திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு (டிசம்பர் 12)

I செப்பனியா 3: 14-17
II பிலிப்பியர் 4: 4-7
III லூக்கா 3: 10-18
“மகிழுங்கள்”
நிகழ்வு
அது ஓர் இருப்பூர்தி நிலையம் (Railway Station). ஒருநாள் காலை வேளையில், வேலை நிமித்தமாகப் பக்கத்து ஊருக்குச் செல்ல, பயணச்சீட்டு வாங்க அங்கு வந்த பெண்மணியிடம், அங்கிருந்த பயணச்சீட்டுகளைக் கொடுத்துக்கொண்டிருந்த பெரியவர், “அம்மா! நான் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்” என்றார்.
எதற்கு என்பதுபோல், பெண்மணி பெரியவரைப் பார்த்தபோது அவர், “அம்மா! ஒவ்வொருநாளும் நீங்கள் இங்கே பயணச்சீட்டு வாங்க வரும்போது, புன்னைகையோடு வருவதைப் பார்த்துவிட்டு, ஒருநாள் உங்களிடம், ‘அது எப்படி உங்களால் எப்போதும் புன்னகையோடு இருக்க முடிகிறது?’ என்று நான் கேட்டதற்கு, நீங்கள் உங்கள் கையில் இருந்த திருவிவிலியத்தைச் சுட்டிக்காட்டி, “என்னுடைய புன்னகைக்குக் காரணம், இந்தத் திருவிவிலியம்தான்!’ என்றீர்கள். இதன்பிறகு நான் ஒரு திருவிவிலியத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். இப்போது, என்னால் உங்களைப் போன்று மகிழ்ச்சியோடு புன்னகை பூக்க முடிகின்றது. அதனால்தான் நான் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன் என்று கூறினேன்” என்று முகத்தில் புன்னகை தவழக் கூறினார்.
ஆம், நாம் ஆண்டவருடைய வார்த்தையை வாசித்து, அவரோடு ஒன்றித்திருக்கும்போது, மகிழ்ச்சியோடு அல்லது புன்னகையோடு இருக்க முடியும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “மகிழுங்கள்” என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
ஆண்டவரோடு ஒன்றித்திருக்கும்போது மகிழலாம்
இன்றைய நவீன உலகில், மனிதர்கள் மகிழ்ச்சியைப் பணம், பொருள், புகழ் என எதிலெல்லாமோ தேடுகின்றார்கள். பணம் இருந்தால், பொருள் இருந்தால், புகழ் இருந்தால் மகிழ்ச்சியாக இருந்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டு மனிதர்கள் அவற்றிக்குப் பின்னால் செல்கின்றார்கள். உண்மை அதுவல்ல என்பதுதான் வரலாறு கற்பிக்கின்ற பாடம். 1957 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், அமெரிக்கர்களின் தனிமனித வருமானம் இரண்டு மடங்கானது; ஆனால், அந்தக் காலக்கட்டத்தில்தான் தற்கொலை மிகுதியாக இருந்தது. இதன்மூலம் ஒருவரிடம் இருக்கும் பணம், பொருள், புகழ் இன்ன பிறவற்றிற்கும், மகிழ்ச்சிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது. இயேசுகூட, “மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (லூக் 12:15) என்று இதையேதான் சொல்கின்றார்.
இந்த இடத்தில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சிந்தனையாளரும், கடவுள் மறுப்புக் கொள்கையைக் பின்பற்றி வந்தவருமான வால்டரைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். தன் வாழ்நாள் முழுவதும் கடவுள் இல்லை என்று சொல்லி வந்த இந்த வால்டர், சாவதற்கு முன்பாகச் சொன்ன வார்த்தைகள், ”நான் பிறவாமல் இருந்தால், நன்றாக இருந்திருக்கும்!” என்பதாகும்.
அப்படியானால், ஒருவரிடம் உள்ள பணமோ, பொருளோ, புகழோ அல்லது ஆண்டவரை விட்டுவிலகி இருப்பதோ மகிழ்ச்சியைத் தராது. மாறாக, ஆண்டவரோடு ஒன்றித்திருப்பதே மகிழ்ச்சியைத் தரும். இதைத்தான் பவுல், இன்றைய இரண்டாம் வாசகத்தில் “ஆண்டவரோடு ஒன்றித்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகின்றேன், மகிழுங்கள்” என்று கூறுகின்றார். ஆதலால், நாம் ஆண்டவரோடு ஒன்றித்திருந்தால் மட்டுமே மகிழ முடியும் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், அவரோடு ஒன்றித்திருக்க முயற்சி செய்வோம்.
இருப்பதை இல்லாதவரோடு பகிரும்போது மகிழலாம்
வாழ்வில் மகிழ்ந்திருக்க வேண்டும் எனில், ஆண்டவரோடு ஒன்றித்திருக்க வேண்டும் என்று பவுல் குறிப்பிடும் அதேவேளையில், நாம் எவ்வாறு ஆண்டவரோடு ஒன்றித்து மகிழலாம் என்பதற்கான தெளிவினை இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் தருகின்றார்.
யோர்தான் ஆற்றில் திருமுழுக்குக் கொடுத்துக்கொண்டிருந்த யோவானிடம் பலதரப்பட்ட மக்கள் வந்தார்கள். அவ்வாறு வந்தவர்களில் முதலாவதாக வந்தவர்கள், பொது மக்கள். இவர்களிடம் யோவான், இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும். அது உணவாக இருக்கலாம். உடையாக இருக்கலாம் என்கிறார். அடுத்ததாக அவரிடம் வருகின்ற வரிதண்டுபவர்களிடம், அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு மிகுதியாக எதையும் தண்டாதீர்கள்” என்கிறார். இதன்மூலம் யோவான் அவர்களிடம், பணத்திற்கு ஆசைப்படாதீர்கள் என்கிறார். இதை நாம் வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், அழிந்து போகும் செல்வத்தில் அல்ல, அழியாத செல்வமான ஆண்டவரில் பற்று வைத்து வாழுங்கள் என்று சொல்லலாம்.
மூன்றாவதாக யோவானிடம் படைவீரர்கள் வந்தார்கள். அவர்களிடம் அவர், “யார்மீதும் பொய்க்குற்றம் சுமத்தாதீர்கள்” என்கிறார். இன்றைக்குப் பலர் அடுத்தவர்மீது பொய்க்குற்றம் சுமத்தி, அவர்களிடமிருந்து இருப்பதைக் கவர்ந்திட வேண்டும் என்றே நினைக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் யார்மீதும் பொய்க்குற்றம் சுமத்தாதீர்கள் என்று யோவான் படைவீர்ர்களிடம் சொல்லும் வார்த்தைகள், அன்று மட்டுமல்ல இன்றும் பொருந்தும்.
இவ்வாறு யோவான், இருப்பவர் இல்லாதவரோடு பகிரவேண்டும்; பேராசை வேண்டாம்; பொய்க்குற்றம் சுமத்தவேண்டாம் என்று மக்களுக்குக் கற்பித்தார் எனில், அவர் தானாக எதையும் கற்பித்து விடவில்லை. தாம் பெற்றுக்கொண்ட கடவுளின் வாக்கையே கற்பித்தார் (லூக் 3:3). ஆகையால், யோவான் கற்பித்திருக்கும் பகிர்வு, ஆண்டவர்மீது பற்று, அடுத்திருப்பவரோடு நல்லறவு போன்ற படிப்பினைகளின்படி நாம் வாழ்கின்றபோது, ஆண்டவரோடு ஒன்றித்து மகிழலாம் என்பது உறுதி.
ஆண்டவர் நம் குற்றங்களை மன்னித்து, நம் நடுவில் இருப்பதால் மகிழலாம்
ஆண்டவரின் வார்த்தைகளின்படி நடந்து, அவரோடு ஒன்றித்திருந்தால் மகிழலாம் என்று இன்றைய நற்செய்தி மற்றும் இரண்டாவது வாசகங்கள் கூறும்போது, இன்றைய முதல் வாசகம், ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார். அதனால் மகிழுங்கள் என்கிறது.
கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு, வேற்று தெய்வங்களை வழிபட்டதால், பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்ட யூதா நாட்டினர், எல்லாமே முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் கடவுள் இறைவாக்கினர் செப்பனியா வழியாக, “ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்திவிட்டார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; ஆரவாரம் செய்; அகமகிழ்ந்து அக்களி” என்று நம்பிக்கைச் செய்தியைத் தருகின்றார். ஆம், கடவுள் நம் குற்றங்களை எல்லாம் மன்னித்து, நம் நடுவில் இருக்கின்றார் எனில், நாம் மகிழத்தானே வேண்டும்!
எனவே, நாம் நடுவில் இருக்கின்ற ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடித்து, அவரோடு ஒன்றித்து, அவர் தருகின்ற மகிழ்ச்சியைப் பெற்று வாழ்வோம்.
சிந்தனை
‘மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர் நம் இல்லத்திற்குள் வருவது என்பது, இருள் மண்டிக் கிடக்கும் நம் இல்லத்திற்குள் விளக்கோடு வருவதற்கு இணையானது’ என்பார் ஆர். எல்.ஸ்டீவன் என்ற அறிஞர். எனவே, நாம் ஆண்டவரோடு ஒன்றித்து மகிழ்வோம். அந்த மகிழ்ச்சியை மற்றவருக்கு வழங்குவோம். அதன் வழியாக, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.