சாம்பலாகிவிடுவார்கள். இத்தகையோர் உண்மையில் ஞானியே அல்ல; இவர்கள் இருக்கும் இடத்தில் குழப்பம் மட்டுமே மிஞ்சும் என்று இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபு மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.
மண்ணிலிருந்து வரும் ஞானம் பொறாமையையும் கட்சி மனப்பான்மையையும் வருவிக்கும் என்று சொன்ன யாக்கோபு, விண்ணிலிருந்து வந்த ஞானம் எத்தகையதாக இருக்கும் என்பதைத் தொடர்ந்து விளக்குகின்றார். “விண்ணிலிருந்து வரும் ஞானம் தூய்மையாகும்” என்று சொல்லும் யாக்கோபு, இத்தகைய ஞானம் கொண்டிருப்போர் அதைத் தங்களது நன்னடத்தையிலும் பணிவிலும் காட்டட்டும் என்கிறார்.
நற்செய்தியில் இயேசுவின் சீடர்களால் (பேதுரு, யாக்கோபு, யோவான் தவிர்த்து) ஒரு சிறுவனிடமிருந்து பேயை ஓட்ட முடியாமல் போய்விடுகின்றது. இதற்குக் காரணம், அவர்களிடம் நம்பிக்கை இல்லாமல் போனது ஒருபக்கம் என்றால், அவர்களிடம் பணிவு இல்லாமல் போனது இன்னொரு பக்கம். ஒருவேளை சீடர்களிடம் விண்ணிலிருந்து வந்த ஞானத்தின் வெளிப்பாடான தாழ்ச்சியும் நம்பிக்கையும் இருந்திருந்தால், அவர்களால் சிறுவனிடமிருந்து பேயை ஓட்டியிருக்க முடியும்!
எனவே, நாம் மண்ணக ஞானத்தோடு இருந்தால், விண்ணக ஞானத்தை இறைவன் அருளுமாறு அவரிடம் கேட்போம்.
சிந்தனைக்கு:
 கடவுள் ஒருவரால் மட்டுமே ஞானத்தை வழங்க முடியும்.
 பொறாமையும் வெறுப்பும் இருக்கும் இடத்தில் கடவுள் இருப்பதே இல்லை.
 ஞானம் நிறைந்தவர்கள் கடவுளின் மக்களாய் இருக்கின்றார்கள். ஏனெனில், கடவுள் ஞானத்தின் பிறப்பிடமாக இருக்கின்றார்
இறைவாக்கு:
‘கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் வாயினின்று ஞானம் பொங்கி வழியும்’ (நீமொ 10:31) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்து, அவரது ஞானத்தையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.