நவம்பர் 14 : நற்செய்தி வாசகம்

நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.
அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.
ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
மானிட மகன் கதவை நெருங்கி வந்துவிட்டார்”
பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் ஞாயிறு
I தானியேல் 12: 1-3
II எபிரேயர் 10: 11-14, 18
III மாற்கு 13: 24-32
“மானிட மகன் கதவை நெருங்கி வந்துவிட்டார்”
நிகழ்வு
“அம்மா! உங்களுக்கு இயேசுவின் இரண்டாம் வருகையில் நம்பிக்கை இருக்கிறதா? – இப்படியொரு கேள்வியைக் கேட்டுவிட்டுத் தன் அம்மாவின் பதிலுக்காகக் காத்திருந்தாள் பத்து வயது ஜெசி.
“இயேசு மீண்டும் வருவார் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை இருக்கின்றது. அது சரி, நீ ஏன் திடீரென்று என்னிடத்தில் இப்படியொரு கேள்வியைக் கேட்கின்றாய்?” என்று ஜெசியின் அம்மா அவளைப் பார்த்துக் கேட்டாள். “இன்றைய ‘ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில், இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி மறைக்கல்வி ஆசிரியர் கற்பித்தார். அதனால்தான் நான் இந்தக் கேள்வியை உங்களிடத்தில் கேட்கின்றேன்” என்று சொல்லிவிட்டு, ஜெசி தன் அம்மாவிடம், “இன்றைக்கு இயேசு வருவாரா?” என்றாள். “ஆமாம்” என்று தன் அம்மாவிடமிருந்து பதில் வந்தும், “இன்னும் சிறிது நேரத்தில் இயேசு வருவாரா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் ஜெசி.
அதற்கும் ஜெசியின் அம்மா, ‘ஆமாம்” என்றதும், “அப்படியானால், உடனே நீங்கள் என்னுடைய தலையை வாரி, எனக்குப் பொட்டு வைத்துப் பூச் சூடுவீர்களா?” என்றாள் ஜெசி. “ஏன்?” என்று ஜெசியின் அம்மா அவளிடம் கண்கள் விரியக் கேட்டபொழுது, ஜெசி மிகவும் தீர்க்கமான குரலில், “அப்பொழுதுதானே, இயேசு மீண்டுமாக வருகின்றபோது, அவரை எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்க முடியும்!” என்றாள்.
டான் ஹுசாங் (Don Hussong) என்ற எழுத்தாளர் சொல்லக்கூடிய இந்த நிகழ்வு, நாம் ஒவ்வொருவரும் இயேசு மீண்டுமாக வருகின்றபோது, அவரை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. பொதுக்காலத்தின் முப்பத்து மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய மானிடமகனுடைய வருகைக்காக நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்ற செய்தியை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
அமைதிக்கு முன்பு புயல்
‘புயலுக்குப் பின்னே அமைதி’ என்று நாம் சொல்லக் கேட்டிருப்போம். இதையே நாம் வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘அமைதிக்கு முன்பு புயல்’ என்று சொல்லலாம். ‘அமைதிக்கு முன்பு புயல்’ என்ற இந்தச் சொல்லாடலை இயேசுவின் இரண்டாம் வருகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். ஆம், அமைதி என்ற இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்பு, புயல் என்ற இதுவரை இருந்திராத துன்பக் காலம் வரும். அத்துன்பக் காலத்தில், இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வது போல், கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமாயிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.
வானில் தோன்றும் இந்த அடையாளங்கள் எல்லாம், ஒருவகையில் நமக்கு அச்சமூட்டுபவையாக, திகிலூட்டுபவையாக இருந்தாலும், இன்னொரு வகையில் இவையெல்லாம் இயேசுவின் இரண்டாம் வருகையை வெளிப்படுத்தும் அடையாளங்கள் ஆகும். ஆகையால், அமைதி என்ற இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்பாகப் புயல் என்ற துன்பங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியதைத் தவிர்க்க முடியாது.
கால்மனை ஆக்கப்படுவர்
மானிட மகனுடைய வருகைக்கு முன்பு இதுவரை இருந்திராத துன்பக் காலம் இருக்கும் என்று இன்றைய இறைவார்த்தை எடுத்துரைக்கும் அதே வேளையில், அவருடைய பகைவர் கால்மனை ஆக்கப்படுவர் என்ற மற்றொரு செய்தியையும் எடுத்துரைக்கின்றது.
‘பகைவர் கால்மனை ஆக்கப்படுவர்’ என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்தாளப்படுகின்ற வார்த்தைகள், திருப்பாடல் 110:1 இல் இடம்பெறுகின்றன. மெசியாவைக் குறித்துத் தாவீது மன்னர் பாடும் இப்பாடல், மெசியாவின் பகைவர்கள் அனைவரும் வீழ்த்தப்பட்டுக் கால்மனையாக்கப்படுவர் என்ற செய்தியைத் தருகின்றது. இங்கே குறிப்பிடப்படும் மானிட மகனின் பகைவர்கள் என்பவர்களை அவர்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள், அவரைப் புறக்கணித்தவர்கள், அவருடைய விழுமியங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் ஆகியோரோடு நாம் தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்ளலாம். இத்தகையயோர் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவர் என்பது உறுதி.
வாழ்வின் நூலில் பெயர் பொறிக்கப்பட்டோர் மீட்கப்படுவர்
மானிட மகனுடைய வருகைக்கு முன்பு அவருடைய பகைவர் கால்மனை ஆக்கப்படுவர் எனில், அவருடைய வருகையின்போது அவர்மீது நம்பிக்கை கொண்டோர் அல்லது வாழ்வின் நூலில் இடம்பெற்றோர் மீட்கப்படுவர். இதைத் தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.
வாழ்வின் நூலைப் பற்றிய குறிப்பு திருவெளிப்பாட்டில் இடம்பெறுகின்றது. இந்நூலில் இறந்தோரின் செயல்கள் எழுதப்பட்டிருந்ததால், அவர்களுக்கு அவர்களுடைய செயல்களுக்கேற்பத் தீர்ப்பு வழங்கப்பட்டது என்று அங்கே சொல்லப்படுகின்றது (திவெ 20:12). இன்றைய முதல் வாசகம், வாழ்வோரின் நூலில் பெயர் பொறிக்கப்படுவர் மீட்கப்படுவர் என்றும், அந்த வாழ்வின் நூலில் இடம்பெறும் ஞானிகளும், பலரை நல்வழிக்குக் கொண்டுவந்தோரும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசுவர் என்கிறது.
வாழ்வின் நூலில் இடம்பெறும் ‘ஞானிகளை’ ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு அவர் வழியில் நடந்தவர்களோடு ஒப்பிடலாம். இவர்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, நல்லன செய்ததால் வாழ்வு பெறுகின்றார்கள் (யோவா 5:29). ஆகையால், நாம் வாழ்வின் நூலில் இடம்பெறுவதற்கும், அதனால் வாழ்வு பெறுவதற்கும் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ்வது மிகவும் இன்றியமையாதது.
இங்கே நாம் ஒரு முக்கியமான செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும். அது என்னவெனில், மானிடமகன் வரும் நாளையும் வேளையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்பதுதான். இன்றைக்குப் பலர் ‘மானிட மகன் இதோ வந்துவிட்டார்’, அதோ வந்துவிட்டார்’ என்று சொல்லி மக்களைத் திசை திருப்பிக் கொண்டிருக்கின்றார்கள். பவுல் எபேசு நகர் மூப்பர்களிடம் சொன்னதுபோன்று, கொடிய ஓநாய்கள் போன்ற போலி இறைவாக்கினர்கள் இறைமக்கள் நடுவில் நுழைந்து மந்தையைச் சிதறடிக்கின்றனர்; மந்தையைக் கடுமையாகத் தாக்குகின்றனர் (திப 20:29). இப்போலி இறைவாக்கினர்களிடமிருந்து இறைமக்களைக் காத்து, அவர்களை நல்வழிக்கு இட்டுச் சென்று, நாமும் நல்வழியில் நடப்பது அவசியமாக இருக்கின்றது. இவ்வாறு செய்தால், நாம் வாழ்வின் நூலில் இடம்பெற்று, முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசுவோம் என்பது உறுதி.
ஆதலால், நாம் மானிடமகன்மீது ஆழமான நம்பிக்கை வைத்து, நாமும் நல்வழியில் நடந்து, மற்றவரையும் நல்வழிப்படுத்தி, என்றும் ஒளிவீசும் விண்மீன்கள் ஆவோம்.
சிந்தனை
‘உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாப்பாயாக’ (1 திமொ 6:20) என்று பவுல் திமொத்தேயுக்குக் கூறுவார். எனவே, நாம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை நல்வழிக்குக் கொண்டு வந்து, நாமும் ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கையின் மூலம் நல்வழியில் நடந்து, வாழ்வின் நூலில் இடம்பெறுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.