எழுந்து நிமிர்ந்து நில் – 36வது இளையோர் உலக நாள் கருத்து
கடவுளையும், துன்புறும் நம் அயலவரையும் சந்திப்பதற்கு இறைவேண்டல் ஒரு முக்கிய வழி என்பதை உணர்த்தும் சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 18, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பதிவாக வெளியிட்டார்.
“இறைவேண்டல் என்பது, முதன்முதலாக, கடவுளை சந்திப்பது மற்றும் அவருக்கு செவிமடுப்பதுமாகும். ஒவ்வொருநாள் வாழ்வின் பிரச்சனைகள், தடைகளாக மாறாமல், நமக்கு முன் இருக்கும் அயலவரைச் சந்திக்க இறைவன் விடுக்கும் விண்ணப்பங்களாக மாறுகின்றன. வாழ்வின் நெருக்கடிகள், நம்பிக்கையிலும், பிறரன்பிலும் நாம் வளர்வதற்கு வழங்கப்படும் வாய்ப்புக்களாக மாறுகின்றன” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்தார்.
மேலும், நவம்பர் 21, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் ‘கிறிஸ்து அனைத்துலக அரசர்’ திருநாள், இவ்வாண்டு, முதல் முறையாக, இளையோர் உலக நாளாகவும், மறைமாவட்ட அளவில் சிறப்பிக்கப்படுகிறது.
இளையோர் உலக நாளை உருவாக்கிய திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் விருப்பப்படி, 1986ம் ஆண்டு முதல் புனித வாரத்தின் முதல் நாளான குருத்தோலை ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டு வந்த இளையோர் உலக நாள், இவ்வாண்டு முதல், கிறிஸ்து அரசர் திருநாளன்று சிறப்பிக்கப்படும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சென்ற ஆண்டு அறிவித்தார்.
2020ம் ஆண்டு மறைமாவட்ட அளவில் சிறப்பிக்கப்பட்ட 35வது இளையோர் உலக நாளுக்கு, “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” (லூக்கா 7:14) என்ற மையக்கருத்தையும், இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 36வது இளையோர் உலக நாளுக்கு, “எழுந்து நிமிர்ந்து நில். நீ கண்டதுபற்றி சாட்சியாக விளங்க உன்னை ஏற்படுத்துகிறேன்” (காண்க. தி.ப. 26:16) என்ற மையக்கருத்தையும், திருத்தந்தை தெரிவு செய்திருந்தார்.
2022ம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் 37வது இளையோர் உலக நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், கோவிட் பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடிகளை மனதில் கொண்டு, இந்த இளையோர் நாள் நிகழ்வுகள், 2023ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
Comments are closed.