சனவரி 28 : நற்செய்தி வாசகம்

நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34
அக்காலத்தில்
இயேசு கூட்டத்தை நோக்கி, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.
மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என்று கூறினார்.
அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————–
பொதுக்காலத்தின் மூன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை
I 2சாமுவேல் 11:1-4ac, 5-10a, 13-17
II மாற்கு 4:26-34
கண்டார், கொண்டார், கொன்றார்
ஆப்பிரிக்கர்கள் வாத்துகளைக் பிடிக்கும் முறை:
ஆப்பிரிக்கர்கள் ஆற்றில் நீந்திக்கொண்டிருக்கும் வாத்துகளைப் பிடிப்பதற்கு வித்தியாசமானதொரு வழிமுறையைப் பின்பற்றுவது உண்டு. அவர்கள் வாத்துகளைப் பிடிப்பதற்குப் பின்பற்றும் வழிமுறை இதுதான்.
ஆற்றில் வாத்துகள் நீந்திக்கொண்டிருப்பதைக் காணும் அவர்கள் ஒரு பூசணிப் பழத்தை அவற்றுக்கு முன் அனுப்பி வைப்பார்கள். முதன்முறையாக பூசணிப் பழத்தைக் காணும் வாத்துகள் பதறிப்போய் வேறு பக்கம் நீந்திச் செல்லும். இதையடுத்து அவர்கள் வாத்துகள் இருக்கும் பகுதியில் இன்னொரு பூசணிப் பழத்தை அனுப்பி வைப்பார்கள். இந்த முறை முன்பு போல் அவை பதற்றமடியாமல், அதை வெறித்துப் பார்க்கும். மூன்றாம் முறை, நான்காம் முறை, ஐந்தாம் அவர்கள் பூசணிப் பழத்தை அனுப்பி வைக்கின்றபோது, பூசணி பழம் ஆற்றில் ஓர் அங்கம் என நினைத்துகொண்டு, அவை அதற்குப் பழகிவிடும்.
இதுதான் சரியான தருணம் என உறுதிகொண்டு வாத்துகளைப் பிடிப்பவர்கள் தங்கள் தலைமேல் பூசணிப் பழத்தைக் கட்டிக்கொண்டு ஆற்றோடு நீந்திச் சென்று, வாத்துகளை ஒவ்வொன்றாகப் பிடித்து, மாலையில் அவற்றைக் கொண்டு பெரிய விருந்து படைப்பார்கள்.
இந்த வாத்துகள் எப்படிப் பூசணிப் பழங்களுக்கு மெல்ல பழக்கப்பட்டு விடுகின்றதோ, அப்படித்தான் சிலர், ‘இதெல்லாம் பாவமா? என்று நினைத்துப் பாவம் செய்யத் தொடங்கி, பாவத்தில் வீழ்ந்து தங்கள் வாழ்வைத் தொலைத்துவிடுகின்றார்கள். இன்றைய முதல் வாசகத்தில் தாவீது உரியாவின் மனைவியோடு பாவம் செய்தது குறித்து வாசிக்கின்றோம். அவர் செய்த அந்த ஒரு பாவம் மற்ற பாவங்களுக்கு எப்படிக் காரணமாக இருக்கின்றது என்று சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தாவீது மன்னர் உரியாவின் மனைவி பத்சேபாவுடன் செய்த தவற்றினை மூன்று வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், கண்டார், கொண்டார், கொன்றார் என்று சொல்லலாம்.
ஆம், போருக்குப் போகவேண்டிய தாவீது போருக்குப் போகாமல் மாடியில் உலாவிக்கொண்டிருந்தால், குளித்துக்கொண்டிருந்த உரியாவின் மனைவி பத்சேபாவைக் கண்டார். பின்னர் அவர் பத்சேபாவை அழைத்து அவளோடு உடலுறவு கொண்டார். அந்தத் தவறு வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக உரியாவைப் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்து அவரைக் கொன்றார். இவ்வாறு தாவீது ஒரு தவற்றைச் செய்யத் தொடங்கி, தவற்றிற்கு மேல் தவற்றைச் செய்து, ஆண்டவர் கொடுத்த கட்டளையை மீறுகின்றார்.
நற்செய்தியில் இயேசு, கடுகு விதை உவமையைச் சொல்கின்றார். இந்தக் கடுகு விதை அளவில் சிறிதாக இருந்தாலும் அது வளர்ந்து, வானத்துப் பறவைகள் தங்குகின்ற அளவுக்குப் பெரிதாகின்றது. பாவமும் கூட முதலிலேயே அகற்றப்படாவிட்டால், அது வளர்ந்து பெரிதாகி, ஒருவரின் வாழ்வை ஒன்றுமில்லாமல் செய்துவிடும். எனவே, நாம் பாவத்தைத் தவிர்த்து, ஆண்டவர்மீது உள்ள அன்பில் வளருவோம்.
சிந்தனைக்கு:
 பாவம் என்ற மாய வலையில் சிக்கிக் கொள்வோர் தங்கள் வாழ்வைத் தொலைத்து விடுகின்றனர்.
 தீமையைத் தேடாமல், நன்மையைத் தேடுவோர் வாழ்வடைகின்றனர்.
 ஆண்டவரில் நிலைத்திருப்போர் பாவத்தை வெறுத்து ஒதுக்குவர்.
இறைவாக்கு:

Comments are closed.