வாசக மறையுரை (ஜனவரி 17)
பொதுக்காலத்தின் இரண்டாம் வாரம்
திங்கட்கிழமை
I சாமுவேல் 15: 16-23
II மாற்கு 2: 18-22
“கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது”
முதலில் கீழ்ப்படி:
‘புகை பிடிக்காதே; புகை பிடித்தால் உடலுக்குக் கேடு வரும்” என்று கதிரின் தந்தை அவனிடம் பலமுறை சொல்லியிருந்தார். ஆனாலும், அவன் தன் தந்தையின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், அவருக்குத் தெரியாமல் புகை பிடித்து வந்தான். கதிர் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்துவிட்டான். அங்குதான் அவன் தனது நெருங்கிய நண்பர்களிடமிருந்து இந்தப் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொண்டிருந்தான்.
“நண்பர்கள் என்பவர்கள் நல்ல வழியில் வழிநடத்த வேண்டும்; இப்படியா தவறான பாதையில் வழி நடத்துவது? இப்படிப்பட்ட நண்பர்களோடு பழகுவதை தவிர்த்துவிடு” என்றுகூட கதிரின் தந்தை அவனிடம் சொல்லி இருந்தார். அப்படியிருந்தும் அவன் தன் தந்தையின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல், தவறான நண்பர்களோடு பழகி வந்தான்.
ஒருநாள் காலையில் கதிரின் தந்தை தற்செயலாக தனது பண்ணை வீட்டிற்கு வந்தார். பண்ணை வீட்டிற்குப் பின்னால் புகை வந்துகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அங்கே சென்றார். அங்கே கதிர் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான். அவன் தன் தந்தையைக் கண்டதும், நிலைமையைச் சமாளிக்கும் வகையில், “அப்பா! நகரில் சர்க்கஸ் போட்டிருக்கின்றார்களாம்! இன்றிரவு நாம் அங்கே போகலாமா?” என்றான். அதற்கு அவனுடைய தந்தை, “சர்க்கசிற்குப் போவது இருக்கட்டும். முதலில் நான் சொன்னதற்குக் கீழ்ப்படிந்து, இந்தப் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடு” என்றார்.
ஆம், பெற்றோருக்கும் சரி, கடவுளுக்கும் சரி கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அதுவே ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முதன்மையான செயல். இன்றைய இறைவார்த்தை கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியர்கள், அமலேக்கியர்கள் எனப் பலர் அச்சுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேலின் முதல் அரசனான சவுலிடம் அமலேக்கியரை முற்றிலும் அழித்துவிடு என்கிறார். சவுலோ, கடவுள் சொன்ன இந்த வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல், அமலேக்கியரை முற்றிலுமாக அழிக்காமல், அவர்களுடைய மன்னன் ஆகாகைக் கொண்டு வருகின்றார். இது தொடர்பாக சாமுவேல் சவுலிடம் கேட்கும்போது அவர் தன் தவற்றை ஒத்துக்கொள்ளாமல் அதை நியாயப்படுத்துகின்றார். அப்பொழுதுதான் சாமுவேல் அவரிடம், “கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது” என்றார்.
சாதாரண நிலையில் இருந்த சவுலை (1சாமு 9:21) ஆண்டவர் இஸ்ரயேலின் அரசராக உயர்த்தினார். அப்படியிருக்கையில் அவர் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமல் போனதால், அரச பதவியிலிருந்து தூக்கி எறியப்படுகின்றார்.
நற்செய்தியில் நோன்பு பற்றிய கேள்வி எழுகின்றபோது, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியுமா?” என்று சொல்லி இயேசு சரியான பதில் அளிக்கின்றார். நோன்பும், கடவுளுக்கும் நாம் செலுத்தும் பலியும் முக்கியம்தாம்; ஆனால், அதைவிட முக்கியம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது. ஆகவே, நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, உண்மையான பலி செலுத்துவோம்.
சிந்தனைக்கு:
ஆண்டுக்கொரு முறை நோன்பிருந்தாலே போதும் (லேவி 16:29,31) என்றிருந்தபோது, பரிசேயர்கள் அதனை வாரத்திற்கு இரண்டுமுறை (லூக் 18:9-14) என்று மாற்றியது பரிசேயர்களின் தன்முனைப்பைக் காட்டுகின்றது.
மேம்போக்கான பக்தி முயற்சிகளை விட, உண்மையான அன்பு மேலானது
சமயம் என்ற பெயரில் தேவையில்லாதவற்றை மக்கள்மீது திணிப்பதும் அநீதிதான்.
இறைவாக்கு:
‘நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகிறேன்’ (ஓசே 6:6) என்பார் ஆண்டவர். எனவே, நாம் இரக்கத்தையும் அன்பையும் கடைப்பிடித்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.