பிப்ரவரி 6 : நற்செய்தி வாசகம்

அனைத்தையும் விட்டுவிட்டு, சீடர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11
ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.
அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன.
இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார்.
அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
அழைப்பு, அறிவிப்பு, நிலைத்திருப்பு
பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறு
I எசாயா 6: 1-8
II 1 கொரிந்தியர் 15: 1-11
III லூக்கா 5: 1-11
அழைப்பு, அறிவிப்பு, நிலைத்திருப்பு
சீனாவின் அன்னை தெரசா:
சீனாவின் ‘அன்னை தெரசா’ என அழைக்கப்படுகின்றவர் கிளாடிஸ் எல்வர்ட் (Gladys Aylward 1902-1970) சீனாவில் உள்ள மக்களுக்கும், தொடர்ந்து ஹாங்காங்கில் உள்ள மக்களுக்கும் நற்செய்திப் பணியோடு, சமூகப் பணியையும் செய்த இவரது வாழ்க்கையை நாம் படித்துப் பார்க்கின்றபோது, கடவுள் எப்படிச் சாதாரண மனிதர்களைத் தனது பணிக்கென அழைத்து, அவர்களை உயர்த்துகின்றார் என்பது நமக்குப் புரியும்.
இங்கிலாந்தில் உள்ள லிவர்போல் என்ற ஊரில் பிறந்த கிளாடிஸ் எல்வர்ட், தனது பதின்வயதில் ஒரு மாத இதழை வாசிக்க நேர்ந்தபோது, ‘சீனாவில் நற்செய்தி அறிவிக்கத் தயாரா?’ என்றோர் அறிவிப்பைக் கண்டார். உடனே இவர், இயேசுவைப் பற்றி அறியாத மக்களுக்கு அவரது நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.
சீனாவில் நற்செய்தி அறிவிக்க, அந்த மொழியைக் கற்றாக வேண்டும் அல்லவா! ஆகையால், சீன மொழியில் கடவுளின் வார்த்தையை எப்படி அறிவிக்க வேண்டும் என்பது பற்றிக் கற்றுத் தந்துகொண்டிருந்த பயிற்சிப் பாசறைக்குச் சென்றார் இவர். அங்கிருந்தவர்களோ இவருக்குச் சீன மொழி சரியாக வரவில்லை என்று, இவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். இதனால் இவர் மிகுந்த வருத்தத்தோடு வீட்டிற்குத் திரும்பி வந்தார்.
இந்நிலையில் சீனாவில் நற்செய்தியை அறிவித்துக்கொண்டே அனாதைக் குழந்தைகளையும் கவனித்து வந்த 72 வயது நிரம்பிய ஜென்னி லாசன் என்ற பெண்மணி தனது பணியைத் தொடர விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று செய்தித்தாளில் அறிவிப்புக் கொடுத்தார். கிளாடிஸ் எல்வர்ட் அதற்கு விண்ணப்பிக்கவே, ஒருமனதாகத் தேர்ந்துகொள்ளப்பட்டார். இதையடுத்து, 1932 ஆம் ஆண்டு கிளாடிஸ் எல்வர்ட் சீனாவிற்குப் புறப்பட்டுச் சென்று, ஜென்னி லாசனின் பணியைத் தொடர்ந்தார். சீனா மொழி வரவே வராது என்று புறக்கணிக்கப்பட்ட இவர் சீனாவிற்குச் சென்றதும், மிக எளிதாகச் சீனமொழியைக் கற்றுக்கொண்டு அங்குள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். இவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டுப் பலர் இயேசுவில் நம்பிக்கை கொண்டார்கள். கூடவே இவர் அங்கிருந்த அனாதைக் குழந்தைகளையும் கவனித்து வந்தார். 1938 ஆம் ஆண்டு சீனாவில் போர் மூண்டபோது இவர் அனாதைக் குழந்தைகளைத் தன்னோடு கூட்டிக்கொண்டு ஹாங்காங்கிற்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கு நற்செய்தியைப் பணியையும் சமூகப் பணியையும் செய்து, பலரையும் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
ஆம், சீன மொழி பேச வராது என்று புறக்கணிக்கப்பட்ட கிளாடிஸ் எல்வர்ட், சீன மொழியை மிக எளிதாகக் கற்றுக்கொண்டு, சீனாவில் உள்ள மக்களுக்கும், இன்னும் பலருக்கும் மிகுந்த வல்லமையோடு நற்செய்தி அறிவித்து, அவர்களை இயேசுவில் நம்பிக்கை கொள்ளச் செய்தது, கடவுள் தகுதியானவர்களை அழைப்பதில்லை; அழைப்பவர்களைத் தகுதியானவர்களாக மாற்றுகின்றார் என்கிற செய்தியை நமக்கு உணர்த்துகின்றது. பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு இதே செய்தியைத்தான் கூறுகின்றது. நாம் அது குறித்துச் சிந்திப்போம்.
எல்லாரையும் அழைக்கும் இறைவன்:
‘இறைப்பணியை ‘இவர்கள்’தான் செய்யவேண்டும். ‘அவர்கள்’ எல்லாம் செய்யக்கூடாது’ என்று இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலேயே மனிதர்களைப் பிரித்து வைக்கும் ஓர் அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், ஆண்டவராகிய கடவுள் இதற்கு முற்றிலும் மாறாக, எல்லாரும் தன்னுடைய பணியைச் செய்யலாம் என்று பாவிகள், தன்னைத் துன்புறுத்தியவர் என்று யாவரையும் தனது பணிக்கென அழைக்கின்றார்.

Comments are closed.