வாசக மறையுரை (அக்டோபர் 22)

பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் வெள்ளிக்கிழமை
திருப்பாடல் 119: 66,68, 76,77, 93,94 (68b)
“நீர் நல்லவர்; நன்மையே செய்பவர்”
ஆண்டவர் நல்லவர்:
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஜான், திடீரெனத் தன் வேலையை இழந்து நின்றபோது, “ஆண்டவர் நல்லவர்” என்று அவன் சொன்னது, அவனுக்கு அறிமுகமான எல்லாருக்கும் வியப்பைத் தந்தது. அதன்பிறகு அவன் தன் தந்தையை விபத்தில் பறிகொடுத்தபோதும், தன்னிடம் இருந்த பணப்பையைத் தவறவிட்டபோதும், “ஆண்டவர் நல்லவர்” என்று சொன்னது, அவனுக்கு அறிமுகமானவர்களை, “இவனுக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?” என்று பேச வைத்தது.
ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. ஜான் தன்னுடைய வாழ்வில் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தான். அப்பொழுதெல்லாம் அவன், “ஆண்டவர் நல்லவர்” என்று சொல்வதற்கு மறக்கவே இல்லை. ஒருநாள் அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவனுடைய வீட்டில் இருந்தவர்கள் அவனை மறுத்துவமனைக்குக் கொண்டு சென்று, பரிசோதித்துப் பார்த்தபோதுதான், அவனுக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. இச்செய்தியை அறிந்ததும் ஜானின் குடும்பத்தில் இருந்த எல்லாரும் அதிர்ந்தார்கள்; அப்பொழுதுகூட ஜான் வழக்கம்போல், “ஆண்டவர் நல்லவர்” என்றே சொன்னான்.
இதற்கு நடுவில் செய்தியறிந்த ஜானின் நெருங்கிய நண்பர் ஒருவர் அவனைப் பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு வந்தார். வந்தவர் ஓரிரு நாள்கள் அவனோடு தங்கியிருந்தார். அப்பொழுது அவர் கவனித்தது, “ஆண்டவர் நல்லவர்” என்று ஜான் சொன்னது.
“புற்றுநோய் வந்து, உன் வாழ்நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எப்படி ஆண்டவர் நல்லவராக இருக்க முடியும்?” என்று ஜானின் நண்பர் தன் குரலை உயர்த்திக் கேட்டார். அதற்கு ஜான் அவரிடம், “இத்தனை ஆண்டுகள் நான் இந்த மண்ணுலகில் வாழ்ந்து, ஆண்டவர் எத்துணை நல்லவர் என்பதை உணர்ந்துகொண்டேன்; முதன்முறையாக, ஆண்டவர் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவரை முகமுகமாகக் காணும் வாய்ப்பினைப் பெறப்போகிறேன்! அதனால்தான் ஆண்டவர் நல்லவர் எனச் சொல்கிறேன்” என்று நிதானமாகப் பதிலளித்தான்.
தன்னுடைய வாழ்வின் இன்பமான நேரங்களில் மட்டுமல்லாமல், துன்பமான நேரங்களிலும், “ஆண்டவர் நல்லவர்” என்று ஜான் சொல்லிவந்தது, அவன் ஆண்டவரைப் பற்றிப் பெற்றிருந்த அனுபவம் எத்துணை உயர்ந்தது என்று நம்மை வியக்க வைக்கின்றது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “ஆண்டவர் நல்லவர்! நன்மையே செய்பவர்” என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
“நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்ட செல்வரான இளைஞரிடம், இயேசு, “நல்லவர் ஒருவரே” (மத் 19:16-17) என்பார். ஆம், இயேசு சொல்வதுபோல், ஆண்டவராகிய கடவுளைத் தவிர நல்லவர் யாரும் கிடையாது. கடவுள் ஏன் நல்லவராக இருக்கிறார் எனில், இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் வருவதுபோல், அவர் நன்மையே செய்கின்றார்.
மனிதர்கள் நன்மை செய்யலாம்; ஆனால், எப்போதும் அவர்களால் நன்மை செய்ய முடியாது. ஆண்டவர் ஒருவரால் மட்டுமே எப்போதும் நன்மை செய்ய முடியும். இன்னும் சொல்லப்போனால், நம் காலடிக்கு ஒளியாய் இருக்கும் கடவுளின் வார்த்தைகளை நாம் கடைப்பிடித்து வாழ்ந்தோமெனில், அவர் நமக்கு நன்மையே செய்வார். ஆதலால், நல்லவராம் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து, அவரது நன்மைகளை நாம் பெறுவோம்.
சிந்தனைக்கு:
 நன்மை தீமை, வாழ்வு சாவு, வறுமை வளமை ஆகிய அனைத்தும் ஆண்டவரிடமிருந்தே வருகின்றன (சீஞா 11:14).
 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் (திபா 34:8).
 கடவுளே நீர் நல்லவர்; எனவே, ஒடுக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்தீர் (திபா 68:10).
இறைவாக்கு:
‘ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்’ (புல 3:25) என்கிறது புலம்பல் நூல். ஆகையால், நன்மையே உருவான ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, அவருக்கு உகந்ததை நாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.