மனித கண்ணோட்டங்களைத் தாண்டிய இயேசுவின் அரசு

மக்கள் இயேசுவை அரசராக்க முயன்றபோது, அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்றவர், அவர்கள் அவருக்கு மரணதண்டனை வழங்க பிலாத்துவிடம் விண்ணப்பித்தபோது, பிலாத்தின் முன், தன் அரசு இவ்வுலகைச் சார்ந்தது அல்ல என்று கூறி, அரசர் என்ற பதத்தை ஏற்றது குறித்து, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 21ம் தேதி, திருவழிபாட்டு பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட, ‘இயேசு கிறிஸ்து அரசர்’ பெருவிழாவையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றியபின், பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்குகையில் இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை.

தன்னுடைய அரசு இவ்வுலகைச் சார்ந்தது அல்ல என ஏற்கனவே கூறியுள்ள இயேசு, தான் பணிவிடை பெற அல்ல, மாறாக பணிவிடை புரியவே வந்துள்ளேன் என்பதை தெளிவுபடுத்தியதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதிகாரம், மற்றும் வல்லமையின் அடையாளங்களுடன் வராத இயேசு அறையப்பட்டிருந்த சிலுவையின் மீது வைக்கப்பட்ட பலகையில், அவர் யூதர்களின் அரசன் என எழுதி வைக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பிலாத்தின் முன் தண்டனைத் தீர்ப்புப் பெற காத்திருக்கும்போது, தன்னை அரசன் என ஏற்றுக்கொள்ளும் இயேசு, மக்கள் தன்னை அரசராக்க விரும்பியபோது, அங்கிருந்து விலகிச் சென்றதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் அரசு, மனிதகுல கண்ணோட்டங்களைத் தாண்டியது, மற்றும், அவரை மற்றவர்களைப்போல் அரசர் என நாம் கூறமுடிந்தாலும், அவர் மற்றவர்களுக்கான அரசர் என்பதே உண்மை என விளக்கமளித்தார்.

இவ்வுலகப் புகழையும் மகிமையையும் சேராதது தன் அரசு என்று இயேசு வெளிப்படையாகக் காட்டுவதைக் காணும் நாம், வாழ்வில் நாம் பெறும் கரவொலிகளில் மகிழ்கிறோமா, அல்லது பிறருக்கு ஆற்றும் பணியில் மகிழ்ச்சி காண்கிறோமா என்பது குறித்து ஆழமாக சிந்திப்போம் என்ற அழைப்பையும் ஒவ்வொருவருக்கும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுலக மகிமையைக் கண்டு இயேசு விலகி ஓடியது மட்டுமல்ல, தன்னைப் பின்பற்ற விரும்பியவர்களின் இதயங்களுக்கும் இவ்வுலக மகிமைகளிலிருந்து விலகியிருக்கும்படி விடுதலை வழங்கிதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசுவின் அரசு, விடுதலை வழங்கும் அரசேயன்றி, அடக்கியாளும் அரசல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார்.

‘உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்’ (யோவா 18:37), என பிலாத்தின் முன் இயேசு கூறியதையும், ‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ (யோவா 8:32) என உரைத்ததுள்ளதையும் எடுத்தியம்பிய திருத்தந்தை, நம் வெளிவேடத்தனங்களிலிருந்து நம்மை விடுவிக்கவே இயேசு வருகிறார் என்பதையும் விவரித்தார்.

இவ்வுலக அடிமைத்தளைகளிலிருந்து நம்மை விடுவித்து, நம் பாவநிலைகளை வெற்றிகொள்ள உதவும் இயேசுவை தினமும் நம் வாழ்வில் நாட, அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்ற வேண்டுதலுடன் தன் மூவேளை செபஉரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.