வாசக மறையுரை (நவம்பர் 13)

பொதுக்காலம் முப்பத்து இரண்டாம் வாரம்
சனிக்கிழமை
I சாலமோனின் ஞானம் 18: 14-16, 19: 6-9
II லூக்கா 18: 1-8
“மனந்தளராமல் மன்றாடுவோம்”
மீண்டும் மீண்டும் கோயிலுக்குச் சென்ற இளைஞன்:
இளைஞன் ஒருவன் அதிகாலையில் விழித்தெழுந்து, திருப்பலியில் பங்கேற்பதற்காகப் பங்குக்கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றான். அவன் சென்ற பாதையில் இருள் மண்டிக்கிடந்ததால், மிகவும் கவனமாகவே அவன் நடந்து சென்றான். அப்படியிருந்தும் நடுவில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் அவன் இடறி விழுந்து, தான் அணிந்திருந்த உடைகளை அழுக்காக்கிக் கொண்டான். இதனால் அவன் வீட்டிற்குத் திரும்பி வந்து, வேறோர் உடையை உடுத்திக்கொண்டு, பங்குக் கோயிலுக்கு விரைந்து சென்றான். இந்தமுறை அவன் வேறோர் இடத்தில் தடுக்கி விழுந்து, தன் உடைகளை அழுக்காக்கிக் கொண்டான்.
தன்னுடைய உடை இரண்டாம் முறையும் அழுக்காகிவிட்டாதே என்று அந்த இளைஞன் சோர்ந்துவிடவில்லை. மாறாகத் தன்னுடைய வீட்டிற்கு வேகமாக ஓடிவந்து, வேறோர் உடையை உடுத்திக்கொண்டு, பங்குக்கோயிலுக்கு விரைந்து சென்றான். இவ்வாறு செல்கையில், வழியில் ஒருவர் விளக்கோடு நின்றுகொண்டிருந்தார். அவர் அந்த இளைஞனிடம், “தம்பி! நீ பங்குக் கோயிலுக்குத்தானே செல்கிறாய். நானும் உன்னோடு வருகின்றேன்” என்று சொல்லிக்கொண்டு, விளக்கின் வெளிச்சத்தில் அவனை வழிநடத்திச் சென்றார்.
பங்குக்கோயில் வந்தும், அவர் உள்ளே செல்லாமல், வெளியே நின்றார். “நீங்கள் ஏன் கோயிலுக்குள் வராமல் வெளியே நிற்கிறீர்கள், உள்ளே வாருங்கள்” என்று இளைஞன் அந்த மனிதரிடம் சொன்னதற்கு, அவர், “என்னால் கோயிலுக்குள் வர முடியாது” என்று பிடிவாதமாய் இருந்தார். “உங்களால் ஏன் கோயிலுக்குள் வரமுடியாது?” என்று இளைஞன் அவரிடம் கேட்டதற்கு, “ஏனென்றால், நான் சாத்தான்” என்றார் அவர்.
இளைஞன் ஒன்றும் புரியாமல் அவரிடம், “சாத்தான் என்றால் கெடுதல்தானே செய்யும். நீங்கள், நான் கோயிலுக்கு வருவதற்கு உதவியிருக்கின்றீர்களே! அது எப்படி?” என்றான். அதற்கு வழிபோக்கர் உருவில் இருந்த சாத்தான் அவனிடம், “நீ பங்குக் கோயிலுக்கு ஆர்வத்தோடு திருப்பலிக்கு வரும்போது உன்னை முதன்முறை இடறி விழச் செய்தவன் நான்தான்; ஆனால், நீ வீட்டிற்குச் சென்று அப்படியே இருந்துவிடாமல், திருப்பலி காண்பதற்காக மீண்டும் திரும்பி வந்தாய். இதனால் கடவுள் உன்னுடைய பாவங்களை மன்னித்தார். மீண்டுமாக நான் உன்னை இடறி விழச் செய்தேன். அப்பொழுதும் நீ வீட்டிலேயே இருந்து விடாமல், திருப்பலி காண்பதற்காகத் திரும்பி வந்தாய். இதனால் கடவுள் உன்னுடைய வீட்டாருடைய பாவத்தையெல்லாம் மன்னித்தார். மூன்றாம் முறையாக உன்னை நான் இடறி விழச் செய்து, நீ கோயிலுக்குத் திரும்பி வந்துவிட்டால், கடவுள் இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களுடைய பாவங்களையும் மன்னித்துவிடுவார் என்பதால்தான், நீ இடறி விழாமல் இருக்க, விளக்கோடு உன்முன் நான் வந்துநின்று, உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தேன்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாக மறைந்தது.
ஆம், மனந்தளராமல் விடாமுயற்சியோடு எந்தவொரு செயலைச் செய்தாலும் அதில் வெற்றி காண்போம் என்பதையே இந்தக் கதையும், இன்றைய இறைவார்த்தையும் நமக்கு உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு, மக்களுக்குப் போதிக்கின்றபோது மிகப்பெரிய உண்மைகளை, சாதாரண உவமைகள் மூலம் விளக்கிச் சொன்னார். தனது போதனைகளில் மூன்றில் ஒரு பகுதியை உவமையாகவே அமைத்துக்கொண்ட இயேசு, அந்த உவமைகளின் மூலம் மிக அற்புதமான செய்திகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்கிற உண்மையை விளக்குவதற்காக, இயேசு இன்றைய நற்செய்தியில் நேர்மையற்ற நடுவர், கைம்பெண் உவமையைப் பயன்படுத்துகின்றார்.
நடுவரோ கடவுளுக்கு அஞ்சாதவர்; மக்களையும் மதிக்காதவர். அப்படிப்பட்டவரிடம் எந்தவொரு துணையும் இல்லாத கைம்பெண் போராடி, தனக்கு நீதி வழங்க வைக்கின்றார். இயேசு இந்த உவமையைச் சொல்லிவிட்டு, நேர்மையற்ற நடுவரே ஆதரவற்ற கைம்பெண்ணுக்கு நீதி வழங்கும்போது, இரக்கமும் அன்பும் கொண்ட கடவுள் தன் மக்கள் தன்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குச் செவிசாயாமல் போவாரா, நிச்சயம் செவி சாய்ப்பார் என்கிறார்.
ஆகையால், இத்தகைய இரக்கமும் அன்பும் கொண்ட கடவுளிடம் மனந்தளராது மன்றாடி அவரது ஆசியைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
 கடவுள் நமது வேண்டுதலுக்குக் காலம் தாழ்த்தலாம்; ஆனால், நிச்சயம் அவர் நமது வேண்டுதலுக்கு மறுமொழி கூறுவார்.
 இறைவேண்டலே ஆற்றலின் ஊற்று.
 விடாமுயற்சியுடன் கூடிய மன்றாட்டு, நிச்சயம் விண்ணை எட்டும்
இறைவாக்கு:
‘இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்’ (1 தெச 5:18) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இறைவிடாது இறைவனிடம் மன்றாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.