அர்ப்பணவாழ்வில் புதுப்பிக்கப்பட்ட பார்வையை வளர்த்துக்கொள்ளுங்கள்

இயேசுவை கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருநாள்  திருப்பலியை நிறைவேற்றி மறையுரை வழங்கிச் சிறப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வந்த மெசியாவைக் காணும்பொருட்டு காத்திருந்த வயது முதிர்ந்த சிமியோன், அன்னா ஆகிய இரண்டு நபர்கள் குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிமியோன் தூய ஆவியாரால் தூண்டப்படுகிறார், பின்னர் அவர் குழந்தை இயேசுவில் மீட்பைக் காண்கிறார், இறுதியாக அவர் அவரைத் தன் கைகளில் எடுத்துக்கொள்கிறார் என்று மூன்று செயல்களை மையப்படுத்தி பேசினார்.

சிமியோனைப் போலவே, தூய ஆவியானவர் கடவுளின் பிரசன்னத்தையும் செயல்பாட்டையும் பெரிய விடயங்களிலோ அல்லது  வெளிப்புறத் தோற்றங்களிலோ அல்ல, மாறாக, சிறிய மற்றும் பலவீனத்தில் பகுத்தறிய நமக்கு உதவுகிறார் என்றும் விளக்கியதோடு, எது நம்மை இயக்குகிறது? தூய ஆவியா அல்லது இவ்வுலக காரியங்களுக்குரிய ஆவியா என்ற முதல் கேள்வி எழுப்பினார்.

“ஒரு குழந்தையின் மனநிலையில் கடவுளைப் பார்க்கத் தூய ஆவியானவர் நம்மைத் தூண்டுகிறார் என்றும்  சில சமயங்களில் நமது முடிவுகளையும், இலக்குகளையும், அர்ப்பணிப்பையும்  வெற்றிகளின் அடிப்படையில் மட்டுமே காணும் அபாயம் உள்ளது என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறர் நம்மை பார்க்கவேண்டும் என்பதற்காகவும், எத்தனை முறை நமது சாதனைகள் அமைந்திருக்கின்றன என்பதன் அடிப்படையிலும் நமது செல்வாக்கைத் தேடுகிறோம் என்றும் எச்சரித்தார்.

தூய ஆவியானவர் நம்மிடம் எதையும் கேட்கவில்லை என்றும், நாம் அன்றாட வாழ்வில் நம்பகத்தன்மையை வளர்த்துக்கொள்ளவும், நம் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட சிறிய விடயங்களில் கவனமாக இருக்கவுமே அவர்  விரும்புகிறார் எனவும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரண்டாவதாக, நம் கண்கள் எதைப் பார்க்கின்றன? என்ற கேள்வியில் தன் கவனத்தை திருப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்மை ஓர் இரக்கம் நிறைந்த பார்வையுடன், எப்பொழுதும் நம்மையும் நம் உலகத்தையும் பார்க்க புதிய கண்களைத் தருகிறார் என்றும் குறிப்பிட்டார்.

இந்தப் பார்வையானது வெளித்தோற்றத்தில் நின்றுவிடாது,  நமது பலவீனங்கள் மற்றும் தோல்விகளின் பிளவுகளுக்குள் நுழைந்து அங்கேயும் கடவுளின் பிரசன்னத்தைக் கண்டறிய உதவும் என்றுரைத்த  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் கண்களைத் திறந்து நமது வாழ்க்கையையும் நமது சமூகங்களையும் புதுப்பிக்க ஆவியானவர் நம்மை அழைக்கிறார் என்பதை உணர்வோம் என்றும் அழைப்பு விடுத்தார்.

இறுதியாக,  நம் கரங்களில் எதை எடுத்துக்கொள்வது? என்ற மூன்றாவது கேள்வியில் தனது கவனத்தை செலுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில சமயங்களில் ஆயிரம் வித்தியாசமான விடயங்களில் சிக்கிக்கொள்கிறோம் என்றும், சிறுசிறு பிரச்சினைகளில் அல்லது புதிய திட்டங்களில் மூழ்கிவிடுவோம் என்றும், ஆனாலும், எல்லாவற்றின் மையமும் கிறிஸ்துவே என்றும்,  அவரையே நம் வாழ்வின் ஆண்டவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி தன் மறையுரையை நிறைவு செய்தார்.

Comments are closed.