வாசக மறையுரை (பிப்ரவரி 05)

பொதுக் காலத்தின் நான்காம் வாரம்
சனிக்கிழமை
I அரசர்கள் 3: 4-13
II மாற்கு 6: 30-34
“ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருளும்”
ஞானத்திற்குப் பதிலாக செல்வத்தைக் கேட்டிருக்கலாமோ?:
Reader Digest என்ற ஆங்கில மாத இதழில் வந்த துணுக்கு இது.
ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்த, ஒரு குறிப்பிட்ட துறையைச் சார்ந்த பேராசிரியர்களுடைய கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது அந்தத் துறைத் தலைவருக்கு முன் தோன்றிய வானதூதர் ஒருவர் அவரிடம், “உங்களுடைய இத்தனை ஆண்டுகாலத் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி உங்களுக்குக் ஞானம், செல்வம், அழகு இந்த மூன்றில் ஏதாவது ஒன்றைத் தரலாம் என்று வந்திருக்கின்றேன். உங்களுக்கு அது தேவையோ, கேளுங்கள். அதை நான் உங்களுக்குத் தருகின்றேன்” என்றார்.
துறைத் தலைவர் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, “எனக்கு ஞானம் வேண்டும்” என்றார். “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு வானதூதர் அங்கிருந்து மறைந்தார். அவர் அங்கிருந்து மறைந்த பிறகு துறைத் தலைவரைச் சுற்றி ஒளிவட்டம் தெரிந்தது. அதைப் பார்த்து வியந்தபோன, அதே துறையில் இருந்த ஏனைய பேராசிரியர்கள், “அறிவுப்பூர்வமாக ஏதாவது பேசுங்கள்” என்றார்கள். துறைத் தலைவரோ, “ஞானத்திற்குப் பதில் செல்வத்தைக் கேட்டிருக்கலாமோ!” என்று குழம்பிய நிலையில் பதிலளித்தார்.
ஆம். பலருக்கு இந்த நிகழ்வில் வரும் துறைத் தலைவரைப் போன்று ஞானத்தை விடவும், செல்வமும் இன்ன பிறவும் பெரிதாகத் தோன்றுகின்றன. இந்நிலையில், இன்றைய முதல் வாசகத்தில், சாலமோன் ஆண்டவரிடம், “ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்” என்று கேட்கின்றார். கடவுள் அளிக்கும் ஞானம் எத்துணை இன்றியமையாதது என்பது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தனது தந்தை தாவீதின் மறைவிற்குப் பிறகு, ஆட்சிப் பொறுப்பில் அமரும் சாலமோனுக்கு ஆண்டவர் கனவில் தோன்றி, “உனக்கு எனக்கு வேண்டும்? கேள்” என்கிறார். சாலமோன், இஸ்ரயேலின் அரசராகப் பதவி ஏற்றபோது அவருக்கு வயது இருபதுதான். ஆகவே, அவர் தான் வயதில் சிறுவன் என்பதை உணர்ந்தவராய், “உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்” என்று கேட்கின்றார். இதனால் பெரிதும் மகிழ்ந்த கடவுள் அவருக்கு ஞானத்தோடு எல்லா ஆசிகளையும் வழங்குகின்றார்.
சாலமோன், அரசராகப் பதவி ஏற்ற காலத்தில், இஸ்ரயேலில் நாற்பது இலட்சம் பேர் இருந்தனர் (2சாமு 24:9). அத்தனை போரையும் வழிநடத்துவது கடினமானது என்பதால், அவர் கடவுளிடம் ஞானத்தைக் கேட்கின்றார். கடவுளோ அவர் கேட்ட ஞானத்தை மட்டுமல்லாது; அவர் கேளாத ஆசிகளையும் வழங்குகின்றார்.
நற்செய்தியில், தூய ஆவியாரால் அருள்பொழிவு பெற்ற இயேசு ஞானம் நிறைந்தவராய்ப் பணித்தளத்திலிருந்து திரும்பி வந்த தனது சீடர்களிடம் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று, ஓய்வெடுக்கச் சொல்கின்றார். மேலும், ஆயனில்லா ஆடுகள் போன்று இருந்த மக்கள்மீது பரிவு கொள்கின்றார்.
இயேசுவின் ஞானம் தனது சீடர்கள்மீதும் மக்கள்மீதும் அவரைப் பரிவு கொள்ளச் செய்தது. நாம் கடவுளிடம் ஞானத்தைக் கேட்டு, அந்த ஞானத்தால் மக்கள்மீது பரிவுகொண்டு வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனைக்கு:
 ஞானம் ஒன்றே அழியாத செல்வம்
 ஞானத்தைக் கடவுளால் மட்டுமே தரமுடியும் என்பதால், அதைக் கடவுளிடம் கேட்போம்.
 ஒருவரின் வாயிலிருந்து வரும் சொற்களே அவர் எத்துணை ஞானம் நிறைந்தவர் என்பதைக் காட்டும் கண்ணாடி

Comments are closed.