நம் துயர வேளைகளில் இயேசுவின் இரக்கம் வெளிப்படுத்தப்படுகிறது
மீன்கள் கிடைக்காமல், ஏமாந்திருந்த மீனவர்களை அணுகிய இயேசு, அவர்களின் படகில் ஏறி, மீண்டும் வலைகளை வீசச் சொன்னதைக் கூறும் இன்றைய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் நாம் காண்பதுபோல், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தினசரி இயேசுவின் தலையீடும் ஊக்கமும் உள்ளது என ஞாயிறு மூவேளை செபஉரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
பிப்ரவரி 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு, மற்றும் அவருடன் இருந்தவர்கள், இரவு முழுவதும் வலைவீசியும் மீன்கள் கிடைக்காத நிலையில் இருந்தபோது இயேசு அவர்களை அணுகிச்சென்று அவர்களின் படகில் ஏறியதையும், அதனை சற்றுத் தள்ளிக் கொண்டுபோகச் சொல்லி போதித்ததையும் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
இரவு முழுவதும் முயன்றும் தோல்வியில் திரும்பிய மீனவர்கள், இயேசுவின் போதனைக்குப்பின், அவரின் ஆலோசனையைக் கேட்டு வலைகளை வீசி பெருமளவான மீன்களைப் பிடித்ததைப்போல், நம் தினசரி வாழ்வுநடவடிக்கைகளிலும் இடம்பெறுவதைக் காணலாம் என எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தினமும் நம் வீட்டிலிருந்து கிளம்பி நம் தினசரி வாழ்வில் ஈடுபடும் நாம், நம் கனவுகளை செயல்படுத்துவதிலும், நம் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும், உறவுகளில் அன்பை அனுபவிப்பதிலும் பலவேளைகளில் தோல்விகளைச் சந்தித்துத் திரும்பினாலும், இயேசு நம் மனம் எனும் படகில் ஏறி நமக்கு இடும் கட்டளைகளை நிறைவேற்றும்போது மிகுந்த பலனை அடைகின்றோம் என எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மீன் கிடைக்காமல் காலியாக இருந்த படகு இயேசுவை ஏற்றிச்சென்றதைப்போல், நம் இதயங்களும் இயேசுவின் படகாக மாறி அங்கிருந்து அவர் போதிக்க நாம் உதவமுடியும் என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஏழ்மையின் மூலமாக அவர் வழங்கும் செல்வத்தையும், நம் துயர்கள் வழியாக அவரின் இரக்கத்தையும் நம் வழியாக இயேசு எடுத்துரைக்கிறார் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்மை நெருங்கிவர விரும்பும் இயேசுவை நம் இதயங்களில் வரவேற்க நாம் தயராக இருக்கிறோமா என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பாவிகளாக இருந்தாலும், இறைவன் நம்மைத் தேடிவருவதை விட்டு விலகிச் செல்வதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இஞ்ஞாயிறு நற்செய்தியில் புனித பேதுருவின் நம்பிக்கையை இயேசு கட்டியெழுப்பியது குறித்தும், பின்னர் இயேசுவின் மீது புனித பேதுரு நம்பிக்கை வைத்தது குறித்தும் காணும் நாம், இயேசுவை நம் படகில் ஏற்றி பயணிக்கும்போது, எவ்வித அச்சமும் இன்றி நம்மால் முன்னோக்கிச்செல்ல முடியும் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.