முதல் கிறிஸ்மஸ்

முதல் கிறிஸ்துமசைக் கொண்டாடியவர்கள் ஒரு ஏழைத் தச்சனும், அவரது மனைவியும்.
அவர்களுடைய சொந்த ஊர் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூர்.
அங்கேதான் அவர்களது வீடு இருந்தது.
ஆனால் அவர்கள் கிறிஸ்மசைக் கொண்டாடுவதற்காக சொந்த வீட்டை விட்டு விட்டு
யூதேயா நாட்டிலுள்ள பெத்லெகேம் என்ற ஊருக்குச் சென்றார்கள்.
அங்கு அவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை.
அவர்கள் விழாவை கொண்டாடியது யாருக்கோ சொந்தமான ஒரு மாட்டுத் தொழுவத்தில்.
அங்கு கிறிஸ்து பாலனுக்கு படுக்க கூட இடம் கிடைக்கவில்லை.
மாடுகளின் தீவனத் தொட்டியில் தான் மாதா இயேசு பாலனைக் கிடத்தியிருந்தாள்.
அவர்களுக்கு புது dress எதுவும் எடுக்கப்படவில்லை.
விருந்து எதுவும் தயாரிக்கப்படவில்லை.
அவர்களை பார்க்க வந்தவர்கள் அவர்களைப் போலவே ஏழைகளான ஆடு மேய்க்கும் இடையர்கள்.
ஆரவாரமில்லாமல் ஒரு ஏழை குடும்பம் கொண்டாடிய கிறிஸ்மசைத்தான் நாம் இப்போது ஆரவாரத்தோடும், பணக்காரத்தனத்தோடும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
பண வசதி இல்லாமையால் திருக்குடும்பம் கிறிஸ்மசை எளிமையாக கொண்டாடவில்லை.
உண்மையில் ஒரு ஏழைப் பெண்ணின் வயிற்றிலிருந்து பிறந்த இயேசு குழந்தை உலகத்திற்கே அதிபதியான இறைமகன்.
அனைத்தையும் படைத்த சர்வ வல்லவ கடவுள்.
நித்திய காலமாக திட்டம் போட்டே ஏழையாகப் பிறந்தார்.
அவர் நினைத்திருந்தால் ஒரு பெரிய அரச குடும்பத்தில் இளவரசனாக பிறந்து அகில உலகத்தையே அவரது பிறந்தநாளை அதிமிக
ஆடம்பரத்தோடு கொண்டாட செய்திருக்கலாம்.
ஆனால்
“ஏழைகளே பாக்கியவான்கள்” என்ற தனது போதனைக்கு முன்மாதிரிகையாக
ஏழையாகப் பிறந்தவரது விழாவை
அவரது போதனைக்கு எதிராக பணக்காரத் தனத்தோடு கொண்டாடுவது
“நாங்கள் உங்களது போதனைக்கு எதிரானவர்கள்” என்று அவரிடம் கூறுவதற்குச் சமம்.
குடிப்பதையே வெறுக்கும் ஒருவர் முன்னால் நாம் குடித்து விட்டு ஆட்டம் போட்டால் நம் மீது அவருக்கு மகிழ்ச்சி வருமா? எரிச்சல் வருமா?
ஏழ்மையின் காரணமாக கிழிந்த உடையை அணிந்திருப்பவர் முன் Tip top ஆக dress அணிந்து நின்று,
“என்னைப் பார், என் உடையைப் பார்” என்று சொன்னால் அவருக்கு நம் மீது என்ன வரும்?
நமக்கு முன் மாதிரிகை காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே ஏழையாக மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு பாலனுக்கு லட்சக்கணக்கில் செலவழித்து குடில் அமைத்தால் அவருக்கு நம் மீது என்ன வரும்?
பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்காக மனித உரு எடுத்த
குழந்தை இயேசு பிறந்த விழாவில் முக்கியத்துவம் பெறவேண்டியது மீட்பு சார்ந்த ஆன்மீகம் மட்டுமே,
ஆடம்பரமான கொண்டாட்டம் அல்ல.
நல்ல பாவசங்கீர்த்தனம், திருப்பலி, திருவிருந்து ஆகியவை மட்டுமே விழாவின் மையம்.
எளிமையான முறையில் ஏழைகளோடு கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடுவதையே இயேசு விரும்புகிறார்.
உடை இல்லாதவர்களுக்கு உடை,
உண்ண இல்லாதவர்களுக்கு உணவு,
கஷ்டப்படுபவர்களுக்கு ஆறுதல்
போன்ற பிறரன்பு செயல்களே குழந்தை இயேசுவுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கிறிஸ்மஸ் விழா மட்டுமல்ல தாய்த் திருச்சபை கொண்டாடும் எல்லா விழாக்களுமே ஆன்மீக வளர்ச்சி சம்பந்தப்பட்டவை.
நமது விழாக்களில் உலக ஆடம்பரம்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தால்
ஆன்மீகத்தை மறந்து விடுவோம்.
ஒரு கல்யாண வீட்டில் கொட்டு அடிக்க ஆரம்பித்தவுடனே, மாப்பிள்ளை தன்னை மறந்து எழுந்து கொட்டுப்பார்க்கப் போய்விட்டாராம்!
“ஏன் திருவிழா திருப்பலியின் போது உங்களை கோவிலில் காணவில்லை?”
“திருப்பலி முடிந்தவுடன் சப்பரம் தூக்க வேண்டும். நான் திருப்பலிக்கு வந்து விட்டால் சப்பரத்தை அலங்கரிப்பது யார்?”
“அப்போ நீங்கள் திருவிழா கொண்டாடுவது சப்பரத்தை அலங்கரிப்பதற்காக மட்டும்!”

Comments are closed.