புனிதர் † ✠ கார்லியோன் நகர் புனிதர் பெர்னார்ட் ✠ (St. Bernard of Corleone)
மறைப்பணியாளர் :
(Religious)
பிறப்பு : ஃபெப்ரவரி 6, 1605
கார்லியோன், சிசிலி, சிசிலி அரசு
(Corleone, Sicily, Kingdom of Sicily)
இறப்பு : ஜனவரி 12, 1667 (வயது 61)
பலெர்மோ, சிசிலி, சிசிலி அரசு
(Palermo, Sicily, Kingdom of Sicily)
ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு பட்டம் : மே 15, 1768
திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமென்ட்
(Pope Clement XIII)
புனிதர் பட்டம் : ஜூன் 10, 2001
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)
நினைவுத் திருநாள் : ஜனவரி 12
பாதுகாவல் : கொர்லியோன் (Corleone)
“ஃபிலிப்போ லட்டினோ” (Filippo Latino) என்னும் இயற்பெயர் கொண்ட புனிதர் பெர்னார்ட், ஒரு கத்தோலிக்க புனிதர் ஆவார். இவர், கி.பி. 1605ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 6ம் நாளன்று, “சிசிலி” (Kingdom of Sicily) அரசில் உள்ள “கார்லியோன்” (Corleone) என்ற இடத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி ஆவார். இவரும் தந்தையின் தொழிலான செருப்பு தைக்கும் பணியையே கற்று செய்து வந்தார். இவரது தந்தை இறந்ததும் இவர் ராணுவத்தில் சேர்ந்தார். கத்தி சண்டை கற்று அதில் சிறந்த திறன் பெற்றார். சிறு ஆத்திரமூட்டும் சம்பவத்திற்கும் கத்தியை உரையிலிருந்து உருவும் மனப்பாங்கு கொண்டிருந்தார்.
குறிப்பிடத்தக்க வகையில் மதப்பற்று கொண்டிராதவராயிருப்பினும், முதியோர்களை பாதுகாப்பதிலும், பாதுகாப்பற்ற மற்றும் உதவியற்ற நிலையில் உள்ளவர்களையும் வன்முறைகளில் இருந்து பாதுகாப்பு கொடுப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். உள்ளூரில் உள்ள ஒரு சிலுவையடிக்கு அடிக்கடி சென்று ஒரு விளக்கு எப்போதும் அங்கு எரிந்துகொண்டிருக்குமாறு பார்த்துக்கொள்வார். இவர், புனிதர் அசிசியின் ஃபிரான்ஸிசிடம் பக்தியுள்ளவராய் இருந்தார்.
கி.பி. 1624ம் ஆண்டில் ஒருமுறை, ஃபிலிப்போ தமது பத்தொன்பது வயதில் ஒருவனுடன் சண்டையில் ஈடுபட நேரிட்டது. தமது எதிரிக்கு எதிராக ஆயுதம் எடுத்து சண்டையிட வேண்டியிருந்தது. இதனை பலபேர் பார்த்துக்கொண்டிருந்தனர். கூச்சலும் கிளர்ச்சிகளும் எழுந்தன. மக்கள் இவருக்கு “சிசிலியின் சிறந்த கத்தி” (The Finest Blade in Sicily) என்ற பட்டப்பெயர் இட்டனர். அம்மனிதனின் சண்டையிலிருந்து தப்புவதற்காக, இவர் “கப்புச்சின் ஃபிரான்சிஸ்கன்” (Capuchin Franciscans) சபையில் தஞ்சமடைய முயன்றார்.
துறவிகளுடன் அங்கே இருந்த காலத்தில் தமது கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தார். ஆத்திரமூட்டும் தமது கலவர குணத்திற்காக சுயபச்சாதாபப்பட்டு வருந்தினார். கப்புச்சின் சபையில் திருத்தொண்டராக சேர விண்ணப்பித்தார். கி.பி. 1632ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 13ம் நாளன்று, அவர் துறவற புகுநிலையினராக (Novitiate) இணைந்தார். ஃபிலிப்போவின் ஆன்மீக முயற்சிகள் மிகவும் கடினமானதாக இருந்தன. தினமும் ஏழு தடவையாவது அவர் தம்மைத்தாமே சாட்டை போன்றதொரு வாரினால் இரத்தம் சொட்டச் சொட்ட அடித்துக்கொள்வார். தினமும் மூன்று மணிநேரம் மட்டுமே ஒரு குறுகலான பலகையில் படுத்து உறங்குவார். தலைக்கு சிறு கட்டை ஒன்றினை வைத்துக்கொள்வார். கடும் நோன்பிருந்த அவர், ரொட்டியும் தண்ணீருமே அருந்தினார். இத்தகைய கடின உடல் உழைப்பும், உண்ணா நோன்பும், ஓய்வின்மையும், உணவுப்பழக்கங்களும், இவரை பின்னாட்களில் நோயில் அவதியுற வைத்தன. இவர் (Rheumatism) எனப்படும் கீழ்வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். வேதனையால் நாள்தோறும் அவதிப்பட்டார்.
பெர்னார்ட், அன்னை அர்ச்சிஷ்ட கன்னி மரியாளிடம் தீவிர பக்தி கொண்டிருந்தார். அவர் இறை அன்னையின் மீதிருந்த தமது பக்தியை பிறரிடமும் பரப்பினார். இவரது வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள், இறை அன்னை கன்னி மரியாள் குழந்தை இயேசுவுடன் இவருக்கு காட்சியளித்ததாகவும், குழந்தை இயேசுவை அவரது கைகளில் தந்ததாகவும் கூறுகின்றனர். கடவுளின் தாயான அதிதூய கன்னி மரியாள் இவரது மரண நாளை நான்கு மாதங்கள் முன்னதாகவே அறிவித்ததாகவும் கூறுகின்றனர். அன்னை முன்னறிவித்தபடியே பெர்னார்ட், கி.பி. 1667ம் ஆண்டு, ஜனவரி மாதம், 12ம் நாளன்று, “பலெர்மோ” (Palermo) என்ற இடத்தில் நித்திய வாழ்வில் தோழமை கொள்ள புனிதருள் மரித்தார். இவரது கல்லறையில் எண்ணற்ற அற்புதங்கள் இன்றளவும் நடக்கின்றன.
Comments are closed.